ஆங்கிலத்தில் அடிக்கடி புதையல் வேட்டைக் கதைகள் வெளியாகும். ஆனால் தமிழில் அப்படி இல்லை. அந்தக் குறையைத் தீர்க்க (!) களம் இறங்கி இருக்கிறார் கணேஷ் சந்திரசேகர்.
அவரே கதை எழுதி இயக்கி நாயகனாக நடித்தும் இருக்கிறார். அத்துடன் அவருடன் ரஷ்ய நடிகை கெசன்யா நடித்திருக்கிறார். ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் இந்தப் படம் உருவாகி இருக்க, ஆக்சன் ரியாக்சன் வெளியிடுகிறது.
கதை இதுதான்…
பிரான்சிலிருந்து பாண்டிச்சேரிக்கு வரும் கெசன்யா தனது மூதாதையர் வீட்டை அடைகிறார். அங்கே பழைய புராதன கலைப் பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன. அங்கே ஏதோ ஒரு அமானுஷ்யம் அவருக்கு தெரிய வர, அங்கே ஒரு ஓலைச்சுவடியைக் கண்டெடுக்கிறார்.
அதில் ஏதோ ரகசியம் இருப்பதாகப் படவே தொல்பொருள் ஆராய்ச்சி செய்யும் கணேஷ் சந்திரசேகரை நாடுகிறாள். அவர் அதை ஆராய, அதற்குள் ஏதோ ஒரு ரகசியம் புதைந்திருப்பதாகத் தோன்றுகிறது. அது ஒரு புதையலுக்கான ரகசிய வரைபடம் என்பது தெரிய வர, கெசன்சயாவுடன் இணைந்து தேட ஆரம்பிக்கிறார்.
இறுதியில் அந்தப் புதையலை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் செஞ்சி படத்தின் கதை.
புதையல் வேட்டை ஒரு பக்கம் நகரும் போது, இன்னொரு பக்கம் ஐந்து சிறுவர்கள் ஊருக்குள் அடிக்கும் லூட்டியைக் காட்டிச் சற்று நேரம் கதை நகர்கிறது. அவர்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தால், இரண்டாவது பாதியில் தொடர்பு படுத்துகிறார் இயக்குநர்.
அளவில்லாமல் சுட்டித்தனம் செய்யும் அந்தச் சிறுவர்கள் பெற்றோர்களால் தண்டிக்கப்படவே வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். அவர்கள் காடு மேடு எனச் செல்லும் பாதையில் புதையல் இருக்கும் இடத்தை அடைகிறார்கள்.
அவர்களுக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று இரண்டாவது பாதியில் புதிரை அவிழ்க்கிறார் இயக்குநர்.
இவர்களுடன் ஒரு தீவிரவாத குழுவும் காட்டுக்குள் புகுந்து விட அவர்களைத் தேடி அலையும் கமாண்டோ டீமும் இணைகிறது.
இந்தப் படத்தில் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளராக இயக்குநர் கணேஷ் சந்திரசேகர் நடித்துள்ளார். அவரே கதை எழுதி இருப்பதால் அவரால் இயல்பாக நடிக்க முடிந்திருக்கிறது. ஒரே நேரத்தில் ஆங்கிலத்திலும் தமிழிலும் வசனம் வருவதைத் தவிர்த்திருக்கலாம். அங்கங்கே அவர் ” வாவ் ” என்று ஆச்சரியப்படும்போது தியேட்டரும் அவருடன் சேர்ந்து ” வாவ் ” என்கிறது.
ரஷ்ய நடிகை கெசன்யாவை வெள்ளாவி வைத்து வெளுத்தார்களா என்று தெரியவில்லை. அப்படி ஒரு நிறம். தோற்றத்திலும் உடல் மொழியிலும் வசன உச்சரிப்பிலும் அனுபவம் தெரிகிறது. அத்துடன் காட்சிகளில் அவர் அழகு சேர்த்துக் கொண்டிருப்பது மிகப்பெரிய ஆறுதல்.
படத்தில் சுட்டித்தனம் செய்யும் அந்த ஐந்து சிறுவர்களான சாய் ஸ்ரீனிவாசன்,
தர்சன் குமார், விதேஷ் ஆனந்த், சஞ்சய்,
பேபி தீக்ஷன்யா மனதில் பதிகிறார்கள்.
படத்தில் மூன்று பாடல்கள். மூன்றும் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் இசையமைப்பாளர் எல். வி. முத்து கணேஷ் ஓகேதான்.
செஞ்சி தொடங்கி மதுரை, ராஜபாளையம், தென்காசி , கல்லார் என்று தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு கதை பயணிக்கிறது. அந்தந்த மாவட்டத்தின் பண்பாட்டுச் சின்னங்களாக லொக்கேஷன்களைத் தவறாமல் பயன்படுத்திக் கொண்டிருப்பது சிறப்பு.
காற்று செதுக்கிய சிற்பங்களாக இருக்கும் பாறைகள் நடுவே சென்று சந்து பொந்து இடுக்கு வழியில் எல்லாம் புகுந்து புறப்பட்டு உள்ளது கேமரா. அதற்காக ஒளிப்பதிவாளர் ஹரிஸ் ஜிண்டேவைப் பாராட்டலாம். நம் தென்னிந்தியப் பகுதியில் இதுவரை கேமரா நுழையாத பல இடங்களில் நுழைந்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் வழக்கமான பார்முலாவை தவிர்த்து கதை நகர்வது ஆறுதல் என்றாலும் திரைக்கதையில் இன்னும் சுவாரசியத்தை சேர்த்து, பட்ஜெட்டைக் கூட்டி இருந்தால் இயக்குனர் அங்கங்கே சொல்வது போலவே “வாவ்…” என்று படமும் சொல்ல வைத்திருக்கும்.
மற்றபடி நம் பழங்கால வரலாற்று உணர்வை வரவழைக்கும் முயற்சியான ஒரு டாக்குமென்டரி படமாக உணர வைக்கிறது இந்த செஞ்சி.
படம் முடியும்போது செஞ்சி பார்ட் 2 வருவதற்கான சாத்தியத்துடன் படத்தை முடிக்கிறார் கணேஷ் சந்திரசேகர்.
மனுஷனுக்கு ரொம்ப ‘ தில் ‘ தான்..!