நிலையற்ற வாழ்க்கைத் தன்மையை அதன் போக்கில் சொல்லிச் செல்லும் படம். நாளை என்ன நடக்கும் என்று தெரியாத வாழ்க்கை எப்படி எல்லாம் மனிதனை அதன் போக்கில் இழுத்துக் கொண்டு போகிறது என்பதை அப்பட்டமாகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் அஸ்வின் சந்திரசேகர்.
இன்டீரியர் டெக்கரேட்டராக தொழிற்கல்வி பயின்று ஆனால் அதில் நிலைபெற முடியாமல் தவிக்கும் நாயகன் சந்தோஷ் சோபன், வருமானத்துக்காக பைக் டாக்ஸி ஓட்டுகிறார்.
அதன் மூலம் நாயகி மானசா வாரணாசியின் நட்பு ஏற்பட அது அவர்கள் இருவரையும் காதலுக்குள் இடடுச் செல்கிறது.
மனசாவும் ஐடி துறையில் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். இருவருமே வேலை தேடி சென்னை வந்தவர்கள் என்பதால் சந்தர்ப்பவாசமாக ஒரே வீட்டில் தங்கி, லிவிங் டுகெதர் ஆகவே வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த விஷயம் அவர்கள் வீட்டுக்கு எட்டும் போது அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் அவர்களை எப்படி எல்லாம் அலைக்கழிக்கிறது என்பதை உணர்வும், உணர்ச்சியுமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் சோபன், அசப்பில் இளவயது இந்தி நடிகர் அஜய் தேவ்கன் போல இருக்கிறார். படத்துக்குள் பல கெட்டப்புகளில் வரும் அவர் நடிப்பில் நன்றாகவே பட்டை தீட்டப்பட்டிருக்கிறார். எப்படிப்பட்ட கேரக்டரையும் அவரால் ஏற்று நடிக்க முடியும் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது.
நாயகியாக நடித்திருக்கும் மானசா வாரணாசியின் முகமே உணர்வுத் துடிப்புகளோடு இருக்கிறது. சற்றே புன்னகை பூக்கும் அந்த முகம் போகப்போக எப்படி மாறுகிறது என்பது ஆச்சரியமான ரசாயன மாற்றம்.
அசப்பில் அபிநயா போல் தெரியும் அவர் அழகிலும் நடிப்பிலும் ஓங்கித் தெரிகிறார்.
கொஞ்ச காலம் இடைவெளி விட்டு வந்தாலும் யோகி பாபு வரும் காட்சிகள் நம்மைச் சிரிக்க வைக்கின்றன. அவரை அவர் இஷ்டத்துக்கு நடிக்க விடாமல் இயக்குனர் கடிவாளம் போட்டிருப்பதால் இது சாத்தியம் ஆகியிருக்கிறது.
சந்தோஷ் சோபன், மானசாவின் பெற்றோர்களாக வருபவர்களும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.
ஒரு படத்தில் எல்லோருமே நன்றாக நடிக்கிறார்கள் என்றால் அதன் காரணம் இயக்குனர் திறமை மிக்கவர் என்பதாகத்தான் இருக்கும்.
தினேஷ் புருசோத்தமனின் ஒளிப்பதிவு இயல்புடன் அழகியலும் கலந்து ஒளிர்கிறது. படத்தில் மிகச்சிறந்த பங்களிப்பு அவருடையது.
இசையமைப்பாளர் ஆதித்யா ரவீந்திரனின் இசையும் அப்படியே. உணர்வுகளை நரம்புகளில் கடத்தும் அவரது பின்னணி இசைக்கு வந்தனம்.
கூடவே கணேஷ் சிவாவின் படத்தொகுப்பும்…
இப்படி ஒரு டீம் அமைந்து விட்டாலே படத்தின் வெற்றி பாதி உறுதிப்பட்டு விடுகிறது.
எழுதி இயக்கியிருக்கும் அஸ்வின் சந்திரசேகர், வாழ்க்கையை திறம்பட படித்திருக்கிறார். அதன் அடிப்படையில் எழுதிய ஸ்கிரிப்ட் ஆனதால், ஒரு மனிதனின் வாழ்க்கையை நேரடியாக பார்க்கும் அனுபவத்தை இந்தப் படம் தந்து விடுகிறது.
அத்துடன் ஒரு கதை இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும் இப்படித்தான் முடிய வேண்டும் என்கிற இலக்கணங்களை எல்லாம் தவிர்த்து எந்த முடிவும் இல்லாமல் முடிகிறது படம்.
அப்படித்தானே இருக்கிறது எல்லோர் வாழ்க்கையும்..?
சின்ன சின்ன குறைகள் மற்றும் லாஜிக்குகள் தவிர்த்து பார்த்தால் சமீபத்தில் பார்த்த சிறந்த தமிழ்ப் படம் இதுவாகத்தான் இருக்கும்.
கப்புள் பிரண்ட்லி – திரை அனுபவம் லவ்லி..!
– வேணுஜி