November 22, 2024
  • November 22, 2024
Breaking News
July 31, 2018

முதல்வர் பேச்சுக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்

By 0 942 Views

சேலத்தில் நேற்று முன் நாள் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது அரசு ஊழியர்கள் சம்பளத்தை குறை கூறி பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதிலிருந்து…

“அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அளவுக்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது. அதை வாங்கிக் கொண்டு ஒழுங்காக வேலை செய்யாமல், போராட்டத்திற்கு மேல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி அரசு ஊழியர்களை மரியாதைக்குறைவாக ஒருமையில் முதல்வர் விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

சேலத்தில் நேற்று முன் நாள் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போதுதான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு பேசியிருக்கிறார். அந்தக் கூட்டத்திற்கு செய்தியாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை என்றாலும் கூட, அக்கூட்டத்தில் கலந்து கொண்ட யாரோ ஒருவர் முதல்வரின் பேச்சை ஆடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் எடப்பாடி பழனிச்சாமி அரசு ஊழியர்களையும், அதிகாரிகளையும் மிகவும் மரியாதைக்குறைவாக பேசும் சர்ச்சைக்குரிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

“அரசு ஊழியர்கள் நல்லா சிந்தித்துப் பாருங்க. இன்று ஆரம்ப பள்ளியில் ஹெட்மாஸ்டர்களாக இருப்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? 82 ஆயிரம் ரூபாய். ஐந்தாம் கிளாஸ் ஹெட்மாஸ்டருக்கு 82 ஆயிரம் ரூபாய். நம்ம பையன் பி.இ, கஷ்டப்பட்டு படித்து, பத்து வருடம் கழிந்தாலும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தாண்ட மாட்டான். இதேபோல் ஆசிரியர்களுக்கு 160 நாள் லீவு கிடைக்கிறது. எட்டாம் வகுப்புவரை படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி, பாஸ், பெயிலே கிடையாது. அப்படியே விட்டுருவான். இவ்வளவு பணத்தையும் வாங்கிக்கொண்டு போராட்டம் நடத்துகின்றனர்..!’’ என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார். மேலும் பல இடங்களில் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் மிகக்கடுமையாக பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான். அப்படிப்பட்டவர் அவருக்கு கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது; ஆனால் அவர்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை என்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் விமர்சிப்பது முறையல்ல.

அரசு ஊழியர்கள் முதல்-அமைச்சரிடம் வந்து இனாம் கேட்கவில்லை. அவர்களின் உரிமைகளை மட்டும் தான் கேட்கிறார்கள். தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்காக ஆகும் செலவை விட ஊழல் காரணமாக அரசுக்கு ஏற்படும் இழப்பு மிகவும் அதிகமாகும். எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அவதூறாகவும், மரியாதைக் குறைவாகவும் பேசுவதை கைவிடுவதுடன், அவர்களிடம் முதல்-அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிலுவையிலுள்ள கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்..!”