September 16, 2026
  • September 16, 2026
Breaking News
  • Home
  • Uncategorized
  • என்ன விலை திரைப்பட விமர்சனம்
September 16, 2026

என்ன விலை திரைப்பட விமர்சனம்

By 0 12 Views

இந்த உலகில் எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு என்பார்கள். ஆனால், செய்யாத குற்றத்துக்கு பழி சுமத்தப்பட்டு உலகின் பார்வையில் குற்றவாளியாக செய்திகளில் அவமானப்பட்ட ஒருவர் பின்னர் நிரபராதி என்று தெரிந்தால் அந்த உண்மையை யாரும் பிரபலப் படுத்துவதில்லை.

முன்னர் சாட்டப்பட்ட குற்றத்தைச் சுமந்தபடியேதான் அவர் வாழ நேர்கிறது. இழந்த அவரது மானத்துக்கு என்ன விலை என்ற நியாயமான கேள்வியை இந்தப் படத்தில் நீதித் துறையின் முன்னால் வைக்கிறார் இயக்குநர் சஞ்சீவ் பழூர்.

அதிலும் இது போன்ற அவமானங்களால்  வசதி படைத்தவர்களை விட விளிம்பு நிலை மனிதர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் குரலாக ஒலிக்கிறது படம்.

ராமேஸ்வரம் பகுதியில் பக்தர்கள் வீசும் காசுகளைக் கடலில்.மூழ்கி எடுத்து வாழ்க்கையை ஓட்டும் கருணாஸ், தன் மனைவி, மகன், மகள் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார்.

அப்படி.ஒருநாள் கடலில் மூழ்கிய ஒரு பதக்கம் அவர் கைக்குக் கிடைக்கிறது. அதைக் காவல் துறையில் இருக்கும் மோகன்ராவிடம் காண்பிக்க, ஏற்கனவே கோவில் கொள்ளை ஒன்றில் இருக்கும் அழுத்தத்தைக் குறைக்க, அதைக் கோவில் கொள்ளையில் சம்பந்தப்படுத்தி கருணாசைக் குற்றவாளியாக்குகிறார் அவர்.

செய்யாத தவறுக்கு அவமானப்படும் கருணாசுக்கும், அவர் குடும்பத்துக்கும் ஒரே ஆதரவாக வந்து நிற்கிறார் வழக்கறிஞர் நிமிஷா சஜயன்.

அவரால் கருணாஸின் மீது சாட்டப்பட்ட குற்றத்தைத் துடைக்க முடிந்ததா என்பதுடன் கதை நிற்காமல் அதுவரை கருணாஸ் இழந்த மானத்துக்கு என்ன விலை என்ற கேள்வியையும் எழுப்புகிறார். அதற்கு நீதி மன்றத்தின் பதில் என்ன என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் ஹை லைட்.

நகைச்சுவை என்றாலும் சரி, நெகிழ்ச்சியான நடிப்பு என்றாலும் பிய்த்து உதறும் கருணாஸ், ஒரு அப்பாவி குடும்பஸ்தன் வேடத்தில் அப்பட்டமாக பொருந்துகிறார். நம்பி வந்த போலீஸ் எதிர்பாராமல் தன்னைக் குற்றவாளி ஆக்கும்போது அவர் வெளிப்படுத்தும் அதிர்ச்சி நம் இதயத்தைப் பிழிகிறது.

அதேபோல் இழந்த தன் மானத்துக்கு என்ன விலை என்று நிமிஷாவிடம் அவர் உடைந்து வெடிக்கும்போதும் உச்சம் தொடுகிறார். அவருக்குப் பல விருதுகளைப் பெற்றுத்தரும் இந்தப்படம்.

நிமிஷாவின் நடிப்பும், படத்தில் நிமிஷ நேரமேனும் நம்மைத் திரையைக் கண்களை விட்டு அகல விடாமல் செய்கிறது.

ஆனால், ஒரு கட்டத்தில் அவரது முயற்சிகள் தோற்கும் போது தன்னையே நம்பி இருக்கும் கருணாஸ் குடும்பத்துக்கு ஆறுதலாக நிற்காமல் அழுதபடி நிற்பது அந்தப் பாத்திரத்தின் மீது நெருடலை ஏற்படுத்துகிறது.

கருணாஸ் மனைவியாக வரும் விஜயலட்சுமி வீரமணி, அட்வகேட் ஜெனரலாக வரும் ஒய்.ஜி.மகேந்திரன், நீதிபதிகள் பூர்ணிமா பாக்யராஜ், நிழல்கள் ரவி தங்கள் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

இவர்களுடன் சின்னச் சின்ன பாத்திரங்களை ஏற்றிருக்கும் மொட்டை ராஜேந்திரன், கமலேஷ் ஜெகன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்டோரும் கவனம் பெறுகிறார்கள்.

ஆழ்கடல் போல அமைதியாக செல்லும் திரைக்கதைக்கு கடல் அலையின் சீற்றத்தை போல பின்னணி இசைத்திருக்கும் சாம் சி.எஸ். படத்தின் பலமாகிறார்.

பூகோளரீதியாக ராமேஸ்வரத்தைக் கச்சிதமாக காட்சிப்படுத்தி உள்ள ஆல்பா ஆண்டனியின் ஒளிப்பதிவு கவனத்தைக் கவர்கிறது. 

கேட்கப்பட வேண்டிய… ஆனால் இதுவரை யாருக்கேட்காமல் விட்ட கேள்வியைக் கேட்டு அதை நீதித் துறையின் முன் வைத்ததுடன் அதற்கான ஒரு நியாயமான தீர்வாகவும் ஒன்றைச் சொல்லியிருக்கும் சஞ்சீவ் பழூர் பாராட்டுக்குரியவர்.

என்ன விலை – உரிய தொகை..!

– வேணுஜி