April 28, 2024
  • April 28, 2024
Breaking News
December 29, 2023

வட்டார வழக்கு திரைப்பட விமர்சனம்

By 0 161 Views

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் 80 களின் இறுதியில் நடக்கும் கதை.

அங்கே ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த இரு பங்காளிக் குடும்பங்களுக்குள் வருடக் கணக்காக பகை இருந்து வருகிறது. அதுதான் களம். ஆனால், ஒரு காதல் கதையாக படம் நிறைவு பெறுகிறது.

படத்தின் தலைப்புக்கு நியாயம் சேர்ப்பது போல், மதுரை மண்ணின் வட்டார வழக்கு அற்புதமாக படத்தில் கையாளப்பட்டிருக்கிறது. இதுவரை எவ்வளவோ படங்களை மதுரை வட்டார வழக்கில் நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால் இந்த அளவுக்குத் துல்லியமாக எந்தப் படத்திலும் உரையாடல் பதிவு செய்யப்பட்டதில்லை. அதற்காக அதை எழுதிய இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரனை பாராட்டியே ஆக வேண்டும்.

அதேபோல் அந்த வட்டாரத்தின் பழக்க வழக்கங்களையும் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார். எந்த இடத்திலும் நமக்கு படம் பார்க்கும் உணர்வே வரவில்லை என்பதே அதற்கு சாட்சி.

படத்தில் வரும் கதை மாந்தர்களுக்குள் ஹீரோ யார் என்பதைக் கொஞ்ச நேரம் ஆனபின்தான் நம்மால் கண்டுபிடிக்கவே முடிகிறது. அந்த அளவுக்கு மக்களுடன் இயல்பாக இரண்டறக் கலந்த ஹீரோவாக இருக்கிறார் இந்த படத்தின் நாயகன் சந்தோஷ் நம்பிராஜன்.

கதையை தலைமை தாங்கிச் செல்கிறாரே அன்றி அவருக்கென்று தனியாக ஹீரோயிஸம் எதுவுமே படத்தில் வைக்கப்படவில்லை.

ஏற்கனவே இதே போல் டூலெட் படத்தில் கதை நாயகனாக வந்த இவர் இந்தப் படத்திலும் கதைக்கு நியாயம் சேர்க்கும் ஹீரோவாக வந்திருப்பது ஆகப்பெரிய விஷயம்.

ஹீரோவை நம்பாமல் கதையை நம்பும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இவரைத் தொடர்பு கொள்ளலாம்.

அதேபோல் நாயகியாக நடித்திருக்கும் ரவீனா ரவியும் பாத்திரமும் உணர்ந்து நடித்திருக்கிறார். அந்த முரட்டு பார்வைக்குள்ளும் முதிர்வான கண்டிப்புக்குள்ளும் கூட காதல் இருப்பதை சந்தோஷ் கண்டுபிடிப்பது ரசனையான விஷயம்.

இவர்களைத் தவிர படத்தில் நமக்குத் தெரிந்த முகமாக வருபவர் பங்காளி குடும்பத்தில் மூத்தவராக வரும் விஜய் சத்யாதான். 

இதுவரை படங்களில் பெரும்பாலும் மோசமான இன்ஸ்பெக்டராக காட்சியளித்த இவர், இதில் நடுத்தர வயதைக் கடந்த மனிதராக வந்திருப்பதும் அப்படியே வாழ்ந்திருப்பதும் அவரது நடிப்புப் பயணத்தில் குறிப்பிடத் தகுந்ததாக அமையும்.

நாயகனின் அண்ணனாக வரும் பருத்திவீரன் வெங்கடேஷ், நண்பர்கள் மற்றும் கொஞ்சம் மனநிலை சரியில்லாத நபராக வருபவர் அனைவரும் பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். 

மற்ற பாத்திரங்களை ஏற்று இருப்பவர்கள் எல்லோருமே அந்த வட்டாரத்து மனிதர்கள் தான் என்பதால் படத்தின் இயல்புத் தன்மை மேம்பட்டுத் தெரிகிறது.

சண்டைக் காட்சிகளில் கூட சிறிதளவும் சினிமாத்தனம் இல்லை. ஒரு வெட்டு, குத்து, கொலை எல்லாம் எப்படி நடக்குமோ அப்படியே நடந்து முடிகிறது. 

அதற்குத் தோதாக பின்னணி இசையில் எந்தவிதமான செயற்கைத் தனமும் இல்லாமல் பெரும்பாலும் நிசப்தமாகவே கடக்கிறது இசைஞானியின் இசை. பாடல்களும் கூட மனதில் தங்குமளவுக்கு இரண்டு பாடல்களை இயற்றி இசையமைத்திருக்கிறார் ஞானி.

சுரேஷ் ஒளிப்பதிவும் தேவையற்ற க்ளோசப்களைத் தவிர்த்து இயல்புத் தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

இத்தனை அற்புதமான விஷயங்கள் இருந்தும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத சம்பவங்களாலும், காட்சிகளாலும் படத்தில் ஒன்ற முடியாமல் போவது வருத்தமே.

பங்காளி சண்டையால் காதலுக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை. காதலிப்பதாலும் அவர்களுக்குள் எந்தப் பிரச்சனையும் இல்லை. பல சாதிகள் புழங்கும் கதையில் அதனாலும் எந்தப் பிரச்சனையும் இல்லை. எதிர்பாராத ஒரு சின்னப் பிரச்சினையில் படம் கனத்து முடிகிறது.

வட்டார வழக்கு –  ஒட்டாத வாழ்க்கை..!