ஹாலிவுட் படங்களைப் போல் சீக்ரெட் ஏஜென்ட் என்று சொல்லப்படும் ரகசிய உளவாளிகளின் கதைகள் தமிழில் குறைவு.
அந்தக் குறையைப் போக்குவது மட்டுமின்றி விஜய் ஆண்டனியை ஒரு முழு ஆக்க்ஷன் ஹீரோவாக மாற்றி விட முடிவெடுத்துக் களம் இறங்கி இருக்கிறார் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன்.
தலைப்புக்கான பொருள் தேடி எல்லாம் நம்மை நிறைய சோதிக்காமல் முதல் வரிக் கதையிலேயே விஜய் ஆண்டனிக்கு ஏன் மழை பிடிக்காமல் போகிறது என்று உடைத்து விடுகிறார் இயக்குனர்.
சீக்ரெட் ஏஜென்ட்டான விஜய் ஆண்டனி, தன் காட் ஃபாதர் உளவாளியான சரத்குமாரின் தங்கையைக் காதலித்து மணக்கிறார்.
அத்துடன் போதை மருந்துகளைப் பயன்படுத்திப் பெண்களைச் சீரழிக்கும் உள்துறை அமைச்சரின் மகனை அவர் கொல்ல அதன் விளைவாக ஒரு மழை நாளில் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காதல் மனைவியை இழக்கும் அவரும் இறந்ததாக நம்ப (வைக்க)ப்படுகிறார்.
ஆனால் உண்மையில் அப்படி உலகை நம்ப வைத்து விஜய் ஆண்டனியைக் காப்பாற்றி அந்தமானில் ரகசியமாக வைக்கிறார் சரத்குமார். அதன் காரணம் மீண்டும் அவர் உயிருக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்பதுதான்.
அங்கே விஜய் ஆண்டனி புது வாழ்க்கையை ஆரம்பிக்க அங்கே கிடைக்கும் புது உறவுகளும் அவர்களுக்கு நேரும் சிக்கலும் அவரை மீண்டும் ஆக்ஷன் அவதாரம் எடுக்க வைக்க… அதன் விளைவாக அவர் அந்தமானில் இருப்பது மேலிடத்துக்குத் தெரிய வர… தொடர்ந்து என்ன ஆனது என்பது மீதிக்கதை.
விஜய் ஆண்டனிக்கு பேச்சு வருமா என்று நம்மை நினைக்க வைக்கும் விதத்தில் மௌனமான… அமைதியான அறிமுகத்தைக் கொடுத்துவிட்டு இன்டர்வெல்லுக்கு சற்று முன்புதான் அவரை ஆக்ஷனுக்குள் தள்ளி விடுகிறார் விஜய் மில்டன்.
ஆனால் அதுவரை காத்திருந்தது வீண் போகாமல் அமைந்த அந்த சண்டைக் காட்சி அதிரி புதிரியாக அதிர வைக்கிறது. இதற்காகத்தான் இவ்வளவு நேரம் காத்திருந்தேன் என்பது போல விஜய் ஆண்டனியும் அமளி துமளிப் படுத்தியிருக்கிறார்.
எந்த உயிரும் துன்பப்பட்டால் அதை காணச் சகியாதவர் என்பதை மழையில் சிக்கிய ஒரு நாய்க்குட்டியை விஜய் ஆண்டனி காப்பாற்றுவதை வைத்து நமக்கு உணர்த்தி விடுகிறார் இயக்குனர். அந்த நாய்க்குட்டியை மீண்டும் காக்க நேர்வதிலிருந்து அவருக்கு மழை பிடித்துப் போகிறது என்பது வேறு விஷயம்.
கதைக்கான களத்துக்கு புதுப்புது லொகேஷன்களைத் தேடிப்பிடித்து படமாக்குவது இயக்குனர் விஜய் மில்டனின் தனி பாணி. அந்த வகையில் புதிய களம், புதிய அனுபவம் என்று இதில் அவர் பயணப்பட்டு இருக்கும் அந்தமான் லொகேஷன் அப்படி ஒரு அற்புதமான அழகைத் தந்திருக்கிறது.
ஏரியல் ஷாட்டில் கடலுக்கு நடுவே இருக்கும் அந்தமான் கோட்டைக்கு கப்பல் வந்து சேரும் காட்சி அபாரத் தொடக்கம்.
உண்மையிலேயே அந்தமான் அழகா அல்லது அவரது ஒளிப்பதிவில் அந்தமான் தங்கமானாக ஜொலிக்கிறதா என்பது தெரியவில்லை. காட்சிக்குக் காட்சி தன் ஒளிப்பதிவில் கண்காட்சியே நிகழ்த்தியிருக்கிறார் விஜய் மில்டன்.
உளவாளிகளின் தலைவராக சத்யராஜ் வரும் காட்சிகளில் அவரது இருப்பிடம் ஜேம்ஸ்பாண்ட் படங்களைப் போல் அப்படி ஒரு வனப்பு.
ஆனால் சத்யராஜ் திறமைக்கு அதற்கேற்ற வாய்ப்பு இல்லாமல் சிறிய அல்லது சிறப்புப் பாத்திரமாக அமைந்து போயிருக்கிறது.
கட்டளையைக் கச்சிதமாக நிறைவேற்றும் சரத்குமாருக்கு கடைசியாக சத்யராஜ் இடும் கட்டளையும் அதை அவர் நிறைவேற்ற முடிவெடுப்பதும் நமக்கு மிகப்பெரிய ஷாக்கைக் கொடுக்கிறது.
விஜய் ஆண்டனியைப் பழிதீர்க்க காத்திருக்கும் தமிழக வில்லன் அமைச்சர் வி.எல்.அழகப்பனுக்கு விஜய் ஆண்டனியை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. (அடுத்த பார்ட்டுக்கு அதை ஒத்தி வைத்தார்களோ..?)
ஆனால் அந்தமானில் அதிரடி வில்லனாக வரும் டாலி தனஞ்செயா அதிக அளவில் கவனிக்க வைத்திருக்கிறார். யாரை கொல்லப் போகிறாரோ அவர்களை மரியாதையாக நடத்தி காபியெல்லாம் கொடுத்து உபசரித்து அமைதியான முறையில் கொல்லும் அந்த வில்லத்தனம் ரத்தம் பார்க்காத பயங்கரம்.
அதேபோல் தனஞ்செயாவின் முக்கிய ஆலோசகராக வரும் இயக்குனர் ரமணாவின் பாத்திரமும் புதிதாக இருக்கிறது. ரமணாவுக்கு இருக்கும் குரல் பிரச்சனையை அப்படியே படத்திலும் பயன்படுத்தி இருப்பது இயக்குனரின் வித்தியாசமான சிந்தனை.
படத்தின் நாயகி மெகா அழகி மேகா ஆகாஷ். ஆனால் அவர் நாயகன் விஜய் ஆண்டனிக்கு நாயகியாகவில்லை. வில்லன் ஆட்கள் வந்து அடித்து துவைத்து விட்டுப் போனாலும் சிறு கீறல் மட்டும் விழுந்த மெழுகு பொம்மை போல மேகா தெரிவது மெகா போங்கு.
ஆனால் மேகாவின் இருப்பிடமும் ஒரு நந்தவனம் போல அழகியல் ததும்பி நிற்கிறது. மேகாவின் சூப்பர் சிங்கர் தங்கையின் சுறு சுறுப்பு கவர்கிறது.
வில்லன் தனஞ்செயாவையே மடக்கி லொள்ளு பண்ணும் காவல் அதிகாரி முரளி சர்மா ஏதோ வித்தியாசமாக கலக்கபோகிறார் என்று எதிர்பார்க்கிறோம். “டாலிக்கு எதிரா ஒருத்தர் கேஸ் கொடுக்கட்டும்… பிடித்து மாட்டி விடுகிறேன்..!” என்று கர்ஜிக்கும் அவருக்கு அடுத்த காட்சியிலேயே மேகா ஆகாஷ் வழியாக தனஞ்செயா மீது கேஸ் கிடைத்தும் அதைக் கவனிக்காமல் போவது கோட்டை விட்ட ஓட்டை.
விஜய் ஆண்டனியின் செவிலித்தாய் போல வரும் அந்தமான் சரண்யா பொன்வண்ணனு ம், அவர் மகன் பிரித்வி அம்பாரும் அதிகமாகக் கவர்கிறார்கள். அதிலும் பிரித்திவின் துள்ளல் டாப் ரகம்.
விஜய் ஆண்டனி மற்றும் ராய் ஆகியோரின் இசையில் பாடல்கள் ஹிட்டடிக்கின்றன.. பின்னணி இசைத்திருப்பவர்கள் பெரிய வேலை பார்த்திருக்கிறார்கள்.
விஜய் மில்டனின் ஒளிப்பதிவில் ஹாலிவுட் தரம், வசனங்கள் மட்டும் ஆங்கிலத்தில் இருந்தால் இது ஒரு ஹாலிவுட் படமாகவே இருந்திருக்கும். பிரவீன் கே.எல்-இன் படத்தொகுப்பும் அந்த அனுபவத்துக்கு உறுதுணை புரிந்திருக்கிறது
படத்தின் அழகியலுக்காகவும் ஆக்ஷன் காட்சிகளுக்காகவும் மீண்டும் பார்க்கத் தூண்டுவதாக அமைந்திருக்கிறது இந்தப் படம்.
‘கெட்டவர்களை அழிப்பதில் பயனில்லை கெட்டதைத்தான் அழிக்க வேண்டும்…’ என்கிற படம் சொல்லும் தத்துவம் கவனிக்க வைக்கிறது.
மழை பிடிக்காத மனிதன் – பிழை பிடிக்காத மனிதனும் கூட..!
– வேணுஜி