November 14, 2025
  • November 14, 2025
Breaking News
  • Home
  • Uncategorized
  • காந்தா திரைப்பட விமர்சனம்
November 13, 2025

காந்தா திரைப்பட விமர்சனம்

By 0 228 Views

சாந்தாவாக ஆரம்பித்து காந்தாவாக நகர்ந்து மீண்டும் சாந்தாவாகவே முடியும் கதை. 

அதற்குள் சில பல ஈகோ மோதல்கள், பொறுப்புணர்வு மிஞ்சிப்போன கோபம், காதல் கண்ணை மறைத்த குரு பக்தி, பழி தீர்க்கும் உணர்வு இவை எல்லாம் கலந்து சொல்லப்பட்ட சுவாரஸ்யமான படம்தான் இது.

டைட்டிலின் போது ஒரு துப்பாக்கி வெடித்து விட, சுடப் போவது யார், உயிர் விடப் போவது என்ன காரணம் என்று கதை நகர்கிறது.
கதை நடப்பது இப்போதல்ல 50 களின் காலத்தில்.

சமுத்திரக்கனி தமிழின் ஆகப்பெரும் மூத்த இயக்குனராக இருக்க, அவரால் வளர்க்கப்பட்ட நாடக நடிகரான துல்கர் சல்மான் இன்று சினிமாவைக் கட்டியாளும் ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்க, இவர்கள் ஈகோவினால் பல வருடங்களுக்கு முன் பாதியில் நின்று போன சாந்தாவை இப்போது மீண்டும் எடுக்க நினைக்கிறார் அந்தப் படத்தை தயாரித்த மார்டன் தியேட்டர்ஸ் வாரிசு.

துல்கர் சல்மான் அதற்கு ஒத்துக்கொள்ள சமுத்திரக்கனியோ வற்புறுத்தலுக்குப் பின் ஒத்துக் கொள்கிறார். ஆனால் செட்டில் வைத்து துல்கர், தானே படத்தை இயக்கி  சமுத்திரக்கனியை அவமானப்படுத்திக் கொண்டிருக்க, தன் கண்டுபிடிப்பான கதாநாயகி பாக்யஶ்ரீயை வைத்து துல்கர் சல்மானின் கொட்டத்தை அடக்க நினைக்கிறார் அவர்.

ஆனால், அவரது எதிர்பார்ப்புக்கு மாறாக பாக்யஸ்ரீ துல்கர் சல்மானிடம் ஒரு கட்டத்தில் காதல் வலையில் சிக்க இந்த பிரச்சனை எங்கே போய் முடிந்தது என்பதுதான் முழுக் கதை.

தன் அதிகபட்ச நடிப்புத் திறனை வெளிப்படுத்த விரும்பும் எவருக்கும் இந்தப் படத்தின் நாயகன் பாத்திரம் ஒரு வேள்விக் குண்டம். அதை விரும்பி ஏற்று தன்னைப் புடம் போட்ட தங்கமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்  துல்கர்.

படத்தில் அவருக்குத் தரப்பட்டிருக்கும் ‘நடிப்பு சக்கரவர்த்தி’ என்ற பட்டம் மெத்தப் பொருத்தம்.
நாயகியுடனான அவரது காதல் எபிசோடும் நயம்.

சமுத்திரக்கனியை எத்தனையோ படங்களில் எல்லாப் பாத்திரங்களிலும் பார்த்தாயிற்று – ஒரு கட்டத்தில் சலிப்பும் ஏற்பட்டது.

அந்த சலிப்புடன் பார்க்க ஆரம்பித்தால் இதில் ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டியிருக்கிறார் கனி. அவரிடமிருந்து புதிய உடல் மொழி மற்றும் நடிப்பை பிரித்து எடுத்து இருக்கிறார் இயக்குனர்.

இவர்கள் இருவருக்குள்தான் நடிப்புப் போட்டி என்றில்லை. நாயகி பாக்யஶ்ரீயின் நடிப்பும் பலே. 

எங்கோ கிடந்த தன்னைக் கதாநாயகி ஆக்க இயக்குனர் படும் பாட்டை உணர்ந்து அவருக்கு ஒத்துழைக்க நினைத்தாலும், துல்கரின் மனமும் புரிந்து அவரிடம் காதல் வயப்படுவதுடன் இரண்டு பேருக்குமுள்ள ஈகோ மோதலை முடிவுக்குக் கொண்டு வர விரும்பும் அவரது குணமும், நடிப்பும் பத்தரை மாற்றுத் தங்கம். 

கொஞ்சம் ரஷ்மிகா, கொஞ்சம் கீர்த்தி சுரேஷின் சாயல் அவர் முகத்தில் தெரிவதாலோ என்னவோ அவரை மிகவும் ரசிக்கிறோம். 

படத்தின் பின் பாதியில் வந்தாலும்  மேற்படி ஸ்டார்களை கொஞ்சம் ‘ஆப் மோடி’ ல் வைத்து தன்னுடைய மிரட்டல் நடிப்பைக் காட்டி இருக்கிறார் விசாரணை அதிகாரியாக வரும் ராணா டகுபதி.

ஒரு இரவில் சில மணி நேரங்களுக்குள் இந்த வழக்கை எப்படியும் முடித்து விட வேண்டும் என்று அதிரடியாக முடிவுகளைத் தானே எடுத்து அவர் செயல்படும் விதம் அசத்தல்.

ஆனால்  அது கொஞ்சம் மிதமிஞ்சிப் போய் விட்டதோ என்று என்ன வைக்கிறது நீளம். கொஞ்சம் எடிட் செய்ய முடியும்.

துல்கரின் மனைவியாக வரும் காயத்ரி, காயத்ரியின் அப்பாவாக வரும் நிழல்கள் ரவி, உதவி இயக்குனராக வரும் பிஜேஷ் நாகேஷ், ஐஜி ஆடுகளம் நரேன், போலீஸ் பகவதி பெருமாள் என்று ஒவ்வொருவரின் நடிப்பையும் நம்மால் இனம் காண முடிவது இயக்குனரின் திறமையால் மட்டுமே. 

திரைக்கதை உரையாடலின் பங்கு சினிமாவுக்கு எத்தனை முக்கியம் என்பதை உணர்ந்து எழுதி இருக்கிறார் இயக்குனர் செல்வமணி செல்வராஜ்.

துல்கர் வாழ்க்கையிலும் நடித்து தன்னை ஏமாற்றுகிறார் என்று உணரும் சமுத்திரக்கனி அவரிடம், “கட் சொன்னதுக்கு மேல நீ நடிக்காதே.!” என்று அட்வைஸ் செய்வது பொருள் பொதிந்த வசனம்.

ஒளிப்பதிவு பின்னணி இசை, ஒலிப்பதிவு அரங்க அமைப்பு, ஒப்பனை, ஆடைகள் என்று ஒவ்வொரு கிராப்டிலும் இந்தப் படத்தை பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார் இயக்குனர்.

கிளைமாக்சில் வரும் சஸ்பென்ஸ் நாம் எதிர்பார்க்க முடியாதது என்றாலும் இந்த முடிவு லாஜிக்குடன் இருக்கிறதா என்பது ஒரு கேள்வியாகவே இருக்கிறது.

ஆனால் எல்லாத் தவறுகளையும் மறக்கடிக்கும் படத்தின் செய் நேர்த்தி பல உயரிய விருதுகளை இந்தப் படத்துக்குக் கொண்டு வரும். 

காந்தா – கம்பீரம்..!

– வேணுஜி