மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சென்னை ராஜாஜி மண்டபம் வந்தார். அப்போது கலைஞரின் துணைவியார் ராசாத்தி அம்மாள், மகன் மு.கஸ்டாலின், மகள் கனிமொழியை சந்தித்து ஆறுதல் கூறினார்.
கருணாநிதியின் மரணச் செய்தி வெளியான நேற்றே அவருக்குப் புகழாரம் சூட்டி தன் ட்விட்டர் பக்கம் மூலம் மோடி வெளியிட்ட இரங்கல் செய்திகளின் தொகுப்பு…
“கலைஞர் கருணாநிதியின் மறைவு மிகுந்த துயரை அளிக்கிறது. பாரதத்தின் மகத்தான தலைவர்களில் முதன்மையானவர் கலைஞர். ஏழை எளியோரின் மேம்பாட்டிற்காக பாடுபட்ட அவர் மக்கள் செல்வாக்கு மிக்கவர். ஒப்புயர்வற்ற சிந்தனையாளர். சிறந்த எழுத்தாளர்.
தேச முன்னேற்றத்தோடு பிராந்திய பிரச்சனைகளை தீர்க்கவும் அரும்பாடுபட்ட தலைவர் கலைஞர் கருணாநிதி. தமிழர்கள் வாழ்வு மேம்படுவதையே இலக்காக கொண்டவர். எதிலும் தமிழகம் முதன்மை பெறுவதை உறுதிசெய்தவர்.
கலைஞர் கருணாநிதியோடு பல சந்தர்ப்பங்களில் உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தன. சமூக நீதி நிலைபெறும் வகையில் மிகச்சிறந்த கொள்கைகளை வகுத்த மேதைமை கொண்டவர் அவர்.
சனநாயக மாண்புகள் நிலைக்கும் வகையில் நெருக்கடி நிலையை துணிவோடு எதிர்த்து போர்க்குரல் எழுப்பியதற்காக அவர் என்றும் சரித்திரத்தில் உயிர்த்திருப்பார்.
இந்த துயர்மிகுந்த வேளையில் அந்த உயர்ந்த தலைவரின் குடும்பத்தாருக்கும் எண்ணிலடங்கா தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாரதத்திற்கும் தமிழகத்திற்கும் கலைஞரின் மறைவு பேரிழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்..!”
இன்று நேரில் அஞ்சலி செலுத்தியபின் பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் செய்தி…
“தன்னிகரற்ற தலைவரும், பழுத்த நிர்வாகியும், மக்கள் நலனுக்காகவும் சமூக நீதிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த தலைவருக்கு சென்னையில் அஞ்சலி செலுத்தினேன். கலைஞர் கருணாநிதியால் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்ட கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும் இதயத்திலும் அவர் வாழ்வார்..!”