முதலில் மாரீசன் என்றால் யாருக்குப் புரியும்..? ஓரளவுக்கு இராமாயணம் அறிந்தவர்கள் மட்டுமே அதை கண்டுபிடிக்கலாம்.
அப்படி ராமாயணம் தெரியாதவர்களுக்காக நாம் சொல்லும் சின்ன முன் கதை.
ராவணன் சீதையைக் கவர்வதற்காக மாரீசன் என்கிற மாயாவியை அனுப்ப, அந்த மாரீசன் மாயமான் வேடம் கொண்டு சீதையின் கவனத்தைக் கவர, அதை துரத்திக்கொண்டு ராமன் காட்டுக்குள் போகும் போதுதான் ராவணன் சீதையைக் கடத்துகிறான்.
ஆக வெளி உலகத்திற்கு அப்பாவி மான் போல தோற்றமளிக்கும் மாரீசன், உண்மையில் ஒரு அரக்கன் என்பதுதான் அதன் பொருள். ஆனால் இந்தக் கதை எல்லாம் படத்துக்குள் இல்லிங்கோ..!
இது நமது வாசகர்களுக்காக நாம் செய்யும் ஆயத்த முயற்சி..! சரி… படத்துக்கு வருவோம்..!
பட ஆரம்பத்தில் திருட்டுக் குற்றத்துக்காக ஜெயிலுக்குப் போன பகத் பாசில், விடுதலையாகி வெளியே வருகிறார். வந்ததுமே ஒரு மோட்டார் பைக்கைக் களவாடி அதில் எந்த வீட்டில் திருடலாம் என்று நோட்டம் விடுகிறார்.
அப்படி ஒரு வீட்டுக்குள் திருடப் போகும்போது அங்கே ஏற்கனவே விலங்கு பூட்டப்பட்ட நிலையில் வடிவேலு இருக்கிறார். “இந்த விலங்கிலிருந்து என்னை விடுவித்து வெளியே கூட்டிக்கொண்டு போனால் உனக்கு பணம் தருகிறேன்..!” என்கிறார் வடிவேலு.
அதற்கு அவர் சொல்லும் காரணம், அவருக்கு அல்சைமர்ஸ் என்ற நினைவு மறதி நோய் இருப்பதால் அவர் எங்கும் வெளியே சென்று விடக்கூடாது என்று அவரது மகன் விலங்கிட்டுப் பிணைத்துவிட்டுப் போயிருப்பதாகச் சொல்கிறார்.
அவரை சங்கிலியில் இருந்து மீட்டுக் கொண்டு செல்லும் பகத்துக்கு சொன்னது போலவே 25 ஆயிரம் ரூபாய் ஏடிஎம்மில் இருந்து எடுத்து தருகிறார் வடிவேலு. அப்படி பணம் எடுக்கும் போது அவரது அக்கவுண்டில் 25 லட்ச ரூபாய் இருப்பதை பகத் கண்டுபிடிக்க, அந்தப் பணத்தை ஆட்டையைப் போடுவதற்காக வடிவேலு செல்ல விரும்பும் திருவண்ணாமலைக்குத் தானே அழைத்துச் செல்வதாக வாக்களித்து கூட்டிச் செல்கிறார்.
பகத்தின் திட்டம் பற்றி அறிந்த இன்னொரு நபர் கோவையில் இருக்கும் அவரது நண்பரான விவேக் பிரசன்னா. இவர்களது திட்டத்தின்படி வடிவேலுவிடமிருந்து பகத் பாசிலால் பணத்தை அடிக்க முடிந்ததா, வடிவேலுவின் ஞாபக மறதி நோயின் தன்மையால் அவர் ஏமாந்தாரா என்பதெல்லாம் மீதிப் படத்தில்.
வடிவேலுவின் நினைவு மறதி நோயில் அவ்வளவாக லாஜிக் இல்லாமலே செல்கிறது திரைக்கதை. கொஞ்சம் புத்திசாலிகள் அப்போதே கண்டுபிடித்து விட முடியும் இவர் பகத் பாசிலை ஏமாற்றப் போகிறார் என்று.
ஆனால் இடைவேளை வரை அதைப் பெரிய சஸ்பென்ஸ் போல இழுத்துக் கொண்டு போகும் இயக்குனர் சுதீஷ் சங்கர் இடைவேளையில் அந்த சஸ்பென்சை உடைக்கும் போது “அட போயா..!” என்று இருக்கிறது
உலகிலேயே கடினமான நடிப்பு என்பது நகைச்சுவை நடிகராக இருப்பதுதான். அதிலேயே டாக்டரேட் வாங்கி இருக்கும் வடிவேலு, இந்த குணச்சித்திர வேடத்துக்கு ரொம்ப மெனக்கெடாமல் எளிதாகவே நடித்திருக்கிறார்.
அவர் நடிக்கவே இல்லையோ என்று அது ஒரு குறையாக தெரியப்போகிறது என்று இயக்குனர் அவருக்கு இரண்டாம் பாதியில் வாயை மூடிக் கண்டு குமுறி அழும் ஒரு காட்சியைக் கொடுத்து அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்த உதவியிருக்கிறார்.
கலகலப்புடனும், சுறுசுறுப்பான உடல் மொழியுடனும், கண்களில் தந்திரத்துடனும் நடிப்பது ஒன்றும் பகத் பாசிலுக்கு புதிய வேடம் இல்லை. அவரது இயல்பு தன்மையை அது தான் என்ற அளவில் அவரும் அந்தக் கேரக்டரை ஊதித் தள்ளி இருக்கிறார்.
ஆனால் நாமே ஒரு கட்டத்தில் வடிவேலு இவரை ஏமாற்றுகிறார் என்று கண்டுபிடித்து விடும் போது அவருக்கு மட்டும்… (இதற்கும் அவர் ஒரு பக்கா திருடன்…) அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது கதையில் பெரிய ஓட்டை.
அதுவும் பின் நம்பரை மறந்து போகாமல் ஏடிஎம் மிஷினில் போட்டு பணத்தை எடுத்து தரும்போதாவது பகத்துக்கு அவர் மீது சந்தேகம் வந்திருக்கலாம்.
அதேபோல் பகத்தின் உற்ற நண்பனாக வரும் விவேக் பிரசன்னா பற்றியும் அவருக்கு எதுவுமே தெரியாது என்பதும் காதில் பூ அல்ல மாலை சுற்றும் வேலை.
அதைவிட வடிவேலு சில கொலைகளைச் செய்கிறார் என்பதையும் சுத்தமாக நம்ப முடியவில்லை. அவரது வயதுக்கும் தள்ளாமைக்கும் அவரால் கொலையுறும் நபர்கள் வாட்ட சாட்டமாகவும் பலசாலிகளாகவும் இருக்க… அந்தக் கொலைகள் எல்லாம் சாத்தியமே இல்லை.
போலீஸ் அதிகாரியாக வரும் கோவை சரளாவைப் பார்த்து நாம் சிரித்து விடக்கூடாது என்பதில் இயக்குனர் கவனமாக இருந்திருக்கிறார்.
வடிவேலுவின் மனைவியாக சித்தாரா ஒட்டவில்லை.
இவ்வளவு பெரிய வில்லன் கேரக்டருக்கு எல்லாம் விவேக் பிரசன்னா தாங்குவாரா..?
வடிவேலுவின் நண்பனாக லிவிங்ஸ்டன் வருவதும் கதைக்கு உதவவில்லை.
பகத்தின் அம்மாவாக வரும் ரேணுகாவுக்கு மகன் திருடனாக இருப்பதில் எந்த குறையும் இல்லை போலிருக்கிறது. ஜெயிலில் இருந்து வந்த அவரை ஏதோ வெளியூருக்கு வேலைக்கு போய்விட்டு வருபவரைப் போலத்தான் நடத்துகிறார்.
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றம் நிஜத்தில் ஒழிந்தாலும் சினிமா கதாசிரியர்கள் அதை விட்டு ஒழிக்கப் போவதில்லை என்பது இந்த படத்தின் மூலம் இன்னும் ஒரு முறை நிரூபணம் ஆகிறது.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் சுமார் ரகம். தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் அப்பாவின் ஏதோ ஒரு பாடலை அவர் எடுத்தாண்டு கொண்டே இருக்கிறார். மகன்தானே என்று இளையராஜாவும் கண்டு கொள்வதில்லை.
ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் நமக்கு ஒரு பயணம் அனுபவத்தை அற்புதமாக திரையில் தந்திருப்பது ஒன்றே ஆறுதல்.
சிரிப்பாகச் செல்லும் ஒரு கதை ஒரு கட்டத்தில் சீரியஸ் ஆகி நெகிழ்ச்சியுடன் முடிய வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறார் இயக்குனர்.
ஆனால் நகைச்சுவை மிகவும் வறட்சியாக இருப்பதால் நம்மால் சிரிக்க முடியவில்லை. சீரியஸ் ஆகப்போகிறது என்பதையும் முன்கூட்டியே கணித்து விடுகிறோம். பல படங்களில் பார்த்த குற்றம்தான் என்பதால் அதில் எந்த நெகிழ்ச்சியும் ஏற்படவில்லை.
ராமாயண மாரீசன் ராமனை ஏமாற்றியது போல் இந்த மாரீசன் நம்மை நன்றாகவே ஏமாற்றி விடுகிறான்.
மாரீசன் – மாய மான்..!
– வேணுஜி