July 11, 2025
  • July 11, 2025
Breaking News
June 12, 2025

உயிர்காக்கும் ஆதரவு செயல்பாட்டில் 1500 நாட்களைக் கடக்கும் காவேரி மருத்துவமனை..!

By 0 52 Views

தமிழ்நாடெங்கிலும் உயிர்காக்கும் ஆதரவு செயல்பாட்டில் 1500 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் காவேரி மருத்துவமனையின் 24×7 நீரிழிவு உதவி எண்… 

சென்னை, ஜூன் 12, 2025 – காவேரி மருத்துவமனையின் 24×7 நீரிழிவு உதவி எண் (88802 88802) ஏப்ரல் 21, 2021 அன்று தொடங்கப்பட்டதிலிருந்து 1500 நாட்களுக்கு தடங்கலற்ற நேர்த்தியான சேவையை வழங்கியிருப்பதன் வழியாக தனது பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. சென்னையில் நீரிழிவு நோய்க்கான சிகிச்சைக்கு பிரத்யேக உதவி எண்ணை நிறுவிய முன்னோடிகளில் ஒன்றாக, காவேரி மருத்துவமனை மக்களின் பேராதரவைப் பெற்றிருக்கிறது. இந்த முன்முயற்சி தமிழ்நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு ஒரு முக்கிய உயிர்நாடியாக மாறியுள்ளது. இது, எந்த நேரத்திலும் நிபுணத்துவமிக்க மருத்துவ ஆலோசனை, அவசரக்கால இடையீட்டு சிகிச்சை மற்றும் தினசரி நீரிழிவு மேலாண்மை ஆதரவை வழங்குகிறது.

நீரிழிவு சிகிச்சைக்கான உதவி எண் சேவையின் தாக்கத்தை அங்கீகரித்து கொண்டாடும் இந்நிகழ்வில், தமிழ்நாட்டின் மாண்புமிகு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் பங்கேற்றனர். இம்மருத்துவமனையின் தலைமைத்துவ மற்றும் சிகிச்சை பராமரிப்பு குழுவினருடன் இணைந்து, இந்த உதவி எண்ணின் தாக்கத்தை பாராட்டிய அமைச்சர் நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சை சேவைகளில் தொடர்ச்சியான புத்தாக்க உத்திகளை காவேரி மருத்துவமனை பயன்படுத்தி வருவதை குறிப்பிட்டு இதனை மேலும் பரவலாக்க வேண்டுமென ஊக்குவித்தார்.

இந்த உதவி எண்ணானது நீரிழிவு கல்வியாளர்கள், மருத்துவர்கள், உணவியல் நிபுணர்கள் மற்றும் தரவு-கண்காணிப்பு வல்லுநர்கள் அடங்கிய ஒரு பிரத்யேக சிறப்பு குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இரத்த சர்க்கரை அளவு திடீரெனக் குறைவதால் ஏற்படும் ஹைபோகிளைசீமிக் பாதிப்புகளின்போது (சரியான நேரத்தில் இதற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மயக்கம், குழப்பம் அல்லது கோமா நிலை ஏற்படுவதற்கு இது வழிவகுக்கும்) நோயாளிகளுக்கு உதவுவது முதல், நிகழ்நேர CGMS (தொடர்ச்சியான குளுக்கோஸ் கண்காணிப்பு அமைப்பு) தரவுகளை விளக்குவது வரை, இங்கு வழங்கப்படும் ஆதரவு தன்முனைப்புடன் முன்கூட்டியே செயல்படுவதாகவும், முழுமையானதாகவும் மற்றும் தனிப்பயனாக்கப்பட்டதாகவும் இருக்கிறது.

2024-ஆம் ஆண்டில் மட்டும், காவேரி மருத்துவமனையின் நீரிழிவு உதவி எண் 12,541 அழைப்புகளைக் கையாண்டுள்ளது. இது 2021-ஆம் ஆண்டில் பெறப்பட்ட 1,223 அழைப்புகளை விடப் பன்மடங்கு அதிகமாகும். கிடைக்கப்பெறும் அழைப்புகள் அதிகரித்திருப்பது, நீரிழிவு சிகிச்சையில் இந்த உதவி எண்ணின் முக்கியப் பங்கை பிரதிபலிக்கிறது. பெறப்பட்ட அழைப்புகளில், 0.89% அவசரகால அழைப்புகளாகும். இதில் பெரும்பாலானவை இரத்தச் சர்க்கரைக் குறைவு (ஹைபோகிளைசீமியா) தொடர்பானவை. இத்தகைய அவசரகால அழைப்புகள், உடனடி தொலைபேசி ஆதரவு மற்றும் தொடர் கவனிப்பு மூலம் திறம்பட நிர்வகிக்கப்பட்டன.

இச்சேவையை நோயாளிகள் அணுகிப் பயன்படுத்தும் திறனை மேம்படுத்தும் வகையில், இந்த உதவி எண் பல்வேறு மொழிகளில் ஆதரவையும், வாட்ஸ்அப் அடிப்படையிலான சேவைகளையும் வழங்குகிறது. இதன் மூலம் நோயாளிகள் தங்கள் குளுக்கோஸ் அளவுகள், பரிசோதனை அறிக்கைகள் மற்றும் நிழற்படங்களை உடனடியாகப் பகிர உதவுகிறது. மேலும், இதயம், சிறுநீரகம், மூளை மற்றும் இரத்த நாள அமைப்பு தொடர்பான நீரிழிவு சிக்கல்களை நிர்வகிப்பதற்கான மையப்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பு மையமாகவும் இச்சேவை அமைப்பு உருவாகி வருகிறது. இதன் மூலம் சரியான நேரத்தில் வழிகாட்டுதலும், சிறப்பு நிபுணர்களிடம் பரிந்துரைகளும் நோயாளிகளுக்கு கிடைப்பதை காவேரி மருத்துவமனை உறுதி செய்கிறது.

நிஜ உலகச் சூழ்நிலைகளில் சரியான நேரத்தில், அநேக நேரங்களில் உயிர்காக்கும் இடையீட்டு சிகிச்சைகளை சாத்தியமாக்கியுள்ளது என்ற இதன் சிறப்பியல்பே இந்த சேவையை உண்மையிலேயே தாக்கத்தை ஏற்படுத்துவதாக மாற்றியிருக்கிறது:

ஒரு சமயம், ரத்தச் சர்க்கரை அளவு குறைந்ததால் (மயக்கம் அல்லது தன்னிலையிழத்தலை குறைவான இரத்தச் சர்க்கரை அளவுகள் ஏற்படுத்தக்கூடும்) பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு, தொலைபேசி மூலம் விரைவாக செயல்படும் குளுக்கோஸை உட்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அவரது அறிகுறிகள் மேம்பட்டன; மருத்துவக் குழுவினால் செய்யப்பட்ட தொடர் அழைப்புகள் அந்நோயாளியின் நிலைத்தன்மையை உறுதிசெய்து – அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அவர் அழைத்து வரப்படுவதை அவசியமற்றதாக மாற்றின. 

மற்றொரு குறிப்பிடத்தக்க நிகழ்வில், கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண், மிக அதிக ஆபத்துள்ள சர்க்கரை அளவுகள் காரணமாக கருக்கலைப்பு செய்து கொள்வதை பரிசீலிக்குமாறு வேறொரு மருத்துவமனையில் அறிவுறுத்தப்பட்டார். காவேரி மருத்துவமனையின் உதவி எண் அவரை ஒரு தொடர்ச்சியான குளுக்கோஸ் கண்காணிப்பு திட்டத்தில் இணைத்துக் கொண்டு, நிகழ்நேர இன்சுலின் மற்றும் உணவுமுறை வழிகாட்டுதலை வழங்கியது. இக்குழுவின் நெருக்கமான கண்காணிப்பு மற்றும் ஆதரவுடன், அந்த கர்ப்பிணி பெண் ஆரோக்கியமான இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்தார்; நவீன தொழில்நுட்பமும் ஒருங்கிணைந்த குழுப்பணியும் உயிருக்கு ஆபத்தான கடும் ஆபத்துகளையும் முறியடிக்கும் என்பதை இது நிரூபித்திருக்கிறது.

வகை 1 நீரிழிவு நோய் பாதிப்புள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப துறை நிபுணர், நீரிழிவு கீட்டோ அமிலத்துவ பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகளை உணர்ந்தார் (இன்சுலின் குறைபாடு காரணமாக உடலில் கீட்டோன்கள் எனப்படும் அதிகப்படியான அமிலங்கள் உற்பத்தியாகி உயிருக்கு ஆபத்தான சிக்கலை உருவாக்கும்). நீரிழிவு உதவி எண் சேவை குழு இந்த அறிகுறிகளை விரைவாக அடையாளம் கண்டு, அவசரநிலை சிகிச்சைக்கு உடனடியாக மருத்துவமனைக்கு செல்வதை அறிவுறுத்தி, அவர் சரியான நேரத்தில் சரியான சிகிச்சை பெறுவதை உறுதி செய்தது; இதன் மூலம் அவரது உயிரை இச்சேவை காப்பாற்றியிருக்கிறது.

நீரிழிவினால் பாதப் புண் பாதிப்பைக் கொண்டிருந்த ஒரு நோயாளி, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு பயணிக்க முடியாத நிலையில், உதவி எண் மூலம் தொடர்ச்சியான மருத்துவ ஆதரவைப் பெற்றார். ஒவ்வொரு நாளும் வழங்கப்பட்ட தொலைதூர ஆலோசனைகள் மற்றும் நிழற்படங்கள் மூலம் புண்ணைக் கண்காணித்தல் ஆகியவை, மருத்துவமனையில் சேர்க்கப்படாமலேயே சரியான சிகிச்சையையும் குணப்படுத்துதலையும் அவருக்கு உறுதி செய்தன.

“நீரிழிவு ஒரு கால அட்டவணையை பின்பற்றுவதில்லை; அதைப்போலவே அதற்கான சிகிச்சைக்கும் கால அட்டவணை என்ற வரம்பு இருக்கக்கூடாது” என்று காவேரி மருத்துவமனையின் நீரிழிவு சிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் பரணீதரன் கூறினார். “சென்னையிலோ அல்லது தொலைதூர கிராமத்திலோ இருந்தாலும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நம்பகமான வழிகாட்டுதல் மற்றும் மருத்துவ ஆதரவு கிடைப்பதை உறுதிசெய்ய இந்த உதவி எண் சேவையை நாங்கள் தொடங்கினோம். ஒரே ஒரு எண்ணின் மூலம், நாங்கள் மருத்துவம் சார்ந்த, உணர்வு ரீதியான மற்றும் கல்விசார்ந்த உதவிகளை 24 மணி நேரமும் (24×7) வழங்குகிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.

“காவேரியில், நாங்கள் சுகாதார சேவையை தொடர்ச்சியானதாகவும், கனிவானதாகவும், எளிதில் அணுகிப் பெறக்கூடியதாகவும் மாற்ற பாடுபடுகிறோம்,” என்று காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறினார். “24×7 நீரிழிவு உதவி எண், இந்த தத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. அவசரகால சூழ்நிலைகளைக் கையாள்வதுடன், சரியான நேரத்தில் சரியான தகவலுடன் தங்கள் பாதிப்பு நிலைகளைக் கட்டுப்படுத்த இது மக்களுக்கு உதவுகிறது. 1500 நாட்கள் தொடர்ச்சியாக சேவை என்ற இந்த மைல்கல், இதன் மூலம் காப்பாற்றப்பட்ட உயிர்களுக்கும், இம்மருத்துவமனையின் தனித்துவமான சேவைக்கும் ஒரு சான்றாக திகழ்கிறது” என்று அவர் கூறினார்.

பண்டிகை நாட்களில் விருந்துகள், நள்ளிரவில் சர்க்கரை அளவு குறைவது, அல்லது CGMS போக்குகளைப் புரிந்துகொள்வது என எதுவாக இருந்தாலும், காவேரியின் 24×7 நீரிழிவு உதவி எண் (88802 88802) நீரிழிவு சிகிச்சையில் ஒரு நம்பகமான மற்றும் எப்போதும் உடனிருக்கும் தோழனாக உள்ளது. ஒரே ஒரு அழைப்பினை செய்வதின் மூலம் சிறப்பான ஆலோசனையையும், சேவையையும் பெற முடியும் என்பது இதன் தனிச்சிறப்பான அம்சமாகும்.