April 11, 2026
  • April 11, 2026
Breaking News
February 19, 2026

லவ் சப்ஸ்கிரைப் ஷேர் (LSS) திரைப்பட விமர்சனம்

By 0 147 Views

புதுமுகங்களை வைத்துப் படம் எடுப்பது இப்போதைய சினிமா இருக்கும் சூழலில் ஆக்ஸா பிளேடு மேல் நடக்கிற சமாச்சாரம்.

அப்படி புது முகங்கள் ஆதவ் கிருஷ்ணா, சிம்ரனை நாயகன், நாயகியாக வைத்து ஒரு த்ரில்லிங்கான காதல் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஆர் மகாலஷ்மி முருகன்.

நாயகன் ஆதவ் கிருஷ்ணா சீனியராக இருக்கும் கல்லூரியில் ஜூனியர் ஆக வந்து சேரும் சிம்ரன் ரவுடிகளிடம் இருந்து தன்னை காப்பாற்றிய நன்றிக்காக நட்புக் கொண்டு ஆதவ்வைக் காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். 

ஆரம்பத்தில் ஒதுங்கிப் போகும் ஆதவ் கிருஷ்ணா, சிம்ரனின் ஆழமான காதலைக் கண்டு தானும் காதலிக்க ஆரம்பிப்பதுடன் தங்கள் காதலுக்கான சம்மதத்தை வீட்டிலும் பெற்று விடுகிறார். 

ஆனால் வட மாநிலத்தைச் சேர்ந்த கோடீஸ்வரரான சிம்ரனின் தந்தை இந்தக் காதலை ஒத்துக் கொள்ளவில்லை. அத்துடன் அவர் மனைவியும் இன்னொருவனை திருமணம் செய்து கொண்டு போய்விட அந்த வெறுப்பிலும் இருக்கிறார். 

ஆனால் தங்கள் கல்யாணத்துக்கு முன்னால் பிரிந்து போன தன்னுடைய அம்மாவை பார்த்து சம்மதம் வாங்க விரும்பும் சிம்ரன் அவரைத் தேடி காசிக்குச் செல்ல உடன் செல்கிறார் ஆதவ். 

காணாமல் போன அம்மாவை பார்க்கப் போன இடத்தில் சிம்ரனும் காணாமல் போக அவரைத் காசியில் தேடி அலையும் ஆதவ்வை போலீஸ் பிடித்துக் கொண்டு போய் நையப்புடைத்து விடுகிறார்கள்.

இன்னொரு பக்கம் சிம்ரனின் அப்பாவும் வெகுண்டு காசிக்கு வர, அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதெல்லாம் மீதிக் கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஆதவ் கிருஷ்ணா அறிமுக நடிகர் போலவே தோன்றவில்லை அவ்வளவு எளிதாக நடித்திருக்கிறார். காதல், மோதல், நடனம் எல்லாவற்றிலும் பாஸ்மார்க்குக்கு மேலேயே வாங்கி விடும் ஆதவ் கடைசி காட்சியில் சிம்ரனின் தந்தையிடம் கெஞ்சுவது நெகிழ்ச்சி அடைய வைக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் சிம்ரன், ஆரம்ப காலத்து சமந்தாவைப் போல் இளமையுடனும் அழகுடனும் தெரிகிறார். கிளாமராகவும் நடிக்கத் தயாராக இருப்பதால் எதிர்காலத்தில் நிறைய படங்களில் இவரைப் பார்க்க முடியும்.

ஆதவின் அம்மாவாக நடித்திருக்கும்  வினோதினி வழக்கம் போல கலகலப்பாக செய்திருக்கிறார். ஆனால் அப்பா படவா கோபி தான் ஒரு விருந்தாளி போலவே ஒதுங்கி நிற்கிறார். அவரை மட்டும் கிணற்றுக்குள் டப்பிங் பேச வைத்தார்களோ என்னவோ அவர் பேசும்போது மட்டும் எக்கோ அடிக்கிறது.

படவா கோபியை பற்றி சொல்லும் போது சௌகார்பேட்டைக்குள் புகுந்து சேட்டு வீட்டை கொளுத்தி விடுவார் என்று பில்டப் கொடுக்கிறார்கள். “அட படவா..!” என்று அவரைப் பார்த்தால் அவர்  அடுப்பு கூட பற்ற வைப்பவர் மாதிரி தெரியவில்லை.

சிம்ரனின் தந்தையாக நடித்திருப்பவர் ‘தல ‘ அஜித்தின் ஒன்றுவிட்ட தம்பி போலவே தோற்றமளிக்கிறார். ஆனால் அவரது பாத்திரம் இன்னதென்று பிடி படாததால் அவர் நல்லவரா, கெட்டவரா என்பதை கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை. 

ஜாவா சுந்தரேசனை இதில் மொபெட் சுந்தரேசனாக மாற்றி விட்டார்கள். 

செழிப்பான சென்னையையும், தூசி படிந்த காசியையும் ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ்குமார், சிறப்பாக படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.

அஸ்வமித்ரா இசையில் பாடல்கள் ரசிக்க வைத்திருக்கின்றன. நெடுங்காலம் கழித்து படம் முடிந்தும் பாடல்கள் மனதில் ஒலிக்கின்றன. பின்னணி இசையும் ஓகே.

அசோக் அமிர்தராஜின் கதை மற்றும் வசனம் சினிமா பார்த்து சினிமாவாகவே எழுதப்பட்டதாகவே இருக்கிறது. எனவே இயல்பான வாழ்க்கை சுவாரசியங்கள் குறைவாக இருக்கின்றன.

திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் ஆர்.மகாலக்‌ஷ்மி முருகன், திரைக்கதையை இன்னும் நம்பகமாக எழுதியிருக்கலாம். 

தன் கூடவே இருந்து குழி பறிக்கும் நண்பர் குறித்து கடைசி வரை சிம்ரனின் அப்பா எதுவுமே தெரிந்து கொள்ளவில்லை. 

அவரை விட்டுவிட்டு ஏன் சிம்ரன் அம்மா பிரிந்து போனார்கள் என்பதற்கு எந்தவிதமான விளக்கமும் இல்லை. கங்கை நதியில் இருந்து படகில் வந்து போகும் அம்மா, எளிதாக தொடர்பு கொள்ளும் நிலையில்தான் இருக்கிறார். இருந்தும் சிம்ரனின் வீட்டிலிருந்து வருடக் கணக்காக அவரை யாருமே தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை. ஏன்..?

கடைசியில் சிம்ரனை கூறு போட்டு உடல் பாகங்களை எல்லாம் திருடவிருந்த நேரத்தில் அதற்குக் காரணமானவர்கள் சாவதானமாக ஒரு Sorry சொல்லிவிட்டு மன்னிப்பும் பெறுகிறார்கள். கிளைமாக்சில் நின்று நடப்பவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

வடமாநிலத்தில் சந்துக்கு சந்து சோன்பப்படி கிடைக்கும் என்கிற நிலையில் காசியில் நள்ளிரவில் சோன்பப்படி வாங்கப் போய் ஆபத்தில் சிக்கும் சிம்ரனை என்னவென்று சொல்வது..?

லவ் சப்ஸ்கிரைப் ஷேர் – புதியவர்களின் முயற்சிக்கு ஒரு ‘லைக்..!’ போட்டு விட்டுப் போகலாம்..!

– வேணுஜி