இப்போதெல்லாம் 100வது நாள் என்பது ஆறு கிரகங்கள் நேர்க்கோட்டில் வருவது போன்ற அதிசய நிகழ்வு. ஆனால், கலைப்புலி தாணு தயாரித்து வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடித்த ‘அசுரன்’ படம் அதிரி புதிரி வெற்றியைப் பெற்று இன்றைக்கு 100வது நாளைத் தொட்டிருக்கிறது.
இதற்குக் காரணமான அனைவருக்கும் தயாரிப்பாளர் எஸ்.தாணு தன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டிருப்பதுடன் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவையும் ஏற்பாடு செய்திருக்கிறார்.
இது ஒருபுறமிருக்க, இதே தாணு தயாரிப்பில் மீண்டும் படம் இயக்க ஒத்துக்கொண்டிருக்கும் வெற்றிமாறன், இந்தப்படத்தில் சூர்யாவை இயக்குகிறார். இது அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அசுரனை விட பலமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பை கிளப்பியிருக்க, இதன் தலைப்பை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார் வெற்றிமாறன்.
அது, ‘வாடிவாசல்’. இந்தப்பெயரில் 1959-ல் எழுத்தாளர் சி.சு.செல்லப்பா மதுரை ஜல்லிக்கட்டு வீரர்களைப்பற்றிய குறுநாவல் ஒன்றை எழுதியிருப்பதால் அதை ஒற்றித்தான் இந்தப்படத்தின் திரைக்கதையை அமைக்கவிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏற்கனவே அசுரனை பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை வைத்து உருவாக்கி வெற்றிபெற்றதால் இப்போதும் ஒரு நாவலை வைத்துப் படமாக்க இருக்கிறார் வெற்றிமாறன் என்பது இலக்கிய உலகிலும் பூரிப்பைத் தந்துள்ளது.
‘வாடிவாசல்’ திறக்கும்போதே அது ஒரு வெற்றிவாசல் என்பதும் உறுதியாகியிருக்கிறது..!