October 30, 2024
  • October 30, 2024
Breaking News
December 28, 2023

மதிமாறன் திரைப்பட விமர்சனம்

By 0 359 Views

உருவக்கேலி செய்வது பொதுவான மனிதர்களின் இயல்பு. ஆனால் அங்கத்தைப் பார்க்காதீர்கள்… அவர்களின் அறிவைப் பாருங்கள் என்று அடித்துச் சொல்ல வருகிற படம்.

அதற்கேற்றாற் போல் மூன்றே அடி உயரம் உடைய கதாநாயகனை வைத்து முழு படத்தையும் முடித்திருக்கிறார் இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன். 

தென் தமிழ் மாவட்டத்தில் நடக்கிற கதை. அங்கே தபால்காரராக இருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். அவருக்குப் பிறக்கும் இரண்டு குழந்தைகளில் பெண் குழந்தை இயல்பான உயரத்துடன் வளர, ஆண் குழந்தை மட்டும் குள்ளமாகவே வளர (?) அது தொடர்பான பிரச்சனைகள்தான் கதை.

கமலுக்காக எழுதப்படும் கதைகள்… ரஜினிக்காக எழுதப்படும் கதைகள் போன்று இந்தப் படத்தின் கதை நாயகன் வெங்கட் செங்குட்டுவனுக்காகவே எழுதப்பட்ட கதையாக இருக்கிறது. காரணம் அவரது மூன்றடி உயரம்தான் கதைக்கே கருவாக ஆகியிருக்கிறது.

“குள்ளா…” என்றோ “குட்டப்பா…” என்றோ  கூப்பிட்டால் மட்டுமல்ல, “கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது…” என்பது போன்ற பழமொழிகளைச் சொன்னாலும் கூட சுளீர் என்று நுனிமூக்கில் கோபம் வந்து எகிறி முகத்தில் ஒரு குத்துவிடுகிற ரோஷக்காரராக வருகிறார் வெங்கட்.

ஆனால் ஒரு நாயகனுக்கு உரிய அத்தனை அம்சங்களும் அவரிடம் பொருந்தி இருக்கின்றன. எதிர்பாராமல் ஓரிடத்தில் அவர் ஆடும் நடனம் எந்த முதல் நிலை நடிகருடனும் போட்டி போட வல்லது. ஆனால், இதே உயரத்துடன் தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க முடியுமா என்பதுதான் பெரிய கேள்விக்குறி.

அவரது சகோதரியாக நடித்திருக்கும் இவானாவுக்கும் அழுத்தமான கேரக்டர்தான். சகோதரனை கேலி பேசும் வம்பர்களை முகத்தில் ஓங்கிக் குத்த வைத்து “சப்பாணின்னு கூப்பிட்டா சப்புனு அறையனும்னு சொல்லிதான் இவனை வள ர்த்திருக்கோம்…” என்று கொப்பளிக்கும் இவானாவின் ரௌத்திரம் கூட அழகு.

இருவரின் அப்பாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பைப் பற்றி எவ்வளவுதான் எழுதுவது..? நெல்லைத் தமிழில் அவர் பேசிக்கொண்டு வருவதும் போஸ்ட்மேனாக இருப்பதின் அருமை பெருமைகளை சொல்வதிலும்… குறிப்பாக ஓடிப்போன மகளைப் பற்றி அவரே நெகிழ்வுடன் பேசும் இடத்திலும் குணச்சித்திர நடிப்பின் Boss ஆகிறார் பாஸ்கர்.

அவரது மனைவியாக வருபவர் பெயர் தெரியவில்லை – ஆனால் சிறிய வேடம் என்றாலும் சீரியஸாக நடித்திருக்கிறார்.

வெங்கட்டின் ‘காதலைச் சொல்லாத’ நாயகியாக வரும் ஆருத்ராவும் அபார அழகுடன் நடிக்கவும் தெரிந்திருக்கிறார். அவரை துரத்திக் காதலிக்க ஒரு கூட்டம் அலைய அவர் வெங்கட்டை துரத்திக் கொண்டிருப்பதில் அழுத்தமான லாஜிக் எதுவும் இல்லை.

வழக்கம்போல் போலீஸ் கமிஷனராக வருகிறார் ஆடுகளம் நரேன். அவரது மகனாக வரும் போலீஸ் அதிகாரி சுதர்ஷன் கோவிந்த்தும் கேரக்டரில் பொருந்தி இருக்கிறார்.

இயல்பான லைனில் சென்று கொண்டிருக்கும் முன் பாதி இரண்டாம் பாதி கதையில் தடுமாறுகிறது. உருவ கேளு பற்றி பேசும் கதை திடீரென்று ஷெர்லாக் ஹோம்ஸ் கதையாக மாறி சீரியல் கில்லர் என்று போய்க்கொண்டிருப்பதில் இயக்குனர் கொஞ்சம் தடுமாறி இருப்பது புரிகிறது.

எதையாவது ஒன்றை போட்டு படத்தை ரசிக்க வைத்து விட முடியும் என்கிற அவசரம் தெரிகிறதே ஒழிய எடுத்துக் கொண்ட கருவை பார்வையாளர்களிடம் சரியாக கடத்த வேண்டும் என்கிற அக்கறை குறைவாகவே இருக்கிறது.

அழகி ஆருத்ராவை வெங்கட்டுடன் ஜோடி சேர்த்து விடக்கூடாது என்பதில் இயக்குனர் ஏன் பிடிவாதமாக இருந்தார் என்பது தெரியவில்லை. அவர் குள்ளன் என்பதாலா..?

இசை கார்த்திக் ராஜாவாம். ஏதோ நமக்கும் ஒரு படம் கொடுத்தார்களே என்கிற அளவில் மட்டுமே இசைத்திருக்கிறார் அவர்.

“உருவத்தைப் பார்த்து என் மேல் பரிதாபம் கொள்ளாதீர்கள்…” என்று ஹீரோ முடிக்கிற கிளைமாக்சில் வீறு கொண்டு ஒரு இசையைப் பாய்ச்சி இருக்காமல் “தென்பாண்டி சீமையிலே…” மாதிரி சோகப்பாடல் இசைத்து, ஹீரோ மீது பரிதாபத்தை ஏற்படுத்தி இருப்பது ஏன் (கார்த்திக்) ராஜா..?

அதேபோல் ஹீரோ வெங்கட் குள்ளமாக இருக்கிறார் என்பதற்காக, உலகில் சாதித்த அத்தனை பேருமே குறை உள்ளவர்கள் என்பது போல் சச்சின் தொடங்கி அஜித், விஜய் எல்லோரும் குறை உள்ளவர்கள் போலவே பாவித்து வசனம் எழுதி இருப்பதும் ரொம்ப ஓவர்.

காதலில் விழுந்த மகள் வீட்டை விட்டு  வெளியேறி விட்டால், உடனே பெற்றோர் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டுமா என்ன..?

ஹீரோவின் பெயர் நெடுமாறன் என்று இருக்க அப்படியே தலைப்பில் வைக்காமல் அதை மதிமாறன் ஆக மாற்றியதும் ஒரு வகையில் அவர் உயரத்தைக் கேலி செய்வது போலத்தான் இருக்கிறது.

மதிமாறன் – இன்னும் உயரம் தொட்டிருக்கலாம்..!