June 9, 2026
  • June 9, 2026
Breaking News
March 17, 2026

திவ்யா திரைப்பட விமர்சனம்

By 0 180 Views

சாதிப் பிரச்சினையின் கொடூரத்தை சொல்லும் இன்னொரு படம். 

தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரான நாயகன் ஆர் ஜே பி தனது தாத்தாவுடன் வசித்து வருகிறார். பரம்பரையாகவே பறை இசைக் கலைஞராக வரும் அவர் வாழ்வில் முன்னேற எண்ணி கல்லூரியில் படித்து வருகிறார். 

அதே கல்லூரியில் அவர் படிக்கும் இரண்டாம் ஆண்டில் புதிதாக சேரும் நாயகி கேத்திக்கும்  அவருக்கும் ஆரம்பம் முதலே முட்டிக்கொள்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் இருவருக்கும் புரிதல் ஏற்பட்டு அது காதலாக மலர்கிறது. 

கேத்தி ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர். ஒரு கட்டத்தில் கேத்தியின் காதலை அறிந்த அவரது பெற்றோர் அவரை கண்டித்து கல்லூரிக்கு செல்ல விடாமல் தடுக்கின்றனர். 

அத்துடன் உடனடியாக ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைக்க முயல, அதை அறிந்த ஆர் ஜே பி, கேத்தியை அழைத்துக் கொண்டு போய் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்.

அதன் முடிவு என்ன ஆனது என்பதுதான் மீதிக்கதை

ஆனாலும் நாயகன் ஆர் ஜே பிக்கு துணிச்சல் அதிகம். நாயகன் என்பதற்காக ஒரு துளி மேக்கப்போ, தனித்து தெரியும் உடைகளோ அணியாமல் அவரது நண்பர்களாக வரும் சபி, ஜிவியை போன்றே சர்வ சாதாரணமான இளைஞராக வருகிறார். 

நடிப்பிலும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. “இவரா ஹீரோ..?” என்கிற அளவில்தான் படம் முழுவதும் வருகிறார். ஆனால் அந்தக் கடைசி காட்சியில் ஓடிவரும் ஓட்டமும், கால் இடறி விழுவதும், கதறி அழுவதும் அவருக்குள் இருக்கும் நடிகரை வெளிக்கொணர்ந்து விடுகின்றன. 

அத்துடன் அவரே படத்தின் இயக்குனராகவும் ஆனதில் எந்த இடத்தில் எவ்வளவு நடிக்க வேண்டும் என்பதை அளவு தெரிந்து நடித்திருக்கிறார். 

அத்துடன் மற்றவர்களையும் அதே போல் வேலை வாங்கி இருப்பதும் பெரிய விஷயம் தான்.

நாயகி கேத்தியும் அப்படித்தான். சாதாரணமாக நம்மை சாலையில் கடந்து போகும் ஒரு பெண் போலவே தோற்றம் அளிப்பவர், காதல் வயப்படுவதிலும் காதலனுடன் கைகோர்த்து ஓடிப்போகும் போது ஏற்படும் பதட்டத்திலும், கிளைமாக்ஸ் காட்சியிலும் ஸ்கோர் செய்து விடுகிறார்.

நாயகனின் தாத்தாவாக வரும் பவுன்ராஜ், பாத்திரமாகவே மாறி இருக்கிறார். கடைசியில் அவர் பாடும் மனதைப் பிசையும் பாடலுடன்தான்  படம் முடிகிறது.

கேத்தியின் அப்பாவாக வரும் அனந்த் ராம் மற்றும் அம்மாவாக வரும் கலாவதியும் கூட நடிப்பு வெளிச்சம் படாத முகங்களாக இருந்தாலும் அப்படியே பாத்திரத்தில் பொருந்திப் போயிருக்கிறார்கள். 

அசப்பில் அமீர் போல் இருக்கும் வில்லன் செந்தில், சாதிக்காக எதையும் செய்யும் கொடூரனாக பயமுறுத்துகிறார். 

இந்தப் படத்துக்கு ஒரு ஒளிப்பதிவாளர் இருந்தாரா என்கிற அளவில் நாம் கண்ணால் பார்க்கும் கோணங்களை மட்டுமே வைத்து நேரில் பார்ப்பது போல் ஒரு மாயையை உருவாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வகுமார். 

சங்கர் ராமன் இசையும் வழக்கமான இசையமைப்பாளர்களை பின்பற்றாமல் தனக்கென்று ஒரு பாணியை வைத்துக்கொண்டு மிகவும் எளிமையாக இசையமைத்து கவனம் கவர்கிறார்.

வாத்திய கருவிகள் ஆக்கிரமிக்காத இசையாக ஆனதால் பாடல்களில் பாடலாசிரியர் கவி கண்ணனின் வரிகள் கவனிக்க வைக்கின்றன. 

வளர் பாண்டியன் படத்தொகுப்பம் கூட இயல்பாகவே நகர்கிறது.

எழுதி இயக்கி நாயகனாக நடித்தும் இருக்கும் ஆர் ஜே பியின் முயற்சிக்கு வந்தனம். 

முதல் பாதி வழக்கமான பட்ஜெட் படம் போல் கடந்தாலும் இரண்டாவது பாதியில் நம்மை கட்டிப்போட்டு உட்கார வைத்து விடுகிறார்.

இது போன்ற எல்லாப் படங்களிலும் காதலர்களின் வழயே அதிகமாக பேசப்படும். ஆனால் இந்தப் படத்தில் காதலர்களின் வலி ஒரு புறம் இருக்க அவர்களை பெற்றவர்களின் தவிப்பையும் அற்புதமாக காட்டியிருக்கிறார்.

அதிலும் கேத்தியின் பெற்றோர் இருதலைக்கொல்லி இரும்பாக படும் அவஸ்தை நம்மைக் கலங்க வைக்கிறது.

காதலில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருந்தால் படத்தின் முடிவு ஏற்படுத்தும் பாதிப்பு இன்னும் அதிகரித்து இருக்கும். 

திவ்யா – அணைக்க விரும்பாத சா’தீ..!’

– வேணுஜி