‘வாழ்க்கையே நிலையானது அல்ல.!’ எனும் போது வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் மட்டும் எப்படி மாறாமல் இருக்கும்..?
அப்படி நாயகன் ஜெய் வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் அவரை எந்த அளவுக்கு சிக்கலுக்கு உலகுகிறது – அதிலிருந்து அவரால் வெளிவர முடிந்ததா என்பதுதான் கதையின் மையக்கரு.
நாயகி மீனாட்சி கோவிந்தராஜனைக் கண்டதும் காதல் கொள்கிறார் ஜெய். மீனாட்சி யின் அழகாலா? என்றால் “ஆமாம். ஆனால் புற அழகால் அல்ல… அகத்தின் அழகால்..!” என்று ஓரிடத்தில் காரணம் சொல்கிறார் ஜெய்.
அப்படி என்ன மீனாட்சியிடம் அக அழகைப் பார்த்தார் என்றால் பிச்சைக்காரர்களுக்கு உணவு வாங்கித் தருவதோடு அவரது பரிவு முடியாமல் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார் மீனாட்சி. இதைப் பார்த்ததும்தான் சொந்த பந்தங்கள் இல்லாமல் தனிமையில் வளர்ந்த ஜெய்க்கு அவர் மீது காதல் பிறக்கிறது.
தலையை சுற்றி மூக்கை தொடும் வழக்கமாக இல்லாமல் நேரடியாக மீனாட்சியிடம் சென்று, “என்னை கல்யாணம் பண்ணி கொள்கிறாயா..?” என்று நெற்றியில் அடித்த மாதிரி கேட்டு விடுகிறார். பதிலுக்கு மீனாட்சியும், “உடனே கூட்டிக்கொண்டு போ..!” என்கிறார். உடனடியாக கல்யாணமும் நடக்கிறது.
ஆனால் திருமணம் மார்க்கெட்டில் மீனாட்சிக்கு ஏக டிமாண்ட் இருக்கிறது. ஒரு பக்கம் அமைச்சரும், அரசியல்வாதியுமான அப்பா, தன் அரசியல் காட்பாதர் சரவண சுப்பையாவுக்கு மீனாட்சியை இரண்டாம் தரமாக திருமணம் செய்ய பேசி வைத்திருக்கிறார்.
இன்னொரு பக்கம் தொழிலதிபர் வீட்டு பிள்ளை மீனாட்சியின் ஏகபோக சொத்துக்கு ஆசைப்பட்டு அவரை அடைய நினைத்து காதலிப்பதாக சுற்றிச் சுற்றி வருகிறார்.
இந்த நிலையில் மீனாட்சியை ஜெய் திருமணம் செய்து கொண்டு போனால் சும்மா விடுவார்களா..? இவற்றையெல்லாம் தாண்டி வில்லன் கருடா ராம் வடிவில் மூன்றாவது காரணமும் ஜெய்யை துரத்துகிறது.
அத்துடன் நான்காவது பேரிடியாக மீனாட்சியே ஒரு கட்டத்தில் ஜெய்யிடம் கோபித்துக் கொண்டு பிரிந்து போய் விடுகிறார். அதற்குப் பின் பணக்கார வீட்டு பிள்ளைக்கு அவரை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடக்க… இந்நிலையில் மீனாட்சியை காணவில்லை. அந்தப் பழியும் ஜெய் மீது விழுகிறது.
இந்த பிரச்சனைகள் எல்லாம் எப்படி முடிவுக்கு வந்தன என்று சொல்வதுதான் இந்தப் படத்தின் மொத்தக் கதை.
சும்மாவே விஜய் சாயலில் இருக்கும் ஜெய் விஜய்யின் மேனரிசங்களை பண்ணிக் கொண்டிருப்பார். இதில் விஜய் ரசிகராகவும் வருகிறாரா..? கேட்கவே வேண்டியதில்லை.
ஒரு கட்டத்தில் ஜெய்யுடன் வேலை பார்க்கும் யோகி பாபு… “ஐயோ இந்த திடீர் தளபதியின் இம்சை தாங்கல. நேரே பனையூர் போய் அவர் காலில் விழுந்து நீங்கள் திரும்பவும் நடிக்க வாங்க என்று சொல்லிட வேண்டியதுதான்..” என்று புலம்பும் அளவுக்கு இருக்கிறது ஜெய் யின் அலப்பறை.
ஆனால் மீனாட்சி போன்ற அழகிய பெண்ணை காதலிக்கும் போது கூட, சற்றே சீரியஸாகவே அவர் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.
மீனாட்சி கோவிந்தராஜன் அழகைப் போலவே பாத்திரம் உணர்ந்து நடிக்கவும் செய்கிறார். ஆனால் ஒரு அமைச்சரின் மகள் உயர் கல்வி எல்லாம் படிக்காமல் கல்யாணத்துக்கு பிரைடல் மேக்கப் போடும் வேலையை ஏன் செய்ய எப்படி தயார் ஆனர் என்பது புரியவில்லை.
வழக்கமான சினிமா ஆபீஸ் செட்டப் போலவே, அரைகுறை ஆங்கிலம் பேசும் சத்யன் பொறுப்பில் ஜெய் பணியாற்றும் நிறுவனம் இயங்க, அங்கே யோகி பாபு மற்றும் ஆதித்யா கதிர் போன்ற காமெடியன்கள் எல்லாம் பெண்களிடம் ஜொள்ளுவிட்டபடி வேலை செய்ய… ஒரே காமெடிதான் போங்க..!
வில்லனாக வரும் கருடா ராம், அத்தனை பெரிய ஹை டெக் தொழிலதிபர் ஆக இருக்க, செய்யும் தொழில்தான் அற்பமாக இருக்கிறது.
காவல் அதிகாரி ஸ்ரீமன், அமைச்சர் சரவண சுப்பையா தங்கள் அனுபவ நடிப்பால் குறை இலலாமல் செய்திருந்தாலும், அவர்களது பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருக்கிறது.
ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவில் படம் தேவலோகத்தில் நடப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியிருக்கிறது. அத்தனை கலர்ஃபுல்லான காட்சிகள்.
அத்துடன் அவரும் ஒரு பாத்திரத்தில் வந்து நடிகராகவும் அடையாளம் தெரிந்திருக்கிறார்.
கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்கள் இளமைத்துள்ளலாக இருப்பதுடன், பின்னணி இசை படத்தின் வேகத்திற்கும் பொருத்தமாக இருக்கிறது.
படத்தை எழுதி இயக்கியிருக்கும் பாபு விஜய், பபொது இடங்களில் தங்க நேரும் இளசுகள் எத்தனை கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு அபாய சங்கை ஊதியிருக்கிறார்.
இன்றைய ஹை டெக் புரட்சியில் நம்மைச் சுற்றிலும் இருக்கும் ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட உபகரணங்கள் நம்முடைய அந்தரத்துக்கு விடப்பட்ட சவால்களாக மாறிக்கொண்டு வருவதையும் சொல்லி எச்சரித்து இருக்கிறார்.
அதை வெறும் எச்சரிக்கையாக சொல்லாமல் இளமையான காதல் கதையுடன் இணைத்து சொல்லியிருப்பதில் நேர்த்தியான இயக்குனராக அடையாளப்பட்டு இருக்கிறார்.
கொஞ்சம் லாஜிக்குகள் சறுக்காமல் திரைக்கதை அமைத்திருந்தால் இன்னும் படத்தை ரசித்திருக்க முடியும்.
சட்டென்று மாறுது வானிலை – ஜாக்கிரதையாக கையாளுங்க காதலை..!
– வேணுஜி