March 28, 2024
  • March 28, 2024
Breaking News
August 5, 2022

எண்ணித் துணிக திரைப்பட விமர்சனம்

By 0 458 Views

இன்டர்நேஷனல் மாஃபியாக்களிடம் ஏற்படும் பிரச்சனை எளிய மனிதர்களின் வாழ்க்கையில் வந்து விளையாட, தன் வாழ்க்கை பாதிக்கப்பட்ட எளிய மனிதன் அதனை எப்படி எதிர்கொள்கிறான் அல்லது எதிரியைக் கொல்கிறான் என்பது கதை.

இலகுவான மற்றும் காதல் நாயகனாக வேடங்களை ஏற்ற ஜெய்க்கு இந்தப் படம் முழுமையான ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்தைக் கொடுத்து இருக்கிறது.

ஆனால் ஒரு ஆக்ஷன் ஹீரோவின் படம் என்றால் அவனுடைய அறிமுகமே அதிபுதிரியாக இருக்கும். இதில் அவர் ஒரு எளிய மனிதன் என்று காட்டுவதற்காக இயல்பான ஒரு அறிமுகமே கொடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்கே.வெற்றிச்செல்வன் 

இன்டர்நேஷனல் லெவலில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில கைமாற்றப்படும் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள 10 வைரங்கள் பல கைகள் மாறி அது தமிழ்நாட்டில் ஒரு அமைச்சரிடம் வந்து சேர்கிறது. அதை கைப்பற்ற அந்த இன்டர்நேஷனல் தாதா இங்கே ஒரு லோக்கல் கோஷ்டியை அனுப்ப வைரம் பதுக்கப்பட்டு இருக்கும் அமைச்சருக்கு சொந்தமான தங்க நகை கடை ஒன்றில் தாக்குதல் நடத்துகிறது அந்த கோஷ்டி.

அதில் அப்பாவிகள் மூவர் கொல்லப்பட உயிருடன் இருக்கும் ஒரு இளம் பெண்ணை கேடயமாக பயன்படுத்தி கொள்ளையர்கள் தப்பிக்கின்றனர். ஆனால் அந்த வைரம் கொள்ளையர்களிடம் இருந்தும் காணாமல் போக வைரம் கிடைத்ததா, அந்த இன்டர்நேஷனல் தாதா அதை மீண்டும் கைப்பற்றினாரா, இதில் நாயகன் ஜெய்க்கு என்ன வேலை என்பதெல்லாம் மீதிக்கதை.

அழகான ஜெய்க்கு ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்து கொடுக்கப்பட்டாலும் அவரது வனப்புக்கு ஈடாக காதல் கதையும் உள்ளே இழை. அவர் விலகிப் போனாலும் விலகிப் போகாமல் அதுல்யா ரவியிடமிருந்து வரும் காதல் அவரை மென்மைப் படுத்த, காதலில் கட்டுண்டு கிடப்பதில் களையாகத் தெரிகிறார்.

அப்படி தன்னை காதலில் வீழ்த்திய அதுல்யா ரவியை தங்க நகை கொள்ளை விஷயத்தில் கொள்ளையர்கள் வீழ்த்தி விட அதற்காகத் திட்டமிட்டு பழிவாங்கும் முயற்சியில் அதிரி புதிரியாக அமர்க்களப்படுத்தி இருக்கிறார். அதில் திட்டமிட்டுத் துணியும் முயற்சிதான் எண்ணித் துணிவது.

அதுல்யா ரவி, கிடைத்த பாத்திரத்தில் நிறைவாகச் செய்திருக்கிறார். ஜெய்யை மறுதலிக்கும் அப்பாவிடம் சினம் கொள்ளும் போதும், இன்னொரு பெண்ணின் துயர் தீர்க்க, கொள்ளையர்களையே எதிர்க்கும் போதும் ஜொலிக்கிறார்.

அவரைவிட அழுத்தமான வேடம் கொள்ளையர்களால் கடத்தப்படும் அஞ்சலி நாயருக்கு. தன் குழந்தையின் உயிரைக் காக்க நகைகளை விற்கப்போய் கணவனின் உயிரையும் பறி கொடுத்ததுடன் குற்றவாளிகளை பார்த்த காரணத்துக்காக, ஒரு பக்கம் போலீஸ், இன்னொருபக்கம் சதிகாரர்கள் என்று துரத்த, ஜெய்யின் ஒரே பாதுகாப்பில் இருக்கும் அவரைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. 

வில்லி வேடத்தில் வித்யா பிரதீப் – பொருத்தமாக இருக்கிறது. வம்சி கிருஷ்ணாவுடன் இணைந்து வில்லத்தனம் செய்தாலும் ” இதுக்காக ஒரு பெண் இழக்க கூடாததை இழந்தேன்…” எனும்போது அவரைப் பார்க்கக் கூட பரிதாபமாக இருக்கிறது. 

வம்சி கிருஷ்ணா படு ஸ்மார்ட்டாக இருக்கிறார். ஆனால் அவர் எப்போதும் வில்லன்தான் என்பது சினிமா இலக்கணம்.

அமைச்சராக வரும் சுனில் ரெட்டி, யார் எதைச் சொன்னாலும் நம்புகிறார். ஒரு அமைச்சர் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுவும் சினிமா விதிதான்.

சாம் சி.எஸ் இசை பொருத்தம், தினேஷ் குமாரின் ஒளிப்பதிவு சிறப்பு.

எண்ணித் துணிக – துணிந்தபின் மனமே..!