டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பரத் மோகன் இயக்கும் ‘இக்ளூ’ படத்தில் பார்வையாளர்களுக்கு நேர்மறையான விஷயம் ஒன்று உள்ளது.
அது பற்றி அறிமுக இயக்குனர் பரத் மோகன் கூறும்போது, “வாழ்க்கை எப்போதும் இனிமையாகவே இருப்பது இல்லை. சில நேரங்களில், அது நம்மை ஆழமான மனச்சோர்வு நிலையில் வைக்கிறது, குறிப்பாக உயிருக்கு ஆபத்தான நோய்களால். அந்த நோய்களை எதிர்த்து சண்டை போட மருத்துவ முன்னேற்றங்கள் வந்து விட்டன. ஆனால் மிகப்பெரிய ஆயுதம் என்பது நம் ‘நேர்மறை’ சிந்தனைகள் தான்.
எமோஷனல் காதல் கதையான இந்த படமும் அப்படி ஒரு செய்தியை வலியுறுத்துகிறது. ஒரு அழகான ஜோடியின் வாழ்க்கை அபாயகரமான ஒரு வியாதியால் பாதிக்கப்படுகிறது, அவர்கள் அதை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதைக் காட்டும் படம். இதை கேட்டு விட்டு இது ஒரு சோகமான காதல் கதையா எனக் கேட்டால் அதை நீங்கள் திரையில் தான் காண வேண்டும். இது ரசிகர்களிடம் படம் நல்ல வரவேற்பை பெறும் என ஒட்டுமொத்த குழுவும் நம்புகிறோம்.
மேலும், நாங்கள் இந்தப் படத்தை மிக யதார்த்தமாகக் காட்ட விரும்பினோம். சினிமா மிகைப்படுத்தல்களைத் தவிர்த்திருக்கிறோம். படத்தில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் நம் அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் சிலவற்றால் ஈர்க்கப்பட்டு உருவானவைதான்.
முன்னணி கதாபாத்திரங்களில் அம்ஜத் கான் மற்றும் அஞ்சு குரியன் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். மேத்யூ வர்கீஸ், லிஸ்ஸி மற்றும் பக்ஸ் ஆகியோரும் படத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்கள். இரட்டையர்கள் அனிகா மற்றும் அரோஹி ஆகியோர் படத்தின் ஆரம்ப 25 நிமிடங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று..!” என்றார்.
அரோல் கொரேலி தனது இனிமையான இசைப்பதிவுக்காக புகழ்பெற்றவர், இப்படத்தில் மூன்று பாடல்கள் உண்டு. அவரின் இசை இந்த படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குகன் எஸ். பழனி ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார். சீனிவாசன் கலை இயக்குனராகவும், பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.