November 22, 2024
  • November 22, 2024
Breaking News
October 24, 2021

ஃபில்டர் கோல்ட் படத்தின் திரை விமர்சனம்

By 0 683 Views

திருநங்கைகளை காமெடி காட்சிக்காக மட்டுமே தமிழ் சினிமாவில் பயன்படுத்திக்கொண்டு இருந்தது ஒரு காலம். பிறகு ஒரு சில படங்களில் ஓரிரு கேரக்டர்களின மூலமும், வணிக ரீதியில் அல்லாத ஒரு சில படங்களில் திருநங்கைகளை முழுநீள படத்திலும் காட்டியிருக்கிறார்கள்.

ஆனால் முழுக்க திருநங்கைகளை பற்றிய வணிகரீதியான முதல் படம் இது என்று உறுதியாக சொல்ல முடியும். அதற்காக இந்த படத்தின் இயக்குனரும், முதன்மை நடிகையாகவும் ஆகியிருக்கும் விஜயபாஸ்கரைப் பாராட்டலாம்.

ஆனால் வணிகரீதியான படம் என்பதற்காக ஒரு வழக்கமான தாதாயிசம் கொண்ட கதையில் திருநங்கைகளை நடிக்க வைத்திருப்பதன் மூலம் விஜயபாஸ்கர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவில்லை.

விஜி என்ற கேரக்டரில் முதன்மை பாத்திரமாக வரும் விஜயபாஸ்கர் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள டோரா, சாந்தி என்ற பெண்களுக்கு தோழியாக இருக்கிறார். அத்துடன் திருநங்கைகளுக்கு எங்கே என்ன பிரச்சனை ஏற்பட்டாலும் அங்கே சென்று தட்டிக்கேட்கும் தாதாவுமாக இருக்கிறார்.

சட்டத்துக்கும் போலீசுக்கும் அஞ்சாமல் தனக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்யும் அந்த முரட்டு கேரக்டரில் வரும் விஜயபாஸ்கரின் நடிப்பு அனாயசமாக இருக்கிறது. விஷயம் தெரியாதவர்கள் அவரையும் ஒரு திருநங்கை என்றே நினைத்துக்கொள்வார்கள்.

அவருடன் தோழியாக வரும் டோரா உண்மையிலேயே திருநங்கையாக இருப்பவர். ஆனால் சாந்தி என்ற திருநங்கை பாத்திரத்தில் வருபவர் இன்னொரு ஆண் என்ற உண்மை நமக்கு தெரியவரும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. அந்த சாந்தி ஒருகட்டத்தில் கொல்லப்பட அதற்கு காரணமானவனை பழி வாங்க டோராவும், விஜியும் எடுக்கும் முயற்சிகளில் டோராவும் கொல்லப்பட விஜி என்ன செய்தார் என்பதுதான் கதையின் போக்கு.

இதற்கிடையில் தச்சு வேலை செய்யும் ஒரு ஆசாரி, அசைன்மென்ட் அடிப்படையில் சட்டத்தால் சாதிக்க முடியாமல் தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு விஜியை வைத்து தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்படி சில கொலைகளையும் விஜி செய்வது அதிர்ச்சியாக இருப்பதுடன் அந்த கொலைகள் கொடூரமாகவும் இருக்கின்றன.

வன்முறை என்பது இருபுறமும் கூரான கத்தி என்பதைப்போல இவர்கள் செய்யும் வன்முறையே இவர்களுக்கு எதிராக ஒரு கட்டத்தில் வந்து நிற்கிறது. ஆசாரியின் மகனை டோரா காதலிக்க அதன் விளைவாக ஏற்படும் அடுத்தடுத்த நிகழ்வுகள் விஜிக்கு எதிராகத் திரும்புகின்றன.

திருநங்கை என்றாலும் அவர்களுக்கும் காதல் வரும் என்பதை டோரா பாத்திரத்தின் மூலம் இயக்குனர் சொல்லி இருப்பதுடன் அந்த பாத்திரத்தில் வரும் டோரா அற்புதமாக நடித்தும் காட்டி இருக்கிறார்.

கதையின் ஊடே திருநங்கைகளின் வாழ்வியல் முறைகளையும் சொல்லிக் கொண்டே போகும் இயக்குனர் அவர்களிடம் இயல்பாக புழங்கும் கெட்ட வார்த்தைகளையும் படத்தில் முழுமையாக பயன்படுத்தியிருக்கிறார். பல இடங்களில் அப்படிப்பட்ட வசனங்கள் தணிக்கை துறையினரால் mute செய்யப்பட்டிருக்கின்றன.

என்னதான் விஜயபாஸ்கர் செய்யும் கொலைகளுக்கு நியாயம் கற்பித்தாலும் அதற்கு தண்டனை வழங்க இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்ற கேள்வி நம்மை உறுத்துகிறது அத்துடன் இவர்களும் பாலியல் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருப்பதே ஒரு தவறு என்பதுடன் சதா சர்வ காலமும் சிகரெட்டும் குடியுமாகவே கழியும் இவர்களுக்கு தண்டனை வழங்க என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது.

கிளைமாக்சில் வைத்து ஒரு நிருபர் விஜியிடம் அவருடைய வன்முறைக்கான காரணங்களை கேட்க அந்த இடத்திலாவது திருநங்கைகளின் துயரங்களை சரியாக சொல்லி இருக்க வேண்டிய இயக்குனர் விஜயபாஸ்கர் அதையும் சரியாக சொல்லாமல் ஒரு சீற்றத்தை காட்டியிருப்பது அந்தப் பாத்திரங்கள் மீதான நம்பகத்தன்மையை ஏற்படுத்த மறுக்கின்றது.

நம் சமுதாயத்தில் திருநங்கைகளுக்கு எதிராக இருக்கும் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லாமல் வன்முறை பாதையிலேயே மட்டும் பயணித்து இருக்கும் இந்த படத்தின் மூலம் திருநங்கைகள் மீது எந்தப் பரிவையும் இயக்குனரால் ஏற்படுத்த முடியாது என்பதே உண்மை.

மிகச் சிறுபான்மையினராக இருக்கும் அவர்களது பிரச்சினையை நேர்மறையாகவும், நியாயமாகவும் அணுகியிருந்தால் இந்தப் படத்தை கொண்டாடி இருக்க முடியும்.

சாந்தி என்ற திருநங்கை வேடத்தில் நடித்திருக்கும் சுகுமார் சண்முகம், ஆசாரியாக நடித்திருக்கும் சிவா இளங்கோ, பள்ளி மாணவனின் தந்தையாக நடித்திருக்கும் நட்ராஜ் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் பாத்திரத்தில் ஒன்றியிருக்கிறார்கள். 

சாந்தியைக் கொல்லும் சிறுவன் வெற்றி மிரள வைக்கிறான்.

ஹம்மர் எழிலனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பரணிகுமாரின் ஒளிப்பதிவு கதை நகரும் பாண்டிச்சேரி கேரளா போன்ற இடங்களை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.

இயக்குனர் தலைப்பில் சொல்லும் அளவுக்கு படத்தில் யாரும் வடிகட்டிய தங்கங்கள் ஆக இல்லை.

 ஃபில்டர் கோல்ட் – தவறாக எய்த அம்பு..!