தலைப்பைப் பார்த்தாலே இது விஜய் ஆண்டனி நடித்த படம் என்று கோலிவுட்டில் குழந்தை கூட சொல்லி விடும். இந்த அளவுக்கு நெகடிவ்வான டைட்டிலில் நடிக்க அவரை விட்டால் வேறு ஆளில்லை.
இதில் ஆக்ஷன் கிங் அர்ஜுனும் இணைந்து நடித்திருப்பது விஜய் ஆண்டனிக்குப் பெருமையான விஷயம் எனலாம்.
படத் தொடக்கத்தில் கதாநாயகியை ஒரு நபர் கொல்கிறார். அடுத்த காட்சியில் விஜய் ஆண்டனி கொலை செய்ததற்காக சரண் அடைகிறார். நிச்சயம் பார்வையளர்களின் மனம் இரண்டையும் முடிச்சுப் போட்டுக் கொள்ளும். கொலை நடந்தது நிஜம். இவர் கொலை செய்ததும் நிஜம். ஆனால், யாரை யார்… ஏன் என்பதுதான் கதையின் சுவாரஸ்ய முடிச்சு.
ரஜினி, அஜித், விஜய்க்கென்றே ஸ்கிரிப்டுகள் தயாரிப்பது போல் விஜய் ஆண்டனிக்கும் கோலிவுட் இயக்குநர்கள் ஸ்கிரிப்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். அதிகமாக அலட்டிக் கொள்ளாத ஒரு நாயகனின் பிம்பம்தான் விஜய் ஆண்டனியின் ‘டிரேட் மார்க்’ என்பதால் அவரை நாடி அப்படியே ஸ்கிரிப்டுகள் வந்து கொண்டிருக்கின்றன.
இதிலும் அவர் நடிப்பதற்காக அலட்டிக் கொள்ளவில்லை… காதலிக்க மெனக்கெடவில்லை… ஆக்ஷனுக்காக ஆர்ப்பரிக்கவில்லை. ஆனால், படம் முழுவதும் அவர்தான் நிறைந்து இருக்கிறார். அதிகம் பேசாத, சீரியஸான… அழுத்தமான பாத்திரம் அவருக்கு. அவரும் அலட்டிக்கொள்ளாமல் அதைச் சுமந்து கடக்கிறார்.
பாடல் காட்சிகளில் காதலியின் நிழல் கூட படாத தூரத்தில் பாதுகாப்பாக நின்று பாடுவதும், காதல் காட்சிகளில் கூட ‘ரோபோ’ உணர்வையே பிரதிபலிப்பதும் ரொம்ப ஓவர். பின்பாதியில் மனைவி இறந்த நிலையில் அவர் வெடித்துச் சிதறும் காட்சியில் கைத்தட்டல் பெறுகிறார்.
எத்தனை வயதானாலும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள அர்ஜுனிடம் பாடம் படிக்க வேண்டும். ஆனால், இந்தப்படத்தில் அவர் உடல் வலிமையைவிட மூளை வலிமை மிக்க வேடம் ஏற்றிருக்கிறார். கொலைகாரன் அருகிலேயே இருந்தும் சரியான பிடி கிடைக்காமல் பொருமுவதிலும், ஆனால், கடைசியில் அத்தனை விஷயங்களையும் கண்டுபிடித்து மனசாட்சியுடன் அதற்கான தர்மத்தை நிலைநாட்டி பெருமிதம் கொள்வதிலும் அன்டர்பிளேவில் பின்னி எடுத்திருக்கிறார்.
“ஒரு நட்சத்திர ஓட்டலில் சர்வைலன்ஸ் கேமரா இருக்காதா…?” என்று உடலிருக்கும் கான்ஸ்டபிள் அங்கலாய்க்க, “ஹாஸ்பிடல்லயே கேமரா இல்லைன்னாங்க. நாம நம்பலையா..?” என்று ஒரு பஞ்ச் வைக்கிறாரே அர்ஜுன்… அது பல ஆக்ஷன் சீக்குவன்ஸுக்கு சமம்.
ஒரு அனுபவம் வாய்ந்த நடிகை நடிக்க வேண்டிய கேரக்டரில் புதுமுகம் ஆஷிமா நர்வல், சமாளித்து நடிக்கிறார். வில்லனைப் பார்த்து பயந்து அம்மாவின் மார்பில் சாய்ந்து ஆறுதல் தேடுகையில் குழந்தையாகிறார். மற்றபடி சாகப் பட்சிணியான விஜய் ஆண்டனியின் காதலியாக வருவது குறித்து எந்த பயமுமில்லாமல் அவரது காதலியாகவும், மனைவியாகவும் இலகுவாக நடித்துவிடுகிறார்.
ஆஷிமாவின் அம்மாவாக சீதா அளவாகப் பொருந்துகிறார். அர்ஜுனுக்கு உதவும் சீனியர் அதிகாரியாக நாசர் நயம்பட நடித்திருக்கிறார். பல வருடங்களாக அடியாளாகவே இருந்த சம்பத்ராமுக்கு முக்கிய வில்லனாக இந்தப்படத்தில் புரமோஷன் கிடைத்திருக்கிறது.
சைமன் கே.கிங் இசையில் ‘கொல்லாதே…’ ஹிட்டடித்திருக்கிறது. அவரது பின்னணி இசையும் பாடலைப் போன்றே மனதில் நெடுநேரம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. முகேஷின் ஒளிப்பதிவும் படத்தை ரசிக்க முக்கியக் காரணியாகியிருக்கிறது.
கடினமான இரண்டாவது பாதிப்படத்தில் குழப்பமில்லாமல் விறுவிறுப்பாகக் கடந்து விடும் இயக்குநர் ஆன்ட்ரூ லூயிஸ் எளிதான முதல் பாதியில் இன்னும் கூட வேகத்தைக் கூட்டியிருக்கலாம்.
திரில்லர் நாவல் படிக்கும் அனுபவத்தைப் படத்தில் தருவது ஒரு வகை. அதில் இது புது வகை.
கொலைகாரன் – நல்ல ரசனையில் கொள்ளைக்காரனும் கூட..!