மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்கவும், 1 முதல் 8-ம் வகுப்புகள் வரையான மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக ‘இல்லம் தேடி கல்வி’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதலியார்குப்பத்தில் இந்த புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின்படி மாணவர்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை கற்றல் செயல்பாடுகள் நடைபெறும்.
இத்திட்டம் காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, திருச்சி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி உள்பட 12 மாவட்டங்களில் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட இருக்கிறது.
இந்த பணியில் ஈடுபடும் தன்னார்வலர்கள் 6 மாதம் தினமும் 1 மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவை மூலம் குழந்தைகளுக்கு புதுமையான முறையில் பாடம் கற்று கொடுப்பார்கள்.
இந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
“இன்று மிகப்பெரிய கல்விப் புரட்சி தொடங்கப்பட்டுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது மாணவர்கள்தான். மேலும் படிப்பின் ஆர்வத்தை குறைத்துவிட்டது கொரோனா. நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லதாக இருக்கட்டும்..!”
Related