தீ விபத்தினால் பாதிக்கபட்டவர்களுக்காக இலவச சிகிச்சை வழங்கிடும் ‘Hope After Fire Scheme’ திட்டம் கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனையில் செயல்பட்டுவருகிறது.
2012-ஆம் ஆண்டு அதன் தொடக்க விழாவில் பங்கேற்ற சூர்யா , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற, தீ விபத்தொன்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த மாணவியை சந்தித்தார்.
அம்மாணவி மேற்கொண்டு படிக்க விரும்பினார். உடல்நிலை சீரானதும் படிக்கலாம் என்று சூர்யா தெரிவித்திருந்தார். அதன் பிறகான 2 ஆண்டுகள் உடல் முழுவதுமான தீ காயங்களுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று ஓரளவு குணம் பெற்றிருந்தார் மாணவி.
2014-ஆம் ஆண்டு அகரம் பவுண்டேஷன் விதைத் திட்டத்தில் உதவி பெற்று சென்னை அப்பலோ பாலிடெக்னிக் கல்லூரியிலும், தொடர்ச்சியாக பொறியியல் படிப்பை திருச்சி M.A.M. பொறியியல் கல்லூரியிலும் கல்விக் கட்டணமின்றி பயிலும் வாய்ப்பை பெற்றார்.
சீரற்ற உடல் நிலைக்கு சிகிச்சைகளும் எடுத்துக் கொண்டே, படிப்பில் சிறந்த மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார் மாணவி. பொறியியல் படிப்பை நிறைவு செய்தவர், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையிலேயே வேலைவாய்ப்பை பெற்றார்.
இந்நிலையில் கார்த்தி கடந்த வாரம் ‘Hope After Fire Scheme’ பத்தாம் ஆண்டு நிகழ்வை தொடங்கி வைக்க சென்றார். அவரை வரவேற்கும் பொறுப்பில் இருந்து நிகழ்வுக்கு வரவேற்றவர் மாணவி…
சிறு நெருப்பால் கருகிவிட இருந்த வாழ்வை, மனதின் உத்வேக நெருப்பால் சாதித்துக் கொண்டவர் மாணவி. அவருக்கு சிகிச்சை அளித்து உடலாலும், மனதாலும் மீட்டெடுத்த மருத்துவர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.