உலகிலேயே கொடிய உயிரினம் மனிதன்தான் என்பார்கள். காரணம், பசி மற்றும் தற்காப்பு காரணமில்லாமல் வஞ்சகத்துக்காகவும், சுயநலத்துக்காகவும் தன் இனத்தையே அழிக்கும் உயிரினம் மனிதன் மட்டும்தான். அதைத்தான் இந்தப் படத்தில் சொல்கிறார் இயக்குநர் சர்ஜுன் கே.எம்.
இருபதைத் தொடும் வயதில் தன் அக்காவைக் கொன்ற மாமாவைக் கொன்று ஜெயிலுக்குப் போகிறார் கிஷோர். இறந்தவர்களின் ஒரே மகன் சிறுவன் என்பதால் கொலைப்பழியை அவன் ஏற்றுக்கொண்டால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியுடன் தன்டனை முடிந்துவிடும் என்று சிறுவயது கிஷோர் நினைக்க அதற்கு அவன் உடன்படாததால் 14 வருடம் சிறையில் கழிக்கிறார்.
விடுதலையாகி வந்ததும் அக்காள் மகனாக வரும் விவேக் ராஜகோபாலைப் பழிதீர்ப்பார் என்று எண்ணினால் மீண்டும் ஒரு பெரும்தொகை அடித்து செட்டிலாகத் திட்டம் போட்டு அவர் உதவியுடன் வரலஷ்மியைக் கடத்துகிறார். ஆனால், அந்த சதிவலைக்குள் விவேக், வரலஷ்மி கூட்டுச் சதியும் இருக்க முடிவு என்ன ஆகிறது என்பது கதை.
ஆளைக்கடத்தி வைத்துக்கொண்டு பணம் கேட்பதும் போலீஸுக்குப் போனால் கடத்திய நபரைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதும் பல படங்களிலும், உண்மையிலும் நாம் பார்த்த சங்கதி என்பதால் முன்பாதியில் அவ்வளவு பரபரப்போ, திருப்பங்களோ இல்லை.
ஆனால், வரலஷ்மியை மீட்க அவரது அப்பா, ஓய்வு பெற்ற காவல் அதிகாரி சத்யராஜின் உதவியை நாடி, அது எதிர்மறையாக முடிவதால் அவரை அந்தப்பணியிலிருந்து விடுவிப்பதும், அதற்குப்பின் சத்யராஜ் எடுக்கும் முடிவும் கண்டிப்பாக பின்பாதியில் விறுவிறுப்பை ஏற்படுத்துகின்றது.
கிஷோர் சிறந்த நடிகர் என்று சொல்லத் தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால் அவரது நடிப்புக்கு இதில் தீனி இல்லை என்றே சொல்லவேண்டும்.
ஹீரோ வேடமோ, வில்லன் வேடமோ எதையும் பேலன்ஸ் தவறாமல் தூக்கிச் செல்லும் வல்லமை படைத்த சத்யராஜ் அப்படி இரண்டையும் இந்தப்படத்தில் தோளுக்கு ஒன்றாக சுமக்கிறார். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான அவர் பத்து வயது மகளுடன் வசிப்பதற்கு கஷ்டப்பட்டு ஒரு கதை சொல்கிறார்கள். அவர் வயதானவராக இருக்க, அவரைவிட இளவயது கிஷோரும், விவேக்கும் அவரை எதிர்த்து எதிர்த்து சண்டை போட திராணி இல்லாதவர்களாக இருப்பது விந்தை.
வரலஷ்மி படத்துக்குப் படம் உடல் இளைத்தார்… உடல் இளைத்தார் என்கிறார்கள். நமக்கு ‘இளைத்ததே இப்படியா..?’ என்றிருக்கிறது. காதலன் விவேக் சொன்ன ஒரு பொய்க்காக அப்படியா கிளைமாக்ஸில் முடிவெடுப்பார்..?
சத்யராஜ் மகளுக்கு வந்திருக்கும் வியாதியை நாம் தெரிந்து வைத்திருப்பதைவிட அவருக்கல்லவா அதிகம் தெரிந்திருக்கும். அப்படி ஒரு பேஷன்டைக் காரில் ஏற்றிக்கொண்டா அந்த ஆபத்தான வேலைக்குப் போவார் அவர். அது ஒருபக்கம் என்றால் கடைசியில் குழந்தைக்கு சீரியஸாகி நெருப்பு தேவைப்படும் பட்சத்தில் எட்டு கோடி ரூபாயைப் போட்டு எரிக்கிறார் என்பது அபத்தம்.
கார் ரேடியேட்டரைவிடவா சூடு வேண்டும்..? அது போகட்டும். நெருப்புதான் வேண்டுமென்றால் அந்த ரூபாயை எரித்ததற்கு பதிலாக அது கொண்டு வந்த பை அருகிலேயே இருக்கிறது. அதை எரித்திருந்தால் ரூபாயைவிட அதிக நேரம் எரிந்திருக்கும். பணமும் காப்பாற்றப் பட்டிருக்கும். அந்தப் பணத்தை வைத்துக் குழந்தையையும் காப்பாற்றி இருக்கலாம்.
அதேபோல் கடத்தப்பட்ட மகளை விட்டுவிட்டார்களா என்று அப்பாவும் சோதிக்காமல், அவர் வைத்த பையில் பணம் இருக்கிறதா என்று கிஷோரும் சோதிக்காமல் ‘கடத்தல் டீல்’ முடிவதும் ‘வீக் பாய்ண்ட்..!’
இன்றைய தமிழ்சினிமாவின் ரசனை மையமாக இருக்கும் யோகிபாபுவை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம்.
சிறையில் இருந்துகொண்டே விவேக்குக்கு கிஷோர் செய்ததாகச் சொல்லும் உதவிகளில் மட்டும் நெகிழ்ச்சி இழையோடுகிறது.
சுதர்சன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு அருமை. சுந்தரமூர்த்தி கே.எஸ்ஸின் இசை தேவைக்கேற்ற விகிதத்தில்
எச்சரிக்கை – கடத்தல் பழசு… ‘ரேன்சம்’ ரெண்டாயிரம் ரூபாய் மட்டும் புதுசு..!