ஐக்கிய அரபு அமீரகத்தில் 14வது ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில், நேற்று (23 செப்டம்பர் 2018) நடந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொண்ட நிலையில் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
இந்த போட்டியில் தன் 505வது ஆட்டத்தை விளையாடியதன் மூலம் இந்தியாவிற்காக டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 என அனைத்து போட்டிகளையும் சேர்த்து அதிக அளவிலான போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் எனும் பெருமையை மகேந்திர சிங் தோனி பெற்றார்.
இதன் மூலம் இரண்டாமிடத்தில் இருந்த ராகுல் டிராவிட்டை (504 போட்டிகள்) மூன்றாவது இடத்துக்குத் தள்ளியுள்ளார். இந்தப் பட்டியலில் 664 போட்டிகளில் விளையாடி கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார்.
2004-ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக கிரிக்கெட்டில் உள்ளே நுழைந்த தோனி இதுவரை 322 ஒரு நாள் போட்டிகள், 90 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 93 டி20 போட்டிகள் என மொத்தம் 505 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 15 சதங்கள், 102 அரை சதங்கள் உள்பட 16 ஆயிரத்து 268 ரன்களை அவர் பெற்றுள்ளார்.
இந்த 505 போட்டிகளில் 331 போட்டிகளுக்கு கேப்டனான அவர் டி20 உலகக் கோப்பை, ஒரு நாள் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசியின் மூன்று விதமான கோப்பைகளையும் கைப்பற்றிய ஒரே கேப்டன் என்ற சாதனையையும் நிகழ்த்தி வரலாறு படைத்திருக்கிறார்.