கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். அதற்கு முதல்நாள் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாஜகவின் பாரத பிரதமர் மக்கள் நலத் திட்டங்கள் பிரச்சார விளம்பர அமைப்பின் செயலாளர் ராஜசேகரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவைக் கொடுத்தார்.
அதில், ‘கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் நடிகர் விவேக்குக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாகவும், யாரும் முகக்கவசம் அணிய வேண்டாம் என்றும், சுகாதாரத் துறை செயலாளர் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதே காரணத்தைக் கூறி, சென்னை மாநகராட்சி சார்பிலும் மன்சூர் அலிகான் மீது டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இது பற்றி மன்சூர் அலி கானிடம் கேட்டபோது…
“கைதுக்கு பயப்படவில்லை. கைது செய்யப்பட்டால், ஊர்வலமாக சென்று சரணடைவேன். இது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
மக்களுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்! கைதுக்கு பயப்படமாட்டேன்!” என்று சொல்லி இருக்கிறார்.