August 6, 2026
  • August 6, 2026
Breaking News
June 17, 2026

மக்கள் தலைவா திரைப்பட விமர்சனம்

By 0 242 Views

தலைப்பே சொல்லிவிடுகிறது இது எந்த வகைப்படமென்று. பொலிட்டிக்கல் சட்டையர் எனப்படும் அரசியல் நையாண்டிப் படம்தான் இது.

கர்மவீரரை நினைவுபடுத்தும் தர்மராஜர் என்ற தமிழக முதல்வர், கல்வியறிவை உணவிட்டு ஊட்டிய நிகழ்வைச் சொல்லி, அவரது தொண்டராக இருக்கும் கோடீஸ்வரர் பச்சமுத்து பழனிமாணிக்கம் என்ற ராதாரவியை அறிமுகப்படுத்தித் தொடங்குகிறது படம்.

இன்னொரு பக்கம் உழைப்புக்கு வேலை கொடுக்காமல், பிழைப்பு நடத்தும் விதமாக மக்கள் பிரச்சினை தீர்க்கவென்று போராட்டம் நடத்தி அதன் மூலம்.சம்பந்தப்பட்டவர்களிடம் பணம் பெற்று வாழ்க்கை நடத்தி வருகிறார் தமிழ்க் குடிமகன் என்ற பெயர் கொண்ட ரவி மரியா.

அவரை வைத்து ஒரு அரசியல் சதுரங்கத்தை ஆடிப் பார்த்துவிட, தொழிலதிபர் ராதாரவி முடிவு செய்கிறார்.

அதற்கு ஒத்துக்கொண்டு, முதலில் நடிகராகி பின்னர் அரசியலுக்கு வரும் ரவி மரியா அதிரடித் திட்டங்களை அறிவித்து தேர்தலில் நிற்கிறார். இதற்குப் பின்புலமாக ராதாரவியும் அவரது ‘உள்ளே வெளியே,’ கட்சியில் இணைகிறார்.

வானவில் நிறத்துடன் களம் இறங்கும் உ.வெ கட்சியில் தேர்தலுக்கு முன் ரவி மரியா விபத்தில் சிக்கி, சிகிச்சைக்காக வெளிநாடு போய்விடுகிறார்.

எனவே தேர்தலில் உவெ கட்சி வென்றால் முதல்வர் யார் என்ற கேள்வி வர, மக்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து முதல்வராக்கும் ‘நீங்களும் ஆகலாம் சி எம்…’ என்ற பிரச்சாரதத்தை முன்வைக்கிறார்கள்.

தேர்தலில் உவெ கட்சி வெற்றியடைய, யார் முதல்வர் ஆனார்கள், இயல்பில் கர்மவீரர் தர்மராஜர் தொண்டரான ராதாரவி இப்படி மக்களை ஏமாற்றும் அரசியல் வேலையில் ஏன் ஈடுபட்டார் என்பதெல்லாம் மீதிப் படத்தில்.

பல படங்களில் காமெடியன் ஆக நடித்திருக்கும் ரவி மரியாவுக்கு முதல் முதலாக நாயகன் வேடம். அவரது வழக்கப்படியே நக்கலாக நடித்து தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்கிறார்.

தொழிலதிபராக நடித்திருக்கும் ராதாரவி தன் அனுபவ நடிப்பால் கவர்கிறார். அவரது செயலுக்குப் பின்னால் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது என்பது ஒரு மாதிரி புரிகிறது. அத்துடன் பின்பாதியில் ரவிமரியாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு இவரே ஹீரோ ஆகிறார்.

இவர்களுடன் நிஜ அரசியல்வாதிகள் பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத் போன்றோரும் நடித்திருப்பது படத்துக்கு நிஜ அரசியல் நிறத்தைக் கொடுத்திருக்கிறது.

கார்த்திக் எஸ்.நாயரின் ஒளிப்பதிவும், துளசி ராமனின் இசையும் பட்ஜெட் பிறழாமல் பயணித்து இருக்கின்றன.

எழுதி இயக்கியிருக்கும் ராம்தேவ், அன்றைய எம்ஜிஆர் அரசியலில் இருந்து இன்றைய விஜய் அரசியல் வரை நிறைய நிகழ்வுகளை நினைவுபடுத்தும் விதமாக காட்சிகளை அமைத்திருக்கிறார்.

இந்த முஞ்சியெல்லாம் எடுபடுமான்னு கேட்டவரைப் பார்க்கத்தான் கூட்டத்துல சிக்கி அத்தனைபேர் செத்தாங்க என்றெல்லாம் வசனங்கள் வருகின்றன.

ஆனால், ஒரு படம் மக்களுக்கான பொதுவான செய்தியை சொல்லவேண்டுமே அன்றி இப்படி ஒருதலைப் பட்சமான கருத்து சொல்லி முடிவது ஏற்புடையதல்ல.

ஆனால், இன்றைய அரசியல்வாதிகள் ஓட்டு வாங்க எப்படியெல்லாம் தேர்தல் அரசியல் செய்கிறார்கள் என்பதை நையாண்டி செய்திருப்பதை ரசிக்கலாம்.

மக்கள் தலைவா – நக்கல் தலைவா..!

– வேணுஜி