‘பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்’ எஸ். கதிரேசன் தயாரிப்பில் அருள்நிதி நாயகனாக நடிக்க நாளை (ஆகஸ்ட் 26) உலகெங்கும் வெளியாக உள்ள திரைப்படம் ‘டைரி’. இப்படத்தை அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் அருள்நிதியுடன் கிஷோர், ஜெ.பி, ஷாரா, பவித்ரா மாரிமுத்து, தணிகை மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை அரவிந் சிங் ஒளிப்பதிவு செய்ய, ராஜா சேதுபதி படத்தொகுப்பினை செய்துள்ளார். ரோன் ஏதன் யோஹன் இசையமைத்துள்ளார்.
‘டைரி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட படத்தின் நாயகன் அருள்நிதி,
திரில்லர் படம் என்றாலே என் பெயர்தான் இயக்குனர்களுக்கு நினைவு வருகிறது. ஆனால், இந்தப்படம் 2019 இல் ஒத்துக் கொண்டது. கொரோனா பிரச்சினைகளுக்கு பின் இப்போது வெளியாகிறது. அதற்குப் பின் ஒத்துக்கொண்ட படங்கள் தான் டி பிளாக்கும், தேஜாவு வும். இப்போது வரிசையாக இந்தப்படங்கள் வெளியாவதால் வரிசையாக திரில்லர் படங்களில் நான் நடிப்பது போல தோன்றுகிறது.
இனிமேல் தொடர்ந்து திரில்லர் படங்களில் நடிப்பதை தவிர்க்க விரும்புகிறேன். அதேபோல் கதைக்குத் தேவையில்லாமல் புகை பிடிப்பது மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்க ஒத்துக் கொள்வதில்லை…!” என்றார்.
படத்தின் இயக்குனர் இன்னாசி பாண்டியன் பேசுகையில், ‘ஊட்டி மலைப் பாதையில் 13வது கொண்டை ஊசி வளைவில் தொடர்ந்து விபத்துகள் நடக்க அது குறித்து ஆராய வரும் காவல் அதிகாரி அருள்நிதி க்கு ஏற்படும் திரில் அனுபவங்களைத்தான் கதையாகச் சொல்கிறேன்.
படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் வருகின்றன. எது நிஜம், எது கிராபிக்ஸ் என்று தெரியாது. ஒரு பஸ் செட் ஒன்றைப் போட்டு படமெடுத்தோம். படம் மீது கொண்ட நம்பிக்கையில் தயாரிப்பாளர் கதிரேசன் சார் நிறைய செலவு செய்து விட்டார். சின்ன படமாக ஆரம்பித்து பெரிய பட்ஜெட் படமாக்கி விட்டது டைரி..!” என்றார்.
தயாரிப்பாளர் கதிரேசன் பேசுகையில், “கதை மீது கொண்ட நம்பிக்கையால் பட்ஜெட் குறித்து கவலைப் படவில்லை. எங்கள் பேனரில் வரும் படங்கள் தரமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வருகிறார்கள். அதைக் காப்பாற்றுவோம்..!” என்றார்.
‘பைவ் ஸ்டார் ‘ தரம் என்றால் இதுதானோ..?