• வகை 2 நீரிழிவு நோய் குறித்த முந்தைய வரலாறு இல்லாத, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நபர்களில் 21% தங்கள் இரத்த சர்க்கரை அளவுகளில் உள்ள அசாதாரண நிலையை அறிந்திருக்கவில்லை.
சென்னை, ஏப்ரல் 16, 2025: – தமிழ்நாட்டில் பல்வேறு சிறப்பு பிரிவுகளுடன் இயங்கி வரும் உடல்நல பராமரிப்பு சங்கிலித் தொடர் நிறுவனமான காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான, காவேரி மருத்துவமனை ஆழ்வார்பேட்டை சென்னையில் உள்ள மக்களிடையே நீரிழிவு குறித்து நடத்தப்பட்ட ஒரு விரிவான ஆய்வின் முக்கிய கண்டறிதல் முடிவுகளை வெளியிட்டுள்ளது. நீரிழிவு நோய் குறித்த மேம்பட்ட விழிப்புணர்வு மற்றும் முன்தடுப்பு உத்திகளின் அவசரத் தேவையை இந்த ஆய்வின் முடிவுகள் வலுவாகச் சுட்டிக்காட்டுகின்றன.
சமுதாய சுகாதாரத்திற்கான தனது அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, இம்மருத்துவமனை 2024 இல் “டயாபடிஸ் ஆன் வீல்ஸ்” (நடமாடும் நீரிழிவு சிகிச்சை வாகனம்) என்ற திட்டத்தை தொடங்கியிருந்தது. இது ஒரு குறுக்குவெட்டு பரிசோதனை ஆய்வாகும். 100 நாட்களுக்கும் மேலாக சென்னை முழுவதும் இலவச நீரிழிவு நோய் பரிசோதனை முகாம்களை இத்திட்டத்தின் மருத்துவ பணியாளர்களது குழு நடத்தி ஆய்வை மேற்கொண்டது. இத்திட்டத்தின் கீழ் நகரின் பல்வேறு இடங்களில் 3,971 நபர்களுக்கு நீரிழிவிற்கான தொடக்கநிலை ஸ்கிரீனிங் சோதனை செய்யப்பட்டது.
இந்த முயற்சியானது ஆரம்ப நிலையிலேயே நீரிழிவைக் கண்டறிவதில் உள்ள முக்கியமான இடைவெளிகளை வெளிப்படுத்தியது மற்றும் வகை 2 நீரிழிவு நோய் (T2DM) அதிகரித்து வருவதற்கான குறிப்பிடத்தக்க ஆபத்து காரணிகளை (உடல் பருமன், உணவுப் பழக்கங்கள்) அடையாளம் காட்டியது.
ஆய்வின் முக்கிய கண்டறிதல் முடிவுகளுள் கீழ்கண்டவை உள்ளடங்கும்:.
• வகை 2 நீரிழிவு நோய் குறித்த முந்தைய வரலாறு இல்லாத நபர்களில் 21% பேர் தங்கள் இரத்த சர்க்கரை அளவுகளில் உள்ள அசாதாரண நிலையை (டிஸ்கிளைசீமியா) அறியவில்லை. நீரிழிவு தொடர்பாக ஆரம்பகால நோயறிதல் மற்றும் அதன் மீதான விழிப்புணர்வில் உள்ள குறிப்பிடத்தக்க இடைவெளியை இது சுட்டிக்காட்டுகிறது.
• கர்ப்ப கால நீரிழிவு நோய் (GDM) (கர்ப்ப காலத்தில் அதிக இரத்த சர்க்கரை அளவு) இருந்த பெண்களில் 55.1% பேருக்கு வகை 2 நீரிழிவு நோய் பிறகு உருவாகியிருக்கிறது. கர்ப்ப காலத்திற்குப் பிந்தைய நீரிழிவு நோய் பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை இத்தரவு எடுத்துக்காட்டுகிறது.
• வகை 2 நீரிழிவு நோய் வரலாறு உள்ள நபர்களிடையே (67.6%) உடல் பருமன் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக இருந்தது; தங்கள் இரத்த சர்க்கரை அளவுகளில் உள்ள அசாதாரண நிலையை அறியாத நபர்களிடையே (64.7%) உடல் பருமன் கணிசமாக அதிகமாக இருந்தது. இது, உடல் பருமனுக்கும் நீரிழிவு நோய்க்கும் இடையே உள்ள வலுவான தொடர்பை உறுதிப்படுத்துகிறது.
• தங்கள் இரத்த சர்க்கரை அளவுகளில் உள்ள அசாதாரண நிலையை அறியாத நபர்களிடையே மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளை (கார்போஹைட்ரேட்) உட்கொள்ளல் குறிப்பிடத்தக்க வகையில் அதிகமாக இருந்தது (88.5%). இது கண்டறியப்படாத இரத்த சர்க்கரை ஒழுங்கின்மைகளில் உணவுப் பழக்கம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை இந்த தரவு காட்டுகிறது.
காவேரி மருத்துவமனையின் மூத்த நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் பரணீதரன் K, இந்த ஆய்வின் நோக்கம் மற்றும் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறியதாவது: “இந்த ஆய்வின் கண்டறிதல் முடிவுகள் நீரிழிவு நோயை திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கு தன்முனைப்புடன் கூடிய பரிசோதனைத் திட்டங்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் பொது சுகாதார முன்னெடுப்புகளின் அவசரத் தேவையை வலியுறுத்துகின்றன. மேலும், சுகாதார பராமரிப்பு கொள்கைகளும், அரசாங்கத்தின் முயற்சிகளும் நீரிழிவு நோய் வராமல் தடுப்பதிலும் மற்றும் அதன் மேலாண்மைக்கும் மிகவும் ஆதரவான சூழலை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்க முடியும்.
இதன் மூலம் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு ஆதாரவளங்களும், சுகாதார திட்டங்களும் சென்றடைவதை உறுதிப்படுத்த முடியும். தினமும் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலமும், உடல் பருமனைத் தடுக்க கவனத்துடன் சமச்சீரான உணவை உட்கொள்வதன் மூலமும், மன நலனை அக்கறையுடன் பேணுவதன் வழியாகவும் கவனிப்பதன் மூலமும் பொதுமக்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கத் தொடங்க வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் போன்ற தொற்றா நோய்களைக் கண்டறிய குறிப்பிட்ட காலஅளவுகளில் செய்யப்படும் வழக்கமான பரிசோதனைகளும் பெரிதும் உதவும்.”
“உலகளவில் நீரிழிவு நோயின் பரவல் அதிகரித்து வருகிறது; இதற்கு பல காரணிகள் பங்களிப்பை செய்கின்றன.
பொறுப்புணர்வுடன் செயல்படும் சுகாதாரச் சேவை வழங்குநர்களாக, சிகிச்சையளிப்பதில் மட்டுமல்ல, நோய் வராமல் தடுப்பதிலும் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். சமூக மக்கள் மத்தியில் குறிப்பிட்ட காலஅளவுகளில் நடத்தப்படும் பரிசோதனைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம், இப்பகுதியில் நீரிழிவு நோயின் சுமையை குறைப்பது எமது குறிக்கோளாகவும், இலக்காகவும் இருக்கிறது.
இந்த சிறப்பான ஆய்வு முயற்சியை மேற்கொண்ட டாக்டர் பரணீதரன் மற்றும் குழுவினரை நான் மனமார பாராட்டுகிறேன், இது மக்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்று காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறினார்.