November 22, 2024
  • November 22, 2024
Breaking News
April 21, 2024

ஃபைண்டர் திரைப்பட விமர்சனம்

By 0 2088 Views

“ஆயிரம் குற்றவாளிகள் வெளியில் இருக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி கூட உள்ளே (சிறைக்குள்) இருக்கக் கூடாது…” என்பதுதான் காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் சட்டத்தின் ஆதிக்குரல்.

ஆனால் சொல்வதோடு அது முடிந்து விடுகிறதா… அப்படி ஒரு நிரபராதி மாட்டிக் கொண்டால் அவன் நிலை என்ன..? 

இதை யோசித்து ஒரு திரைக் கதையை உருவாக்கி இந்தப் படத்தை இயக்கியிருப்பதுடன் தானே நாயகனாக நடித்திருக்கிறார் வினோத் ராஜேந்திரன். 

‘இப்படி பாதிக்கப்பட்ட நிரபராதிகளை வெளியே கொண்டு வருவதற்காக அமெரிக்காவில் தொடங்கப்பட்ட அமைப்பு போல இந்தியாவிலும் ஏன் தொடங்க முடியாது..?’ என்ற கேள்வியுடன் ஃபைண்டர் என்ற என்ற அமைப்பைத் தன் தோழியுடன் தொடங்குகிறார் கிரிமினாலஜி படித்த வினோத் ராஜேந்திரன். 

அதைத் தெரிந்து கொண்டு பலரும் தங்கள் தரப்பு கைதிகளை வெளிக்கொண்டு வர முயல அவர்களிடம் உண்மையோ நேர்மையோ இல்லாததால், பழவேற்காடு மீனவர் குப்பத்தில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணின் கேசை எடுத்துக் கொள்கிறார் வினோத். அதன் காரணத்தில் ஒரு பிளாஷ் பேக் விரிகிறது.

மீனவர் குப்பத்தில் மீன்பிடித் தொழிலைச் செய்து வரும் சார்லி மனைவி மகளுடன், கிடைக்கும் வருமானத்தில் செம்மையாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு பல்வேறு வழக்குகளுக்கு ஆஜராகி ஜெயிலுக்கு போய் அதன் மூலம் சம்பாதிக்கும் சென்றாயனின் நட்பு இருக்கிறது.

இந்நிலையில் மக்களிடம் சீட்டுப் பணம் பிடித்த பணத்தை சார்லி ஒரு பைனான்ஸ் கம்பெனியை நம்பி ஒப்படைத்து வைத்திருக்க ஒருநாள் திடீரென்று அந்த கம்பெனி மாயமாகிறது. மக்களிடம் பெற்ற பணத்தை திரும்பக் கொடுப்பதற்கு எந்த வழியும் இல்லாமல் சென்றாயன் யோசனைப்படி ஒரு கொலைக் கேசில் ஆஜராகி, பணத்துக்காக உள்ளே போகிறார் சார்லி. 

ஆனால் பேசியபடி அவரை வெளியே எடுக்க யாரும் வரவில்லை என்பதோடு அவருக்கு சேர வேண்டிய பணமும் வந்து சேரவில்லை அத்துடன் சென்றாயனும் சிறையில் மரணிக்க, சார்லின் மனைவியும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள தனியாக மாட்டிக் கொள்கிறார் சார்லின் மகள்.

பல வருடங்களுக்கு முன் முடித்து வைக்கப்பட்ட இந்த கேஸை இப்போது ஃபைண்டர் கையில் எடுத்து நீதிக்குப் போராட அதன் விளைவு என்னவாகிறது என்பதுதான் கதை. 

நாயகனுக்குரிய முகவெட்டு இல்லாவிட்டாலும் பாத்திரத்திற்குப் பொருத்தமாக இருக்கிறார் வினோத் ராஜேந்திரன். நல்ல விஷயத்தைக் கையில் எடுத்து, நன்மையின் சக்தியை நம்பி படம் எடுத்திருக்கும் அவரது நம்பிக்கையைப் பாராட்ட வேண்டும். 

கதையின் நாயகனாகி இருக்கும் சார்லியின் நடிப்பு அபாரம். பொய்யாகத் தன்னை வழக்கில் சிக்க வைத்துக் கொண்டாலும் பணத்துக்காகத் தானே கொலை செய்ததாக அவர் அப்பாவித் தனத்துடன் நடித்துக் காட்டுவதெல்லாம் வேற லெவல்.

தன் மகளுக்காக எப்படியாவது தன்னை வெளியே எடுக்கும்படி வினோத்திடம் அவர் கெஞ்சும் சிறைக்காட்சி சிலிர்க்க வைக்கிறது. 

சென்றாயனின் நடிப்பும் செம்புலப் பெயல் நீர் போல பாத்திரத்துடன் பொருந்தி இருக்கிறது. செய்வது கேவலமான தொழிலாக இருந்தாலும் சார்லி நட்புக்காக அவர் படும் அவமானங்களில் எல்லாம் துணை நின்று மனதில் இடம் பிடிக்கிறார். 

சார்லியின் மகளாக நடிக்கும் பெண்ணின் கண்களே அவளது கவலையைச் சொல்கின்றன. அப்பாவை விட அப்பாவியாக இருக்கும் அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று நாம் நினைப்பதே அந்தப் பாத்திரத்தில் வெற்றி. 

சார்லியின் மனைவியாக நடிப்பவர், சார்லியின் மனைவியையும் மகளையும் ஏமாற்றும் வழக்கறிஞர், மெயின் வில்லன் அவரது கையாளாக வருபவர் என்று எல்லோருமே புதுமுகங்கள் என்றாலும் அனைவரும் என்ன வேண்டுமோ அதைச் செய்திருக்கிறார்கள். 

முக்கியமான வழக்கறிஞர் வேடத்தில் வருகிறார் நிழல்கள் ரவி. படத்தை ஆரம்பித்து வைக்கும் அவரே இறுதியில் முடித்தும் வைப்பது நன்று. 

பிரசாந்த் வெள்ளிங்கிரியின் ஒளிப்பதிவு குப்பத்தையும், கோர்ட்டையும் இயல்பாகக் காட்டி இருக்கிறது. சூரிய பிரசாத் இசையும் படத்தின் தரத்துக்கு ஏற்ப ஒலித்திருக்கிறது.

ஆனால் படம் ஆரம்பிக்கும் போது எடுத்துக் கொள்ளும் சவால், படம் முடியும்போது வெற்றியடைவது நேரடியாக சொல்லப்படவில்லை என்பது குறையாக இருக்கிறது.

அத்துடன் சார்லி சிறைக்குப் போகும்போதே அவர் அப்பாவிதான் என்பது நமக்குச் சொல்லப்பட்டு விட அவர் தப்பிக்கிறாரா இல்லையா என்பது மட்டுமேதான் படத்தை நகர்த்திச் செல்கிறதே அன்றி வேறு எந்த திருப்பங்களும் இல்லாமல் இருப்பது, பின்பாதிக்கான சுவாரசியத்தைக் குறைக்கிறது. 

ஆனாலும் படம் ஆரம்பித்து முடிவது வரை எந்தவிதமான தொய்வும் இல்லாமல் விரைவது இந்த படத்தைத் தூக்கி நிறுத்துகிறது. 

திரைக்கதையிலும் செய் நேர்த்தியிலும் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால் இந்தப் படம்  குறிப்பிடத் தகுந்த படங்களில் ஒன்றாக இருந்திருக்கும். 

என்றாலும் இந்த வார ரேசில் வின்னர், இந்த ஃபைண்டர் தான்..!

– வேணுஜி