குடிப்பழக்கத்தால் விளையும் தீமைகள் குறித்து அனேக படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், அதற்கெதிரான போராட்டத்தை முன்னிறுத்தி வந்த படங்கள் குறைவு.
அந்த வகையில் தங்கள் கிராமத்தினர் வாழ்க்கையில் குடியேறி குடி கெடுத்த குடியை ஒழிக்க அந்த மண்ணின் மகள் குயிலி என்ன செய்தார் என்பதை பட்ஜெட்டுக்கு பங்கம் வராமல் தந்திருக்கிறார் இயக்குனர் பி.முருகசாமி.
கொஞ்சமும் சினிமாத்தனம் இல்லாத நாயகன் ரவிச்சா, நாயகி தஷ்மிகாவை இந்தப்படத்தில் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது.
அமைதியாக இருந்த கிராமத்தில் வில்லன் மதுவை இலவசமாக அறிமுகம் செய்ய, கொஞ்சம் கொஞ்சமாக கிராமத்தினர் அதற்கு அடிமையாகத் தொடங்குவதில் இருந்து ஆரம்பிக்கிறது படம்.
ஒழுக்கமான ஓவியராக இருக்கும் ரவிச்சா, பக்கத்து வீட்டு குயிலி என்கிற தஷ்மிகாவைக் காதலிக்கிறார். குடியால் தன் தந்தை இறந்த நிலையில் ரவிச்சாவின் ஒழுக்கத்துக்காக அவரைத் திருமணம் செய்து கொள்கிறார் தஷ்மிகா.
ஒரு குழந்தையும் பிறக்க, வருமானத்துக்காக பல வேலைகளையும் மேற்கொள்ளும் ரவிச்சா, செங்கல் சூளையில் வேலை செய்யும்போது காலில் அடிபட, வலி தெரியாமல் இருக்க குடிக்க ஆரம்பிக்க அதுவே பழக்கமாகி ஒருநாள் போதையில் கொலை செய்யப்படுகிறார்.
அதில் வெகுண்டெழும் தஷ்மிகா மதுக்கடையை கொளுத்தி விடுகிறார். இதன் மூலம் செவ்வாடைத் தோழர் ஒருவர் அறிமுகம் கிடைக்க, அவர் மூலம் கம்யூனிச நூல்களைப் பயின்று ‘தோழர் குயிலி’ ஆகிறார்.
வருடங்கள் உருண்டோட அந்த மாற்ற முதிர்ச்சியை காட்ட தஷ்மிகா பாத்திரத்தில் இப்போது லிசி ஆண்டனி வருகிறார். அவரது மகனும் பெரியவனாகி பள்ளியில் படிக்கிறான். அவனும் ஒழுக்கமாக வளர வேண்டி ஹாஸ்டலில் சேர்த்து விடுகிறார் லிசி .
அங்கே நன்றாக படித்து ஐஏஎஸ் ஆகும் மகன் தனது ஊருக்கே கலெக்டராக வரும்போது ஆனந்தம் கொள்ளும் லிசி, இப்போது அவனது அதிகாரத்தை வைத்து மதுக்கடைகளை ஒழிக்க சபதம் மேற்கொள்கிறார்.
ஆனால் அவர் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்ற அளவில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழ கடைசியில் குயிலி என்ன முடிவெடுத்தார் என்பதுதான் கிளைமேக்ஸ்.
குயிலி என்ற வேடமேற்ற தஷ்மிகா மற்றும் லிசி இருவருமே பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அதில் நமக்கு நன்றாக அறிமுகமான லிசி ஆண்டனி அந்த பாத்திரத்தின் மனமுதிர்ச்சிக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார்.
பாதிப் படத்தில்தான் வரும் பாத்திரம் என்றாலும் ரவிச்சா, தேவையை நிறைவேற்றி இருக்கிறார்.
ஐஏஎஸ் படித்து கலெக்டர் ஆகும் லிசியின் மகனாக படத்தை தயாரித்திருக்கும் வி. வி. அருண்குமாரே நடித்திருப்பது ஆகப்பெரிய ஆச்சரியம். அவர் பார்ப்பதற்கு உண்மையிலேயே கலெக்டர் போல் இருப்பது அதைவிட ஆச்சரியம். அவரும் தேவையை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஆனால் ஒழுக்கமாக வளர்க்கப்பட்ட அவர் ஏன் ஒரு கலெக்டராக வந்தும் அறம் தவறி ஏன் நடக்கிறார் என்கிற கேள்வி எழாமல் இல்லை.
படத்தில் காமெடியன் வேண்டும் என்ற தேவையை நிறைவு செய்திருப்பவர் படத்தை இயக்கியிருக்கும் முருகசாமிதான் என்பதும் ஆச்சரியமே. அவர் நகைச்சுவை நடிகராகவே தன் பயணத்தைத் தொடர்ந்தாலும் கூட சினிமாவில் வெற்றி பெறுவார்.
சினிமாவுக்கான இலக்கணங்கள் எதையும் கண்டுகொள்ளாமல் கண்ணுக்கு முன் இயல்பாக நகரும் காட்சிகளாக கோணங்களை அமைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரவீன் ராஜ்.
அதேபோல் ஜோ ஸ்மித்தின் இசையும் படத்தின் தன்மைக்கும் பட்ஜெட்டுக்கும் தோதாக ஒலிக்கிறது.
நான்கு சண்டை, ஒரு குத்து டான்ஸ், சில காதல் காட்சிகள் என்று ஒரு படத்தை எடுத்து விட்டுப் போகாமல் இந்த சமுதாயத்துக்கு தங்களால் ஆன பங்களிப்பைத் தர வேண்டும் என்று முடிவெடுத்து அதை முயற்சித்து இருக்கும் தயாரிப்பாளரையும், இயக்குனரையும் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.
அதிலும் அந்த கிளைமாக்ஸ்… “பிளாஸ்ட்..!”
மற்றபடி பெரிய படங்களிலேயே பல குறைகள் இருக்கும்போது இந்த சின்னப் படத்தில் இருக்கும் குறைகளை மன்னித்து விட முடியும்.
குயிலி – புரட்சிப் பெண்..!
– வேணுஜி