கன்னடத்தில் முனி ரத்னா எழுதி தயாரித்து நாகன்னா இயக்கியுள்ள குருக்ஷேத்ரம் 3டி படத்தினை தமிழில் கலைப்புலி எஸ் தாணு வெளியிடுகிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலைப்புலி எஸ். தாணு பேசியதிலிருந்து…
“1985ல் நான் தயாரித்த முதல் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுனை நடிக்க வைத்தேன். இப்போது இப்படத்தில் அவரது நடிப்பு அற்புதமாக அமைந்துள்ளது. காதல், நட்பு, சகிப்புத்தன்மை என அனைத்தும் இப்படத்தில் அடங்கியுள்ளது.
கர்ணன் என்றால் நினைவிற்கு வருவது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘கர்ணன்’ தான். ஆனால், இப்போது இந்தப்படம் நினைவுக்கு வரும் அளவில் அர்ஜூன் இதில் நடித்திருக்கிறார். இயக்குனர் நாகன்னா பிரமாண்டமாக இயக்கி அதிக பொருட்செலவில் முனிரத்னா அவர்கள் தயாரித்த இப்படத்தை தமிழில் வெளியிடுவது மகிழ்ச்சியளிக்கிறது . படம் நிச்சயம் மாபெரும் வெற்றி அடையும்..!”
அர்ஜூன் பேசியதிலிருந்து…
“இந்தப்படம் கன்னடத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.நான் விரும்பிய பாத்திரத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய பாக்கியம். அஜித் படத்தின் 50 வது படத்தில் நான் இருந்தது போல, கன்னட ஹீரோ தர்சனின் 50 வது படத்திலும் நான் நடித்துள்ளேன். படத்தில் நான் நடித்ததை விட வெற்றி பெற்ற ஒரு படத்தில் நான் நடித்தேன் என்பது எனக்கு பெருமை.
கனல் கண்ணனின் சண்டைப்பயிற்சி முலம் கிளைமாக்ஸ் கதாயுதம் மூலம் நடக்கும் சண்டை வியக்கத்தக்க அளவில் வந்துள்ளது .இந்தப் படம் வளரும் தலைமுறையினர் பார்க்க வேண்டிய படம், ஏனெனில் இது நம் கலாச்சாரத்தை விவரிக்கும் படம்..!”
2டி மற்றும் 3டியில் உருவாகியிருக்கும் குருஷேத்ரம் படத்தில் பீஷ்மராக அம்பிரிஷ், துரியோதனன் ஆக தர்ஷன்,கர்ணன் ஆக அர்ஜுன் சார்ஜா, பீஷ்மர் ஆக அம்பரீஷ், கிருஷ்ணர் ஆக வி. ரவிச்சந்தர், அர்ஜுனன் ஆக சோனு சூட், சகுனி ஆக ரவி ஷங்கர், திரௌபதி ஆக ஸ்நேகா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். ஹரி கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.
நாளை (ஆகஸ்ட் 15) இப்படம் வெளியாக இருக்கிறது.