மருத்துவ உலகம் மெல்ல மெல்ல மாபியாக்களின் கைகளில் போய்க்கொண்டிருக்கிறது என்ற கூற்று இப்போது பரவலாகவே பொதுமக்களால் விவாதிக்கப்படுகிறது. அதை மெய்ப்படுத்துவதைப் போலவே அங்கங்கே வானளாவ உயர்ந்து நட்சத்திர விடுதிகள் போல் தொற்றமளிக்கும் தனியார் மருத்துவமனைகளும் நம்மை மகிழ்விப்பதற்கு பதிலாக பயத்தையே தோற்றுவிக்கின்றன.
இந்நிலையில் அதிர்ச்சியளிக்ககூடிய மருத்துவ உலகின் ஒரு விஷயம் தொட்டுக் கதை சொல்லியிருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் எஸ்.ஏ.பாஸ்கரன்.
‘மெய்’ என்றால் தமிழில் ‘உடல்’ எனவும், ‘உண்மை’ என்றும் இரண்டு பொருள்கள் உள்ளன. இந்த இரண்டையும் ஒன்று சேர்த்து உடல் உறுப்புகள் தொடர்பான மருத்துவ மாபியாக்களின் உண்மைகளை வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் அவர். அவருக்கு வந்தனங்கள்..!
வெளிநாட்டிலிருந்து மருத்துவம் தொடர்பான ஒரு கசப்பான அனுபவத்துடன் சென்னை வருகிறார் அமெரிக்காவாழ் நாயகன் விக்கி சுந்தரம். வந்த இடத்திலும் அவரை அமைதியாக இருக்க விடாமல் துரத்துகிறது அதே மருத்துவத்துறை அநியாயம் ஒன்று.
மனித உடல் உறுப்புகளுக்காக ஒரு தனியார் மருத்துவமனை உரிமையாளரும், மருத்துவரும் இணைந்து பலரைக் கடத்தி உடல் உறுப்புகளுக்காக் கொலை செய்கிறார்கள். அதைக் கண்டுபிடித்துவிடும் விக்கி சுந்தரம் சந்தித்த விளைவுகள் என்ன என்பது கதை.
‘சூப்பர் மேன்’, ‘அவெஞ்சர்ஸ்’ போன்ற படங்களில் நடிக்கக்கூடிய சூப்பர் ஹீரோ தோற்றம் விக்கி சுந்தரத்துக்கு. படத்தில் வருவதைப் போலவே நிஜத்திலும் அமெரிக்கா வாழ் தமிழர். தமிழராக இருப்பதால் தமிழிலேயே நடிக்க ஆசைப்பட்டு இதில் நடித்திருப்பதைப் பாராட்டியே ஆக வேண்டும்.
தமிழைத் தவறில்லாமல் பேசி வேண்டிய நடிப்பைக் கொடுத்து ஒரு நடிகராக அடையாளம் தெரிந்திருக்கிறார் விக்கி என்றாலும், ஒரு ஆங்கிலப்பட ஹீரோ தமிழில் நடிப்பதைப் போன்ற அனுபவமே கிடைக்கப்பெறுகிறோம் நாம்.
கொடுக்கும் எந்த வேடத்துக்குள்ளும் தன்னை எளிதாகப் பொருத்திக்கொள்ளும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இதிலும் அப்படியே.
காவல்துறை ஆய்வாளராக வரும் கிஷோர், உதவி ஆய்வாளர் அஜய்கோஷ் தலைமைக்காவலர் ஈ.ராம்தாஸ் ஆகியோர் சிறப்பாக நடித்து படத்துக்குப் பலம் சேர்க்கிறார்கள்..
ஐந்தாயிரம் கொடுத்தால் 50,000 க்கு நடிக்கும் சார்லிக்கு இதில் ஐந்து லட்சம் கொடுத்து விட்டார்கள் போலிருக்கிறது. விலையில்லா நடிப்பு சார்லியுடையது. விக்கிக்கு அடைக்கலம் தரும் ஜார்ஜ் ரசிக்க வைக்கிறார்.
வி என் மோகன் ஒளிப்பதிவு பளிச்சென்று இருக்கிறது, பிரீத்தி மோகன் படத்தொகுப்பில் வேகம் அதிகம். பிரித்வி குமார் இப்படத்திற்கு இசையில் பாடல்கள் பெரிதாக இல்லையென்றாலும் பின்னணி இசையில் கவனிக்க வைத்திருக்கிறார்.
ஆய்வாளர் கிஷோர் சம்பந்தப்பட்ட திருப்பம் எதிர்பாராதது. அவரது நிலையில் யார் இருந்தாலும் அதைத் தாங்குவது கடினம்.
மெய் – உங்கள் உடல் உறுப்புகள் ஜாக்கிரதை..!