December 12, 2024
  • December 12, 2024
Breaking News
August 4, 2024

வாஸ்கோடகாமா திரைப்பட விமர்சனம்

By 0 219 Views

“வாஸ்கோடகாமான்னா ஒரு ஆளுன்னு நினைச்சியா, அதுதான் இல்ல..!” என்று ஒரு படத்தை நம் முன்னால் திரையிட்டுக் காட்டி இருக்கிறார் இயக்குனர் ஆர்ஜிகே.

அப்படி ஒரு அஜால் குஜால் கதை. இந்தக் கலியுகத்தில் நல்லவர்கள் வேடத்தில் கெட்டவர்களும் கெட்டவர்கள் வேடத்தில் நல்லவர்களும் இருப்பதாகச் சொல்லுவார்கள். இந்த கலியுகத்தைத் தாண்டி அடுத்த யுகம் எப்படி இருக்கும் என்றால், எல்லோரும் கெட்டவர்களாகவும் கெட்டதே ஆட்சி செய்வதாகவும் இருக்கும் என்கிறார் இந்தப் பட இயக்குனர். 

அப்படி அவர் யோசித்து எழுதி இருக்கும் கதை தான் இது.

படத்தின் கதையை ஒரு வரியில் கூறினால் நல்லவர்கள் எல்லாம் நன்மை செய்ததற்கான தண்டனை பெற்றுச் சிறையில் இருக்கிறார்கள் .தீயவர்கள் எல்லாம் சிறைக்கு வெளியே இருந்து கொண்டு அநியாயங்கள் செய்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கதாநாயகி அர்த்தனா பினு நல்லவராக இருப்பதால் ஒரு நல்லவரை விரும்பி, திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இருக்கிறார்.

ஆனால், அவருடைய அப்பா ஆனந்தராஜ் நாட்டில் நல்லவர்களுக்கு இடம் இல்லை என்பதால் தனது பெண்ணுக்கு ஒரு அக்மார்க் அயோக்கியனையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

ஆனால் நல்லவரான ஹீரோ நகுலை, அர்த்தனா விரும்புகிறார். தந்தை சொற்படி கேட்பது போல் நம்ப வைத்து திருமணமும் நடக்கிறது.

இதற்கிடையில் நல்லவரான நகுல் சிறைக்குச் செல்கிறார். அங்கே சிறையில் அநியாயக்காரர்களுக்கும் நல்லவர்களுக்கும் நடக்கும் முரண்பாடுகளை நகைச்சுவை முலாம் பூசி எடுத்திருக்கிறார்கள்.

உண்மையிலேயே இது வித்தியாசமான களம்தான். ஆனால், அதை லாஜிக்குடன் யோசித்து சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து காட்சிகள் உருவாக்கி இருந்தால் இந்தப் படம் குறிப்பிடத்தக்க ஒன்றாக மாறியிருக்கும்.

படத்தின் முதல் பாதியில் நகுல் அவரது குடும்பம் அர்த்தனா பின் அவரது குடும்பம் என்று காட்சிகளால் நிரப்பி கதைக்குள் வர முடியாமல் தவிக்கிறார் இயக்குனர்.

இரண்டாவது பாதியில்தான் கதை என்ற ஒன்றே உள்ளே வருகிறது. வாஸ்கோடகாமா என்றால் நாம் நினைப்பது போல் அது ஒரு ஆள் இல்லை ஒரு இடம் என்கிறார் இயக்குனர். 

ஒரு சிறைச்சாலைக்கு பெயர்தான் ‘வாஸ்கோடகாமா’வாம்.

சிறையில் உள்ள நல்லவர்களுக்கும் அவர்களை கெட்டவர்களாக மாற்றும் முயற்சியில் இருக்கும் சிறைத்துறை அதிகாரிகள் கொண்ட அரசாங்கத்திற்கும் நடக்கும் போராட்டத்தைக்  காட்சிப்படுத்தியுள்ளார்கள்.

சாக்லேட் பாயாக அறியப்பட்ட நகுல் இதில் நல்லவர் போலவும் முரட்டுத் தோற்றத்திலும் வருகிறார். சிறைக்கு வெளியே அவருக்கு வாசுதேவன் என்பது பெயர். உள்ளே சென்றதும் ஜாக் ஆகிறார். அழகான தோற்றம் அப்பாவித்தனமான சிரிப்பு என்று லட்சணா பாத்திரத்தில் வரும் நாயகி அர்த்தனா பினுவுக்குப் பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை.

அதேபோல் எதிர்மறை பாத்திரத்தில் வம்சி கிருஷ்ணா, சாமியார் வேடத்தில் வந்து வில்லத்தனம் செய்கிறார்.

முக்கியமான வேடத்தில் வரும் கே எஸ் ரவிக்குமார் முதலில் நம்மை குழப்பினாலும் கடைசியில் உண்மை தெரியும் போது டபுள் இம்பேக்ட் கொடுக்கிறார்.

படத்தில் ஏராளமாக நடிகர்கள் வருகிறார்கள். அனைவருக்குமே பளிச்சிடும்படியான பாத்திர வாய்ப்புகள் இல்லாததால் மேலோட்டமாகத் தோன்றுகிறார்கள்.

படத்தின் முதல் பாதியில் அசட்டுத்தனமான காட்சிகளால் நெளிய வைப்பவர்கள், இரண்டாம் பாதியில் ஓரளவுக்குத் தேற்றி விடுகிறார்கள்.

பட்ஜெட்டுக்கும் கதைக்கும் ஏற்ற சதீஷ்குமாரின் ஒளிப்பதிவும் அருணின் இசையும் நியாயம் செய்கின்றன. 

எந்த லாஜிக்கும் பார்க்காமல் வித்தியாசத்தை மட்டுமே எதிர்பார்த்துச் செல்பவர்களுக்கு இந்தப் படம் பிடிக்கலாம்.

அப்படி யாரும் இருக்கிறார்களா என்ன..?

வாஸ்கோடகாமா – இதையும் தீஸ்கோடா ராமா..!