October 18, 2024
  • October 18, 2024
Breaking News
June 13, 2024

மகாராஜா திரைப்பட விமர்சனம்

By 0 318 Views

ஒரு காலத்தில் அம்மா – மகன் உறவைப் பெருமைப்படுத்தும் பாசக்கதைகள்  பெரிதும் ரசிக்கப்பட்டு கொண்டிருந்தன. இப்போதைய ட்ரென்ட் அப்பா – மகள் பாசக் கதைகள்தான்.

இந்தப் படத்தில் மகளை ஒரு இளவரசியாக வளர்த்து வரும் மகாராஜா என்கிற அப்பாவின் கதையைச் சொல்லி இருக்கிறார் ‘குரங்கு பொம்மை’ புகழ் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். 

மகளைத் தலை மீது வைத்துத் தாங்கும் மகாராஜாவாக விஜய் சேதுபதி. அவருக்கு இந்த மகாராஜா மகுடம் சூட்டியிருப்பதில் இன்னொரு விசேஷம் இது சேதுவின் ஐம்பதாவது படம் என்பது. 

அதனாலேயே இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு மிகவும் எகிறிக் கொண்டிருந்தது. 

படத்தின் முதல் பாதியில் அந்த எதிர்பார்ப்பைப் படம் பூர்த்தி செய்யுமா என்ற சந்தேகம் வலுக்கும் அளவுக்கு இலக்கில்லாமல் பாய்ந்து கொண்டிருந்தது திரைக்கதை. 

ஆனால் படத்தின் பின்பாதி எங்கே வந்து சேர வேண்டுமோ அந்த இடத்திற்கு வந்து சேர்ந்ததுடன் எதிர்பாராத ஒரு கிளைமாக்ஸில் மனத்தை நெகிழ வைத்துவிட்டது. 

காணாமல் போன ஒரு பொருளைக் கண்டுபிடித்துத் தரும்போது காவல் நிலையம் வந்து அலப்பறை செய்யும் விஜய் சேதுபதி அந்தப் பொருளைக் கண்டுகொண்டாரா, உண்மையில் காணாமல் போனது அந்தப் பொருள்தானா என்ற கேள்விகளுக்கெல்லாம் எதிர்பாராத பதில்கள் படத்தின் இரண்டாவது பாதியில் கிடைக்கின்றன. 

சேதுவின் நடிப்பு பற்றி ஐம்பதாவது முறையாகச் சொல்லி ஆக வேண்டும். இந்தப் படத்தில் அவர் ஏற்றிருக்கும் வேடம் சற்றே வினோதமானது. மகள் மீது இப்படி ஒரு ‘ அசுரப் பாசம் ‘ வைத்திருக்கும் தந்தையைத் தமிழ் சினிமா இப்போதுதான் அவரது அமர்க்களமான நடிப்பின் வாயிலாகப் பார்க்கிறது. 

இன்னொரு பக்கம் வில்லன் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பின் அலட்டிக் கொள்ளாத நடிப்பு, அடுத்த பக்கம் நட்டி நடராஜின் மிரட்டல் நடிப்பு இவற்றுக்கு இடையே எந்த பதட்டமும் இல்லாமல் தன் வேலையை வித்தியாசமாகச் செய்து அரை சதம் அடித்திருக்கிறார் சேது. 

சொன்னது போல் படத்தின் வில்லனாக வரும் அனுராக் காஷ்யப்புக்கு இரண்டு முகம். வீட்டில் வந்தால் மனைவி மகள் மீது அதீத பாசத்தை கொட்டும் ஒரு குடும்பத் தலைவனாகவும், வெளியே போனால் எந்த குடும்பத்து உறவுகளுக்கும் மரியாதை இல்லாமல் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மேற்பார்வை (!) என்று கொடூர முகமும் காட்டி மலைக்க வைக்கிறார். 

ஆனால் இந்தக் கொடூர தன்மையாலேயே அவர் தன் மகள் மீது வைக்கும் பாசம் எடுபடாமல் போகிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது. 

ஹீரோயின் என்கிற இடத்தை வெற்றிடமாக விட்டு விட வேண்டாமே என்கிற அளவில் மம்தா மோகன்தாஸுக்கு தக்கநூண்டு வேடம். 

தன் கணவர் அனுராக், ஒரு சொக்கத்தங்கம் என்று நம்பும் அப்பாவி அபிராமியைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது. அப்படிப் பாசம் வைத்த கணவனை ஒரு நொடியில் அவரும் வில்லனாகப் பார்ப்பதில் கொஞ்சம் லாஜிக் இடிக்கிறது.

அனுராக் – அபிராமியின் அந்தச் சுட்டிக் குழந்தை ஓரிரு காட்சிகளில் வந்தாலும் அமர்க்களப்படுத்தி இருக்கிறது. இந்த வருடத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரம் அதுதான் என்று அடித்துச் சொல்லிவிட முடியும்.

அதேபோல் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருக்கும் சிறுமியும் நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார். அந்தச் சிறுமியை சின்னாபின்னப்படுத்திய அனுராக் காஷ்யப்பை போய் சந்தித்தே ஆகவேண்டும் என்று அடம் பிடித்து அனுராக்கை சந்திப்பதும், “நான் உயிர்பிச்சை கொடுத்ததால்தான் இப்போது நீ பேசிக் கொண்டிருக்கிறாய்…!” என்கிற அனுராக்கிடம் “நான் உன்னை சந்திக்க வேண்டும் என்று சொன்னதால்தான் என் அப்பா உன்னை உயிரோடு விட்டு இருக்கிறார். நான்தான் உனக்கு உயிர் பிச்சை கொடுத்திருக்கிறேன்..!” என்று திருப்பி அடிக்கும்போது தியேட்டர் அதிர்கிறது.

அந்தச் சிறுமிக்கு நடந்த கொடூரத்தில் நாம் தளர்வடையாமல் இருப்பது அந்தச் சிறுமியின் மன உறுதி தெறிக்கும் பேச்சில்தான்.

விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப் என்று இரு பெரும் நடிகர்களுக்கு இடையில் மூன்றாவது பாத்திரமாக வந்தாலும் நட்டி நடராஜன் பாத்திரத்தையும் ரசிக்க வைத்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியுமான பங்களிப்பும், பாத்திர வடிவமைப்பினாலும்தான்.

அவருடன் சேர்ந்த நாராக மணக்கிறார்கள் சப்-இன்ஸ்பெக்டர் அருள் தாஸும், ஏட்டு முநீஷ்காந்த் ராமதாஸும். 

சின்ன பாத்திரம் என்றாலும் சீறிப்பாய்கிறார் பாய்ஸ் மணிகண்டன்.

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு என்றே நேர்ந்துவிட்டவர் போல் வரும் வினோத் சாகருக்கு இதிலும் அதே… அதே..!

ஆனால் படத்துக்கு படம் காமெடியனாக வரும் சிங்கம் புலிதான் இதில் தன் பெயரைக் காப்பாற்றுவது போல் வேட்டை விலங்காக ஆகி இருக்கிறார். ஆனால் இப்படி வித்தியாசமான வேடம் ஏற்றதில் அவர் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது என்பதுதான் பரிதாபமான விஷயம். 

பாரதிராஜாவும் இரண்டு சீனில் அட்டெண்டன்ஸ் போட்டுவிட்டுப் போகிறார்.

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு படத்தின் கண்களாகி இருக்கின்றன என்றால் காந்தாரா அஜனீஷ் லோக்நாத்தின் இசை படத்தின் காதுகளாகி இருக்கின்றன.

அங்கங்கே லாஜிக்கில் மற்றும் காட்சி அமைப்பில் இருக்கும் சின்னச் சின்ன தவறுகளை எல்லாம் பின்னணி இசையால் இட்டு நிரப்பி ஒரு நேர்த்தியான படமாக உணரச் செய்து இருக்கிறார் அஜனீஷ்.

வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் லீனியர் முறையில் இயக்குனர் நித்திலன் படத்தின் கடைசிக் காட்சிகளை அமைத்திருப்பது சாதாரண ரசிகர்களைக் கண்டிப்பாக குழப்பத்துக்கு உள்ளாக்கும். அந்த நான் லீனியர் எடிட்டிங்கால் படத்துக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை. 

சிறுமிகளை பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கும் கதைகள் நிறைய வருவதை கோலிவுட் இயக்குனர்கள் இனி அவற்றைத் தவிர்க்க வேண்டும். படங்களில் தொடர்ந்து இடம்பெறும் குற்றங்கள் மக்களை ஒரு வகையில் Influence செய்து விடும்.

மற்றபடி விஜய் சேதுபதிக்கு இந்த பொன்விழாப் படம், தங்க மகுடம் சூட்டி இருக்கிறது.

மகாராஜா – பட்டம் வென்ற படம்..!

– வேணுஜி