ரிலீஸ் ஆகிஒருவாரம் ஆகியும், ரசிகர்கள் ஆதரவோடு மிக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா நடித்துள்ள ‘இமைக்கா நொடிகள்’.இந்த வெற்றியைக் கொடுத்த ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பை நடத்தினார் படத்தின் தயாரிப்பாளரான கேமியோ ஃபிலிம்ஸ் சி.ஜே.ஜெயக்குமார்.
அதிலிருந்து…
தயாரிப்பாளர் சி.ஜே.ஜெயக்குமார் –
“பல பிரச்சினைகளை தாண்டி முதல் நாள் இரவுக் காட்சியில் தான் படம் ரிலீஸ் ஆனது. முதல் வாரத்தில் நல்ல வரவேற்புடன் 16 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது, மேலும் 360 திரையரங்குகளில் 2வது வாரம் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
இதற்கு முன்பு இரண்டு சின்ன பட்ஜெட் படங்கள் தயாரித்திருக்கிறேன், இந்தக் கதையை கேட்டவுடனே பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்க முடிவு செய்தேன். ரசிகர்கள் மீது நம்பிக்கை வைத்து என் சக்தியையும் மீறி, கடன் வாங்கி தான் இந்த படத்தை தயாரித்தேன். ரிலீஸ் நேரத்தில் எனக்கு எல்லா வகைகளிலும் மிகவும் உதவிகரமாக இருந்தார் அன்புச்செழியன். அபிராமி ராமனாதன் பக்கபலமாக இருந்ததோடு சென்னை ஏரியாவில் படத்தையும் ரிலீஸ் செய்து கொடுத்தார்..!”
இயக்குனர் மகிழ் திருமேனி –
“இன்றைக்கு இந்தியாவில் ‘அனுராக் காஷ்யப்’பைப் பார்த்து பிரமிக்காத ஒரு படைப்பாளியே இருக்க முடியாது. எனக்கு நடிக்க தெரியாது என்று முதலில் சொல்லியிருக்கிறார். முதன்முறையாக நான் படத்தை பார்த்தபோது, அவரை பார்த்து வியந்து போனேன். அதர்வா தென்னிந்திய சினிமாவில் முக்கிய இடத்தை பிடிப்பார்..!”
இயக்குநர் அஜய் ஞானமுத்து –
“நானும், அதர்வாவும் நீண்ட காத்திருத்தலுக்கு பிறகு இந்த படத்தை வெற்றிகரமாக முடித்து விட்டோம். ருத்ரா கதாபாத்திரத்தில் பெரிய நடிகர்கள் யாரையாவது நடிக்க வைக்கலாமா என்ற பேச்சு எழுந்தது. ஆனால் அவர்கள் சாயல் படத்தில் வந்து விடுமே என்று பயந்தேன், அதனால் தான் அனுராக் சாரை நடிக்க வைக்க முயற்சி செய்தேன். பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டும்போது தான் என் முடிவு பற்றி மகிழ்ச்சியாக இருக்கிறது..!”
அனுராக் காஷ்யப் –
“அஜய் என்னை எமோஷனல் பிளாக் மெயில் செய்து நடிக்க வைத்தார். படத்தில் நடிக்க வந்த பிறகு பல நேரங்களில் ஷுட்டிங் நடக்க முடியாமல் தள்ளிப்போனது. 2 ஆண்டுகளாக இந்த படம் தயாரிப்பில் இருந்தது, அந்த நேரத்தில் கிடைத்த இடைவெளியில் நான் 2 படங்கள், 1 வெப் சீரீஸ் இயக்கி விட்டு வந்தேன்…!”
அதர்வா முரளி –
“என் வாழ்வில் இமைக்கா நொடிகள் ஒரு சாப்டர். என் வாழ்வின் ஐந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. படம் பிரமாண்டமாக இருக்கும் என்று சொன்னவுடன் தயாரிப்பாளரும் உற்சாகத்துடன் வந்தார். அனுராக் காஷ்யாப் சார் தான் ருத்ராவாக நடிக்கிறார் என்று தெரிந்தவுடன் எனக்குள் ஆர்வம் அதிகமானது. அவருக்கு தமிழ் சினிமாவிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியிருப்பது மகிழ்ச்சி..!”