அம்மா தரும் உணவு மட்டும் அதிகம் சுவைப்பதற்குக் காரணம், உணவுடன் பாசத்தையும் சேர்த்து அம்மா பிசைந்து கொடுப்பாள் என்று ஒரு சொல்லாடல் உண்டு.
அதைப்போலவே அதிகம் நம் படங்களில் கையாளப்படாத சயின்ஸ் பிக்சன் வகையறா யுக்திகளிலும் அந்தத் தாய் பாசத்தைப் பிசைந்து கொடுத்தால் அந்த படம் ருசிக்கும் என்று நமக்கு உணர்த்தி இருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குனர் ஸ்ரீ கார்த்திக்.
அதிலும் அம்மாவை இழந்த குழந்தைகளுக்குதான் தெரியும் அந்த சோகம் எப்பேர்ப்பட்ட வலியைத் தரும் என்பது. அப்படி இழந்த அம்மாவை அவள் பெற்ற பிள்ளை மீண்டும் சந்திக்க நேர்ந்தால்..?
இந்த கற்பனையே எவ்வளவு மகத்துவமாக இருக்கிறது..? இந்த சாத்தியமில்லாத விஷயத்தை சயின்ஸ் பிக்சன் மூலம் சாத்தியப்படுத்தி அந்த அற்புதத்தை நமக்கு புனைவாகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
குற்றமற்ற முகம் கொண்ட சர்வானந்த்தான் இந்த படத்தின் ஹீரோ. சிறுவயதிலேயே அம்மாவை இழந்து அப்பா ரவி ராகவேந்திராவுடன் வாழ்ந்து வரும் அவருடன் குழந்தைப் பருவத்தில் இருந்து சதீஷும், ரமேஷ் திலக்கும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.
ஒரு கட்டத்தில் அவர்கள் மூவரும் விஞ்ஞானி நாசரைச் சந்திக்க நேர, டைம் மெஷின் ஒன்றைத் தயாரித்து வைத்திருக்கும் அவர் அவர்கள் மூவரையும் அவர்களுடைய கடந்த காலத்துக்கு அனுப்புகிறார். அப்படி அனுப்புவதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் இழந்ததை சரிப்படுத்தி மீண்டும் அடைய முடியும் என்பதுடன் இந்த ஆராய்ச்சியில் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சக விஞ்ஞானி நண்பரை உயிருடன் கொண்டு வர முடியும் என்பதுவும் திட்டம்.
அந்தத் திட்டம், திட்டமிட்டபடி வெற்றி பெற்றதா என்பதுடன் அவர்கள் மூவரும் பெறும் அதிசய அனுபவங்கள்தான் இந்தப் படத்தின் சுவாரஸ்யம்.
இந்த அம்மா கதையில் அம்மாவாக யார் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருந்திருக்கும். அந்த வேடத்தில் 80 களில் கனவுக்கன்னியாக இருந்த அமலா நாகார்ஜூனாவை அழைத்து வந்து நடிக்க வைத்திருக்கிறார்கள்.
அமலா, அம்மா வேடத்துக்கு பொருத்தமாக இருக்கிறாரா என்பது ஒரு புறம் இருக்க அந்த வேடத்தை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு நடித்திருக்கிறார் என்பதில் திருப்தி ஏற்படுகிறது. தன் எதிரே வாலிபத்தில் நிற்பவன்தான் தன் மகன் என்று அறிய முடியாத நிலையில் அந்த உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார் அமலா.
அதே போலத்தான் ஷர்வானந்தும். சிறிய வயதில் பார்த்த அம்மாவை வாலிபத்தில் மீண்டும் பார்க்க நேரும் அந்த முதற்கட்டம் தொடங்கி, அம்மாவை சாக விட்டுவிடக்கூடாது என்ற கடைசிப் பரிதவிப்பு வரை ஷர்வானந்த் தன்னிடம் இருக்கும் சர்வ நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
சிறிய வயதில் ஒதுக்கித் தள்ளிய பள்ளித் தோழி வாலிபத்தில் அழகானவளாக வளர்ந்து நிற்க, கடந்த காலத்துக்குப் போய் அவளை காதலில் வீழ்த்த நினைக்கும் சதீஷுக்கும், நன்றாக படிக்காமல் இப்போது வீட்டு புரோக்கராக இருப்பதால் தன்னுடைய கடந்த காலத்துக்குப் போய் படிப்பில் கவனத்தை செலுத்த நினைக்கும் ரமேஷ் திலக்குக்கும் கிட்டத்தட்ட ஷர்வானந்த் அளவுக்கு பெரிய வாய்ப்பு இருக்கிறது.
அவர்களும் அதைக் கச்சிதமாக செய்து ரசிக்க வைக்கிறார்கள்.
விஞ்ஞானி நாசரின் இருகாலத் தோற்றங்களும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன அதில் அவரது அனுபவ நடிப்பும் வெளிப்பட்டிருக்கிறது.
90களின் இறுதியிலும் 2020 டிலும் நடக்கும் கதைக் களத்துக்கு ஏற்ப சூழ்நிலைகளை வடிவமைத்ததில் தொழில்நுட்ப குழு அபாரமாக வேலை செய்து இருக்கிறது. குறிப்பாக கடந்த காலத்துக்கு போய் டிவியில் ‘வாஷிங் பவுடர் நிர்மா ‘ விளம்பரத்தைப் பார்த்து ரசிக்கும் ஷர்வானந்த் ட்ரையோவைச் சொல்லலாம்.
படத்துக்குள் இப்படி நிறைய சுவாரஸ்யங்கள் வாலிபத்தில் போட்ட முடிச்சுகளை சிறுவயதில் போய் அவிழ்த்தும், சிறு வயதில் விழுந்துவிட்ட முடிச்சுகளை வாலிபத்தில் அவிழ்ப்பதும் என்று எல்லா இடங்களையும் கவனமாக கடந்து வெற்றி அடைந்திருக்கிறார் இயக்குனர்.
ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் அசத்தி இருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர்.
ஷர்வானந்தின் காதலியாக வரும் ரிது வர்மாவை சிறு வயது ஷர்வானந்த் “அக்கா…” என்று அழைப்பதும் ரிது நெளிவதுமாக அலப்பறை.
சர்வானந்த், சதீஷ், ரமேஷ் திலக்கின் சிறுவயதுத் தோற்றங்கள் அப்படியே அவர்களைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன. அந்த முகங்களுக்கு ஏற்ற சிறுவர்களைப் பிடித்ததிலும் இயக்குனரின் திறமை புரிந்து கொள்ளப் படுகிறது.
இறந்து போன தன் அம்மாவைப் பார்க்க முடியாத ஏக்கத்தை இந்தப் படத்தில் வடித்திருக்கும் இயக்குனரின் முயற்சியை அவரது அம்மாவே முன் நின்று வெற்றி பெறச் செய்திருக்கிறார் என்றும் சொல்லலாம்.
படத்தின் கடைசியில் ஷர்வானந்த் சொல்வது போலவே ” விதியை யாரும் மாற்ற முடியாது அதனால் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து ரசித்து வாழ வேண்டும் ..!” என்பதுதான் படம் சொல்லும் செய்தி.
ஜேக்ஸ் பிஜோய் இசை, சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு, ஶ்ரீஜித் சாரங்கின் எடிட்டிங் என்று எல்லா அம்சங்களும் ஒத்திசைவுடன் ஒரே லயத்துடன் வேலை பார்த்து இருக்கிறார்கள்.
“ஒருமுறை என்னைப் பாரம்மா…” என்று சித் ஶ்ரீராம் பாடும் பாடல் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
அதுவே படத்தை பலமுறை பார்க்கத் தூண்டும் ஒரு காரணியாகவும் இருக்கக்கூடும்.
கணம் – கனம் பொருந்திய காலப் பயணம்..!.