May 3, 2024
  • May 3, 2024
Breaking News
April 21, 2024

Never Escape திரைப்பட விமர்சனம்

By 0 284 Views

திரையரங்கைக் களமாகக் கொண்டு ஒரு சில படங்கள் வந்திருக்கின்றன. இந்தப் படமும் அந்த வகையைச் சார்ந்ததுதான்.

திரையரங்குக்குள் நிகழும் ஒரு திரில்லர் ஜேனரை நம் கண் முன் வைக்கிறார் இயக்குனர் டி. ஶ்ரீ அரவிந்த்ராஜ்.

கதை இதுதான்…

ஒரு தியேட்டருக்குள் அமானுஷ்யமாக ஏதோ நடக்கிறது என்று பொதுவாக ஊரில் புரளி கிளம்ப அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று நிரூபிப்பதற்காக ஒரு யூட்யூப் சேனல் அந்தத் தியேட்டருக்குப் படையெடுக்கிறது.

அதே நேரம் ஒரு விபத்து தொடர்பாக போலீஸிடம் இருந்து தப்புவதற்கு பதுங்கு குழியாக இந்தத் தியேட்டரை தஞ்சமடைகிறது ஒரு கும்பல்.

ஆனால் தியேட்டருக்குள் வந்தவுடன்தான் தெரிகிறது அங்கிருந்து யாரும் வெளியேற முடியாது என்பது.

அந்தத் தியேட்டரின் ஓனர் கம் சிப்பந்தி எல்லாமே டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்தான் என்று இருக்க அவரை வைத்துதான் பின் பாதி படம் பரபரக்கிறது. சைக்கோ கில்லரான அவரிடம் சிக்கிக் கொண்ட மேற்படி கோஷ்டி தப்பித்தார்களா என்பதுதான் மீதிக் கதை.

மாஸ்டர் டான்ஸ்தான் ஆடுவார் என்று இல்லை – நடிக்கவும் செய்வார் என்பது சில படங்களில் நாம் தெரிந்து வைத்திருப்பதுதான்.

இந்தப் படத்தில் ஒரு சைக்கோ கில்லர் ஆக அதிலும் ஆளவந்தான் கமல் மொட்டை கெட்டப்பில் அவர் வருவது தியேட்டரில் கைதட்டல்களை அள்ளுகிறது.

கெட்டப்பில் ஆகட்டும், நடிப்பில் ஆகட்டும், பாடி லாங்குவேஜில் ஆகட்டும் அசத்துவது ராபர்ட் மாஸ்டர் தான்

அவருக்காவது சினிமா அனுபவம் இருக்கிறது ஆனால் அவருடன் நடித்த மற்றவர்களுக்கெல்லாம் அந்த அனுபவம் கிடைக்கப்பெறாத நிலையிலும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து அனைவருமே தங்களால் ஆன பங்களிப்பைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சாஸ்தி பிரனேஷ் அசத்தி இருக்கிறார் என்று சொல்லலாம். ஒளியையும் நிழலையும் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்கிற உத்தி அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

படத்தில் பாராட்ட வைக்கும் இன்னும் இருவர் இசையமைப்பாளர் சரண்ராஜும், எடிட்டர் குரு பிரதீப்பும். ஒரு திரில்லரில் எப்படி பணியாற்ற வேண்டும் என்கிற ரகசியம் இவர்கள் இருவருக்குமே தெரிந்திருக்கிறது.

பொதுவான படம் போல் ஆரம்பித்தாலும் போகப்போக சூடு பிடிக்கும் படம் இடைவேளையில் நெருப்பே பற்றிக் கொள்கிறது.

ஆனாலும் ஒரே இடத்திலேயே சிக்கிக்கொண்ட திரைக்கதை அங்கேயே சுற்றிக் கொண்டிருப்பதில் ஏற்படும் அலுப்பை மட்டும் இயக்குனரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

மற்றபடி ஹாலிவுட் பாணியில் ஒரு படம் தர வேண்டும் என்ற இயக்குனரின் எண்ணம் கோலிவுட் அளவில் குறுகி நின்றாலும், எடுத்துக்கொண்ட பணியைச் சிறப்பாக செய்திருப்பதில் கவனம் பெறுகிறது இந்தப் படம்.

ஆனால், தியேட்டரைக் களமாகக் கொண்டு பயமுறுத்தும் இயக்குனர்களுக்கு ஒரு கேள்வி. இப்படி பயமுறுத்தினால் தியேட்டருக்கு யாரும் பயப்படாமல் வருவார்களா..?

Never Escape – பயப்படாம பாருங்க..!