April 19, 2024
  • April 19, 2024
Breaking News
November 19, 2022

கலகத் தலைவன் திரைப்பட விமர்சனம்

By 0 405 Views

கார்ப்பரேட் நிறுவனங்கள் கால் பதிக்காத இடங்கள் எதுவும் இல்லை என்று ஆகி விட்ட சூழலில் சினிமாவிலும் அவர்கள் வேரூன்றி விட, அந்த கார்ப்பரேட் நிறுவனங்களையே எதிர்த்து ஒரு படம் உருவாக்குவது என்பது பெரிய ‘ தில்..!’

அந்த ‘ தில் ‘ இயக்குனர் மகிழ்திருமேனிக்கு வந்திருப்பது பெரிய விஷயம் இல்லை.  ஆனால் கார்ப்பரேட் ‘ நிதி ‘ ஆதாரம் இல்லாத எந்த அரசியல் கட்சியும் இல்லை என்று அழுத்தமாகச் சொல்லும் இந்த முயற்சியில் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் உதய’ நிதி’ ஸ்டாலினையே நாயகனாக்கி இருப்பதுதான் ஆகப்பெரிய ‘ தில்..!’

அதிலும் ஒரு மாநிலத்தின் மிகப்பெரிய கழகத் (எதிர்காலத்) தலைவனாக மதிக்கப்படும் அவரை கார்பரேட்டுக்கு எதிரான கலகத் தலைவனாகக் காட்டி இருப்பதை எப்படிச் சொல்ல..? அப்படிப்பட்ட இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலினின் மனத் திண்மையையும் என்னவென்று சொல்ல..?

வஜ்ரா என்ற நாட்டின் மிகப் பெரும் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் இடி விழுவது போன்ற எதிர்வினைகள் தொடர்ந்து கொண்டிருக்க, நிறுவனத்துக்குள்ளேயே இருக்கும் யாரோ ஒருவர்தான் உளவு வேலை பார்ப்பதாக எண்ணுகிறார் நிறுவனத் தலைவர்.

அந்தக் கருப்பு ஆட்டை கண்டுபிடிப்பதற்காக நெஞ்சில் ஈரம் ஒரு துளியும் இல்லாத வேட்டை மிருகமான ஆரவ்விடம் அந்த பொறுப்பை ஒப்படைக்கிறார்.

இதற்கு சிறிது காலம் முன்பு உதயநிதி ஸ்டாலின் யார் என்பது அறிமுகமாக, அவருக்கும் நிதி அகர்வாலுக்குமான கவிதையை ஒத்த ஒரு காதல் எபிசோடு காட்சிப்படுத்தப்படுகிறது. ஒரு கட்டத்தில் அந்த காதலை முறித்துக் கொண்டு உதயநிதி ஸ்டாலின் காணாமல் போகிறார்.

இன்றைய நிகழ்வில் உளவு பார்ப்பவர்களை அடையாளம் கண்டுபிடித்து வரிசையாக வேட்டையாடும் ஆரவ், இவர்களின் மூளையாக செயல்படுவது யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். அது உதயநிதி ஸ்டாலின் தான் என்று நமக்கு ஒரு மாதிரி புரிந்து போக உதயநிதியை எதிர்பார்க்கும் நேரத்தில் அந்த இடத்துக்கு வந்து சேர்கிறார் கலையரசன்.

எப்படியும் ஹீரோதான் வெல்வார் என்பது படத்தின் விதியாக இருந்தாலும் ஆரவ்வின் அசுர பலத்துக்கு எதிராக உதயநிதியால் ஈடு கொடுத்து வெல்ல முடிந்ததா என்பதை நெஞ்சம் பதற வைக்கும் அளவில் சொல்லி இருக்கிறார் மகிழ்.

ஜாலியாக வந்து போய்க் கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த படம் ஒரு அக்னிப் பரீட்சை அல்லது ‘ஆசிட் ‘ டெஸ்ட். அவரும் அதிகம் நடித்து அலட்டிக் கொள்ளாமல் பார்வையிலேயே பல விஷயங்களைப் புரிய வைத்து இருக்கிறார். தன் மிகப்பெரிய பலமான கலையரசனை இழந்தது தெரியும் நேரத்தில் அவர் இடிந்து விழும் நடிப்பு அபாரம்.

நிதி அகர்வாலுடனான காதல் காட்சிகளில் மட்டும் அவரது நடிப்பு தயங்கி பின்னடைகிறது. காதலிலும் தேர்ந்தால்தான் காவியத்தலைவனாக முடியும், இந்த கழகத் தலைவன் alias கலகத் தலைவன்.

பெயர் ராசியாலோ என்னவோ உதய’ நிதி’ க்கு ஜோடியாக ‘ நிதி’ அகர்வாலை நியமித்திருக்கிறார் இயக்குனர். எந்தக் கோணத்தில் ஷாட் வைத்தாலும் நித்திய அழகியாகத் தோன்றுகிறார் ‘ நிதி..!’ இந்தக் காதல் எபிசோடையே முழு படமாக எடுத்திருந்தாலும் கூட இதே அளவு ரசித்திருக்க முடியும்.

அதனால் காதல் காட்சிகள் இல்லாத போதெல்லாம் ‘ நிதி ‘ ப்பற்றாக்குறை படத்தில் உணரப்படுகிறது.

அல்லது இந்தக் காதலை முழுதாகத் தவிர்த்து விட்டு அதன் இயல்பான உளவுப் பாதையிலேயே கதை பயணத்திருக்கலாம். அப்படி ஒரு கனத்த பரபரப்பு அந்தத் திரைக்கதையில்.

நாயகனாக நாம் அறிந்த ஆரவ்வுக்கு இந்தப் படத்து வில்லன் வேடம் ஒரு ‘லைஃப் டைம் கேரக்டர்…’ அந்த மிடுக்கும் பார்வையும் சிரிப்பும் கூட அப்படி பயமுறுத்துகிறது. ஒவ்வொருவராகத் தாண்டி தாண்டி அவர் கலையரசனை அடையும் போது கலையரசனின் கர்ப்பிணியான மனைவி அவர் கையில் சிக்கி விடக்கூடாதே என்று நம் நாடித்துடிப்பு நாட்டியமே ஆடி விடுகிறது.

ஒரு ரயில் நிலையத்தில் வைத்து கலகத் தலைவனுக்கு வலை விரிக்கும் ஆரவ்வின் முயற்சிகளும், அது ஒவ்வொன்றும் தவிடு பொடியாக கடைசியில் யாரையும் நம்பாமல் தானே எழுந்து அந்த ரயில் நிலையத்துக்கு ஓட்டமாய் ஓடி வந்து அடுத்த நகர்வுக்கான தடயத்தைப் பெறும் ஆரவ்வின் ஆக்ரோஷ நடிப்பும் மகிழ் திருமேனியின் திரைக்கதை ஆற்றலும் அசாத்தியம். என்னா ஓட்டம் ஆரவ்..!?

கலையரசனின் முடிவோடு ஆரவ்வின் வேட்டை லிங்க் ஒரு முடிவுக்கு வந்துவிட, அடுத்து எந்த தடயமும் இல்லாத நிலையில், கலையரசனின் இறந்த உடலையே ஒரு தடயம் ஆக்கி அவர் உதயநிதியை நெருங்குவது ஹாலிவுட்டுக்கே சவால் விடும் அற்புதக் கற்பனை.

அத்துடன் கார்ப்பரேட் நிறுவனம் என்று சொல்லிவிட்டு ஏதாவது ‘கதை விட்டுக் ‘ கொண்டிருக்காமல் அதன் ஒவ்வொரு அம்சத்திலும் நுட்பமாகப் புரிந்து திரைக்கதையை அமைத்திருக்கும் மகிழ் திருமேனி மலைக்க வைக்கிறார். 

திரைக்கதையால் மட்டும் இந்த படம் ஆங்கில படம் பார்க்கும் உணர்வை எட்டு விடாது என்பதில் கே.தில்ராஜின் ஒளிப்பதிவும் உணர வைக்கிறது. ஒவ்வொரு ஷாட்டும் திரைக்கதை பிறழாத அழகியலுடன் தனியே ஒரு கதையை சொல்லிக் கொண்டு போயிருக்கிறது.

அழகியல் மெளிரும் பாடல்களுக்கு அரோல் கரோலியும் ஆர்ப்பாட்டமான பின்னணி இசைக்கு ஸ்ரீகாந்த் உறுதுணை புரிந்திருக்கிறார்கள். ஆனால் அதிரும் இசையை விட அமைதியே சில சமயங்களில் அதிகம் பயன்படுத்தும் என்பதை இசை அமைப்பாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை பார்ப்பதால் அதை நம்பி இருக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை எப்படி சின்னா பின்னப்படுகிறது என்பதை அடுத்தவன் சதயமாக படம் சொல்லி இருந்தாலும் அந்த கனத்த எபிசோடை வசன வாயிலாகவும் சிற்சில காட்சிகளின் வாயிலாகவும் காட்டி விடுவதால் அதன் அழுத்தம் நம்மை பாதிக்காமல் போகிறது.

வில்லனின் துரத்தல் நம் நாடியை எகிற வைத்தாலும் அது மட்டுமே படத்தை உணரச் செய்யும் காரணியாக அமையாமல் போகிறது ஆனாலும் அசுர வளமுள்ள வில்லனை தன் புத்திசாலித்தனமான சாதுரியத்தால் உதயநிதி வெல்லும் போது கைதட்ட தோன்றுகிறது.

கலக தலைவன் – (வெற்றித்) திலகம் ஏற்பவன்..!