November 22, 2024
  • November 22, 2024
Breaking News
December 19, 2018

கனா படத்தின் திரை விமர்சனம்

By 0 1531 Views

விளையாட்டை மையப்படுத்திய கதைகளுக்கெல்லாம் உலகெங்கும் ஒரே ‘டெம்ப்ளேட்’தான். ஹாக்கி, கபடி, மல்யுத்தம், கிரிக்கெட் என்று விளையாட்டுகள்தான் மாறிகொண்டிருக்குமே தவிர அடிப்படைக் கதையும் திரைக்கதையும் ஒன்றின் ‘ஜெராக்ஸ்’ தான் இன்னொன்றுக்கும். ஆனால், என்ன ஒன்று போராடி ஜெயிப்பது அடிநாதமாக இருப்பதால் படம் பார்த்து முடியும்போது ஒரு களிப்பும், நம்பிக்கையும் வரும். அது வெற்றியையும் தரும்.

அப்படி இதுவரை நாம் பார்த்திருகக்கூடிய அத்தனை விளையாட்டுக் கதைகளில் ஒரு தொகுப்பாக வந்திருக்கிறது ‘கனா’. மேலே குறிபிட்டது போலவே விளையாட்டுதான் ‘பெண்கள் கிரிக்கெட்’ என்று மாறியிருக்கிறது. ‘சக் தே இந்தியா’, ‘லகான்’, ‘டங்கல்’, வரிசையில் இதிலும் எளியவர்களின் அதே கனவு, அதே போராட்டம், அதே பழிவாங்கல்… கடைசியில் எல்லாவற்றையும் மீறி கிடைக்கும் ஜெயம்… இதுதான் கனா.

ஆனால், இந்தக் கதையில் இதை உணர்ந்தே இது மட்டும் போதாது என்று இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உணர்ந்து இதற்கும் மேல் ஒன்றை வைத்திருக்கிறார். அதுதான் உலகத்தின் முதுகெலும்பான ‘விவசாயம்’. அதனால் இந்தப்படம் மேற்கூறிய அத்தனைப் படங்களிலிருந்தும் வேறுபட்டு நிற்கிறது.

விவசாயி சத்யராஜின் மகளான ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அப்பாவிடமிருந்து தொற்றிக்கொள்கிறது கிரிக்கெட் மீதான ஈடுபாடு. அப்பா சத்யராஜ் அவரது அப்பா இறந்து போய் வாசலில் கிடத்தியிருக்கும் நிலையிலும் ரூமுக்குள் அவ்வப்போது போய் இந்திய அணி விளையாடும் கிரிக்கெட் மேட்சைப் பார்த்து வந்து கொண்டிருக்கிறார். அப்பா இறந்ததற்கே அழாத அவர் இந்தியா தோற்றதும் அழுகிறார். அவரது அழுகையை மாற்ற, தான் இந்தியாவுக்காக விளையாடி உலகக் கோப்பயைப் பெற்றுத்தர வேண்டும் என்று அந்த ஏழை விவசாயியின் மகளான ஐஸ்வர்யா ராஜேஷ் தன் பதின்பருவத்திலேயே சபதம் ஏற்க, அது முடிந்ததா (முடியாமல் போகுமா..?) என்பது கதை.

இந்த வருடம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கான வருஷம். அவரது வாழ்வில் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய திருப்பங்கள் தந்த படங்களெல்லாம் இந்த வருடத்தில் வந்து போயிருக்கின்றன. அவற்றில் இந்தப்படம் ஒரு மகுடம். 

படம் முழுவதிலும்… கடைசியில் உலகக் கோப்பையை பெற்று உலக சேனலுக்கு பேட்டி கொடுப்பது வரையிலும் கிராமத்து ஏழை விவசாயக் குடும்பத்துப்பெண் எப்படி இருப்பாளோ அப்படியே தெரிகிறார். தூங்கி எழும் காட்சியிலும் கூட மேக்கப் போட்டுக்கொள்ளும் நடிகைகள் மத்தியில் படம் முழுதும் ஒப்பனை பக்கம் போகாத ஐஸ்… வெரி நைஸ்… தேர்ந்த நடிப்பிலும் ‘செஞ்சுரி’ அடிக்கிறார். இந்தத் தலைமுறை நடிகைகளில் நடிக்கத் தெரிந்த இந்த நடிகைக்கு ஒரு விருது ‘பார்சேல்…’

அவரது இளையவயதில் நடித்திருந்த பெண்ணும் அற்புதமாக நடித்திருப்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அந்தபெண்ணுக்கும் வாழ்த்துகள்.

சத்யராஜ் பற்றி இனியும் பாராட்டிக்கொண்டிருக்கத் தேவையில்லை. ஊர் கூடி நின்று மகளைப் பற்றித் தப்பாகப் பேசினாலும் மகளை அவள் விருப்பப்படியே வளர்ப்பேன் என்று கங்கணம் கட்டிக்கொள்ளும் அப்பாவாக ஒரு பக்கம் மகிழ வைத்தும், இன்னொரு பக்கம் அழிந்து வரும் விவசாயத்தின் ஒரு பிரதிநிதியாக நெகிழ வைத்தும் மிளிர்கிறார். வாங்கிய விவசாயக் கடனைக் கட்டியே ஆக வேண்டும் என்று அவமானப்படுத்தும் வங்கி அதிகாரி தன் உணவை எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும்போது இதையும் ஒரு விவசாயிதான்டா கொடுத்தான் என்பதை வசனம் இல்லாமல் ஒரு பார்வையில் கூறுகிறார் பாருங்கள்… அவருக்கும் இன்னொரு விருது ‘பார்சல்..!’

அவரது உற்ற நண்பனாக வரும் இளவரசுவும் இயல்பான நடிப்பில் அசத்துகிறார். நண்பன் மனதறிந்து அந்தக்குடும்பத்தின் நல்லது கெட்டதுகளில் பங்கேற்க இப்படி ஒருவர் இருந்தாலே சாதிக்கலாம்.

“நான் ஜெயிக்கப்போறேன்னு சொன்ன உலகம் நம்பாது. ஜெயிச்சுட்டு சொன்னாதான் நம்பும். போய் ஜெயிச்சுட்டு வா..!” என்று தளர்ந்து நிற்கும் ஐஸுக்கு நம்பிக்கை கொடுத்து சாதிக்க வைக்கும் கேரக்டரில் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன். அவரது கேரக்டரும் பல படங்களில் பார்த்துப் பழக்கப்பட்டதுதான் என்றாலும் அலட்டிக்கொள்ளாத சிவா அசரடிக்கிறார். சிறந்த படம் எடுத்த அவருக்கும்… ‘பார்சல்..!’

ஐஸின் அம்மாவாக வரும் ரமாவும் அருமையான தேர்வு. மற்ற பெண்கள் மகளை நாக்கில் பல் போட்டுப் பேச வீட்டுக்கு வந்து கணவனையும், மகளையும் பொங்க வைப்பார் என்று பார்த்தால் ‘பொங்கல்’ வைக்கிறாரே… அங்கே அவரும் கைத்தால்களை அறுவடை செய்கிறார். ஹீரோயினுக்கு ஜோடி இலாத குறைக்கு ‘தர்ஷன்’ பொறுப்பேற்கிறார்.

பெண்கள் கிரிக்கெட்டில் பங்கெடுக்கும் முகம், பெயர் தெரியாத பிற மாநிலப் பெண்களும் அவரவர் பங்களிப்பை அருமையாகச் செய்திருக்கிறார்கள். 

ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனுக்கும், இசையமைப்பாளர் நினன் தாமஸுக்கும்கூட படத்தில் வெற்றியில் பங்கு நிறைய. இயல்பாக எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் கிரிக்கெட் காட்சிகள் நிறைவாக இருக்கின்றன.

விவசாயம் தொடாமலும் வெற்றி பெற்றிருக்கக் கூடிய களம்தான். ஆனால், “இந்திய கிரிக்கெட்டைத் தூக்கி நிறுத்த 11 பேர் இருக்கோம். ஆனா, விவசாயத்தைத் தூக்கி நிறுத்த எத்தனை பேர் இருக்கோம்..?” என்று கடைசியில் ஐஸ்வர்யா கேட்கும் கேள்வியில் அருண்ராஜா காமராஜ் தன் இடத்தைத் தக்கவைத்துக் கொள்கிறார்.

கனா – வெற்றிக் கோப்பை..!

– வேணுஜி