ஒருவருக்கு சினிமா சாப்பாட்டில் பெயர் எழுதியிருக்கிறதென்றால் அதை யாராலும் மாற்ற முடியாது. அதேபோல் பெயர் எழுதவில்லையென்றால் எத்தனை பெரிய அறிவாளியானாலும் சினிமாவில் ஜெயிக்க முடியாது என்பார்கள். இதை நம்புகிறீர்களோ இல்லையோ, நிஜத்தில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
படத்துக்குப் படம் கதைத் திருட்டில் சிக்கிக் கொள்ளும் ஏ.ஆர்.முருகதாஸ் கடந்த ‘கத்தி’, ‘சர்கார்’ படங்களில் சிக்கிக்கொண்டு வில்லங்கத்துக்குள்ளான கதை ஊருக்கே தெரியும். இருந்தும் அடுத்து அதைவிடப் பெரிய படமான ரஜினி படம் அவருக்குக் கிடைக்க அதன் படப்பிடிப்பு நாளை மும்பையில் தொடங்கவிருக்கிறது.
கடந்த படமான ‘சர்கார்’ என்பதில் இரண்டெழுத்து மாற்றி ‘தர்பார்’ என்று இந்த ரஜினி படத்துக்குப் பெயர் வைத்த ஏ.ஆர்.முருகதாஸ் அதன் முதல்பார்வையை இன்று வெளியிட்டார். இதேபோல் அவர் ஒவ்வொரு பட முதல்பார்வை வெளியிடும்போதும் அது எந்தப் படத்தின் காப்பி என்பதை சமூக வலைதளங்களே சில மணிநேரத்தில் கண்டுபிடிப்பது வாடிக்கையாக இருக்கிறது.
இந்நிலையில் இன்று வெளியான ‘தர்பார்’ டிசைனை சினிமாக்காரர்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் மட்டும் ‘ஆகா ஓகோ’வெனப் பாராட்ட, அடுத்த சில மணிநேரத்திலேயே அந்த டிசைன் எந்தப் படத்தின் காப்பி என்பது வெளியில் வந்துவிட்டது.
அர்னால்ட் நடித்த ‘கில்லிங் கந்த்தர்’ ஆங்கிலப் பட டிசைனும், இந்தியில் ரன்வீர் சிங் நடித்த சிம்பா பட டிசைனும் அப்படியே மேற்படி ‘தர்பார்’ ஸ்டைலில் இருக்க நெட்டிசன்கள் தர்பார் டிசைனை ‘பட்டி’ பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த டிசைன்கள் கீழே…
நம் கேள்வி என்னெவென்றால் டிசைனுக்கே மூளையைக் கசக்காமல் வெறொன்றை எடுத்துக் கொள்பவர்கள், கதைக்கா மூளையைக் கசக்கப் போகிறார்கள் என்பதுதான். நமக்குத் தெரிவது சூப்பர் ஸ்டார் போன்ற நடிகர்களுக்குத் தெரிய வேண்டுமே..?!
இப்போது முதல் லைனைப் படித்துப் பாருங்கள்… விளங்கும்..!