May 23, 2026
  • May 23, 2026
Breaking News
May 16, 2026

கருப்பு திரைப்பட விமர்சனம்

By 0 38 Views

கருப்பு கோட்டு போட்ட வழக்கறிஞர்கள் நீதி மன்றத்துக்குள் நடக்கும் லஞ்ச லாவண்யங்களை கண்டும் காணாமல் நடமாடும் சிலைகளாக இயங்கிக் கொண்டிருக்க, நீதிமன்ற வாசலில் சிலையாக அமர்ந்திருக்கும் கருப்பசாமிக்கு கோபம் வந்து அவரே சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்ளும் கதை.

கடவுளே வந்தாலும் காரியம் ஆக வேண்டுமானால் கணக்கில்லாமல் காசை விசினால்தான் முடியும் என்றிருக்கும் வழக்கறிஞர் ஆர்.ஜே.பாலாஜி ஒரு அராத்து டீமை வைத்துக்கொண்டு அதற்காகவே வழக்குகளை இழுத்தடித்துக் கொண்டிருக்க, அவரிடம் வசமாக வந்து சிக்குகிறார் கேரளத்திலிருந்து மகளின் உயர் சிகிச்சைக்காக சென்னை வந்து நகைகளைப் பறிகொடுக்கும் இந்திரன்ஸ்.

போலீஸ் ஒருபக்கம் நகைகளைப் பிடித்துவைத்துக் கொள்ள, மீதி இருக்கும் நகைகளை நீதிமன்றம் மூலமாகத்தான் பெற வேண்டிய நிலையில், ஆர். ஜே.பாலாஜியின் அறிமுகம் கிடைத்து கையிலிருக்கும் காசையும் இழக்கிறார் அவர்.

அடுத்து என்ன செய்வதென்று தெரியாத நிலையில் நீதிமன்ற வாசலில் இருக்கும் கருப்புசாமிக்கு மிளகாய் அரைத்துப் பூசி வேண்டிக்கொள்ள, அந்தக் கேசை சூர்யா ரூபத்தில் வந்து கருப்பு ஏற்கிறார்.

ஆனால் கடவுளை கண்டெல்லாம் அசராத ஆர் .ஜே.பாலாஜி, சாமியிடம் மனிதன் சத்தியம் செய்து கொடுப்பது போல், தனது சக்தியை எல்லாம் விட்டுவிட்டு சாமானிய மனிதனாக வந்து வாதாடி வெல்ல வேண்டும் என்று சாமியையே சத்தியம் செய்யவைக்கிறார்.

சாமியின் சத்தியம் சாத்தியமானதா என்பதுதான் மீதிக் கதை.

படம் ஆரம்பித்து அரை மணிநேரம் கழித்துதான் சூர்யாவே வருகிறார். அதுவரை இது சூர்யாவின் படம் என்பதையே மறக்கும் நாம் ஆர்.ஜே.பாலாஜியின் அட்ராசிட்டிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதற்குப் பின் வரும் சூர்யா முன்பாதியில் இருப்பது கொஞ்சம் நேரம்தான் என்றாலும் கடவுளாக வருவதால் முக்கியத்துவம் பெறுகிறார். அதுவும் கடவுள் காஸ்ட்யூமில் வரும்போது திருவிளையாடல் சிவாஜி கணேசனை நினைவுபடுத்துகிறார்.

கயவர்கள் மீது கடுமையையும், அண்டிவந்த எளியவர்கள் மீது கருணையையும் தன் கண்களிலேயே காட்டிக் கவர்கிறார்.

கருப்பாக வரும்போது போடும் காட்டு ஆட்டமும் வேற லெவல்.

இனி நடிகராகவும் அடுத்த இன்னிங்ஸ் தொடங்கி விடுவார் போலிருக்கிறது ஆர்.ஜே. பி. அதற்கு, தான் இயக்கிய இந்த படத்திலேயே பலமான அஸ்திவாரமும் போட்டு விட்டார். சூர்யாவுக்கு அவர்தான் மெயின் வில்லனே. 

நல்ல வழக்கறிஞராக வரும் த்ரிஷா பல காட்சிகளில் ஏஐ பொம்மை போல இருக்கிறார். படத்தின் நாயகியாக இருந்தாலும் சூர்யா கடவுளாக வருவதால் அவரைக் காதலிக்க முடியவில்லை. எனவே சின்ன சின்ன உதவிகள் செய்து ஒரு பாடலில் சூர்யாவுடன் ஒரு ஆட்டம் மட்டும் போடுகிறார்.

(அ)நீதிபதியாக நடித்திருக்கும் நட்டி, தன் பாவனைகளிலேயே வில்லத்தனம் செய்கிறார்.

நடிப்பில் மிரட்டி இருக்கிறார் கேரள வரவான இந்திரன்ஸ். இந்தச் சின்ன உருவத்துக்குள் அப்பாவித்தனத்தையும் ஆத்திரத்தையும் இத்தனை அழகாக இன்னொரு நடிகரால் காட்ட முடியுமா தெரியவில்லை. 

அவரது மகளாக வரும் பெண்ணும் அளவாக நடித்து கவனம் பெறுகிறார். அசப்பில் மமிதா பைஜு போன்று இருப்பவர் நாயகியாக முயற்சி செய்தாலும் ஒரு ரவுண்டு வர முடியும். 

சாய் அபயங்கரின் இசை மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. பின்னணி இசையில் அவர் எந்தக் குறையும் வைக்கவில்லை. பாடல்களை மட்டும் புரியும்படி இசைத்திருக்கலாம்.

ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவில் இயல்பான காட்சிகள் அழகாகவும் இயல்புக்கு மீறிய கற்பனை காட்சிகள் டெரராகவும் இருக்கிறது. கருப்பு வரும் காட்சிகளில் அவ்வளவு சிவப்பை ஏன் பயன்படுத்தினார்கள்..? சராசரி ரசிகனை மிரள வைப்பதற்காகவா?

மூக்குத்தி அம்மனுக்குப் பிறகு கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் ஆர்.ஜே.பாலாஜிக்கு, இதில் கருப்புசாமியும் கை கொடுத்திருக்கிறார். 

பகுத்தறிவுடன் பார்த்தால் நம்பகமில்லாத கதையாக இருந்தாலும், பக்தியுடன் பார்த்தால் நம்புபவர்கள் மெய்சிலிர்ப்பார்கள்.

சரி… சட்டத்துறையில்தான் இனி கருப்பின் ஆட்சி நடக்கும் போல… என்று பார்த்தால் கடைசி கடைசியாக சூர்யாவை வைத்து காவல்துறையிலும்… ஏன் அரசியலிலும் கூட கருப்பின் ஆட்டம் தொடரும் என்பதாக நம்ப வைத்து இருக்கிறார் ஆர்.ஜே.பி.

சூர்யாவின் அரசியல் பிரவேசம் இப்படியாக இருக்கும் என்று கணிக்கிறாரா அவர்..?

கருப்பு – சிறப்பு..!

– வேணுஜி