வாழ்ந்து கெட்ட ஒரு பரம்பரையின் வாரிசான அப்பாவி கிராமத்துப் பெரிய மனிதரான ‘தம்பி ராமையா’ தன் மகன் ‘உமாபதி ராமையா’வையும் அவ்வாறே பொறுப்பில்லாமல் வளர்க்கிறார். அதனால், உமாபதியின் முறைப்பெண்ணைக் கட்டிவைப்பதில் கூட சிக்கல் வருகிறது.
அங்கே சுதாரித்து அந்த முறைப்பெண்ணான மிருதுளா முரளியின் ஆலோசனைப்படியே ஒரு பங்குத் தொழில் தொடங்க நினைத்து மக்களிடம் பணம் வசூலிக்க, அதை கால்டாக்ஸி டிரைவரான ‘மொட்ட ராஜேந்திரன்’ ஆட்டையைப் போட, நல்ல மனிதர் பெயரெடுத்த ராமையாவின் குடும்பத்தினர் கெட்ட பெயரெடுத்து அல்லல் படுகிறார்கள். அதிலிருந்து எப்படி மீண்டார்கள் என்பது மீதிக்கதை.
வீட்டின் ஒவ்வொரு செலவுக்கும் உத்திரம், கதவுகளைக் கழற்றி விற்பனை செய்தாலும் குலப்பெருமையை விட்டுக் கொடுக்காத மிடுக்குடன் வரும் தம்பி ராமையா கவர்கிறார். கலர் கலரான சட்னியுடன் சாப்பிடுவதில் தொடங்கி, கலையாத ஆடையுடன் வலம் வருவது வரை அவரது அலப்பறை அட்டகாசம்.
அதைவிட அவரது வெள்ளந்தியான மனம்தான் அதிகம் கவர்கிறது. ஊரே அவர்கள் குடும்பத்தை வீட்டுச்சிறை வைத்த நிலையிலும் ஏமாற்றுபவனைக் கூட திட்டக்கூடாது என்று அம்மாவிடம் கூறுவது அவர் எவ்வளவு வெள்ளை உள்ளம் படைத்தவர் என்று உணரவைக்கிறது. அருமையான பாத்திரப்படைப்பு அவருடையது.
ஆனால், நாயகனான தன் மகனுக்கான படம் இது என்பதிலும் தெளிவாக திரைக்கதை அமைத்திருக்கிறார் படத்தின் இயக்குநராகவும் இருப்பதால். வேலை வெட்டியில்லாத மைனராக ஒருபக்கம், முறைப்பெண்ணின் சொல்லைக்கேட்டு தொழில் தொடங்க முடிவெடுப்பது ஒருபக்கம், அப்பாவை அசிங்கபடுத்தும் ஊரிடம் பணத்தைத் திருப்பித் தந்து அப்பாவின் மீதிருக்கும் அவப்பெயரைத் துடைப்பேன் என்று சபதம் எடுப்பது ஒருபக்கம், அதை நிறைவேற்றப் போராடுவது ஒருபக்கம் என்று நான்கு திசைகளிலும் உணர்ச்சிகளைக் காட்டியிருக்கிறார் உமாபதி.
முக்கியமாக ரப்பர் போன்ற அவரது உடலமைப்பு அவர் ஆட்டத்துக்கும், ஆக்ஷனுக்கும் அற்புதமாக ஒத்துவருவது. 25 படம் முடித்த லாவகம் தெரிகிறது உமாபதியின் உடல்மொழியில்.
இத்தனை திறமையுள்ள இளைஞனுக்கு இன்றைய ட்ரெண்டில் ஒரு கதை எழுதாமல் எழுபது, எண்பதுகளில் எடுத்திருக்க வேண்டிய ஒரு கதையை ஏன் எழுதினார் தம்பி ராமையா என்று தெரியவில்லை. எந்த இளவயது ஹீரோவாவது இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்திருப்பாரா..?
அதிலும் இரண்டாவது பாதியில் படம் பார்ப்பவர்களை லிட்டர் லிட்டராகக் கண்ணீர் சிந்தவைத்துவிட வேண்டும் என்று தம்பி ராமையா எதற்காக முடிவெடுத்தார் என்றே தெரியவில்லை. கிளைமாக்ஸுக்கு முன்னர் அரைமணிநேரம் சீரியல் ரேஞ்சுக்கு ஒரே அழுகாச்சி.
அதேபோல் தாத்தா, அப்பாவாக தம்பி ராமையாவே வேடமேற்று மகனாக அவர் மகன் உமாபதியும், தாத்தா கேரக்டரின் இளவயது தோற்றத்துக்கும் அதே உமாபதியை நடிக்க வைத்து… போதாக்குறைக்கு படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் எல்லாமும் அவரே ஆனதில் படத்தின் டைட்டிலையே மாற்றி ‘தம்பி ராமையா குடும்பம்’ என்று வைத்திருக்கலாம்.
இன்றைக்கு இளைஞர்களிடம் ட்ரெண்டிங்கில் இருக்கும் யாஷிகாவை ஒரே ஒரு பாடலில் குத்தாட்டம் போட வைத்துவிட்டு, உமாபதியைவிட முத்தலான மிருதுளா முரளியை நாயகியாக ஏன் நடிக்கவைத்தார் என்பதையும் இயக்குநராக அவரேதான் சொல்ல வேண்டும்.
பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவில் ஒரு செழிப்பான கிராமத்துக்கு சென்று வந்த ஃபீலிங்.
மணியார் குடும்பம் – ‘உமாபதி ராமையா’வுக்கான விசிட்டிங் கார்டு..!