March 28, 2024
  • March 28, 2024
Breaking News
June 10, 2019

சிரிக்க வைத்த கிரேஸி மோகன் அழவைத்து சென்றார்

By 0 596 Views

தன் இணையற்ற நகைச்சுவை எழுத்துகள் மூலம் கடந்த முப்பது ஆண்டுகளாக சிரிக்க வைத்த கிரேஸி மோகன் தன் 66 வயதில் மாரடைப்பால் இன்று பிற்பகல் காலமானார். நெஞ்சு வலி காரணமாக இன்று காலை 11.30 மணிக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக 2 மணிக்கு மருத்துமனை நிர்வாகம் அறிவித்தது.

பொறியியல் பட்டதாரியான கிரேஸி மோகன், எஸ்.வி.சேகருக்காக ‘கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ நாடகம் எழுதி மேடைக்கு அறிமுகமானார். அதன் மூலம் சாதாரண மோகனாக இருந்தவர் ‘கிரேஸி மோகன்’ ஆனார். இந்த நாடகம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து பல நாடகங்கள் மூலம் தன் தனித்தன்மையான நகைச்சுவை மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைச் சிரிக்க வைத்தார்.

அதன்பின் ‘கிரேஸி கிரியேஷன்ஸ்’ என்ற சொந்த நாடகக் கம்பெனியைத் தொடங்கி தன் தம்பி மாது பாலாஜியை நாயகனாக்கித் தானும் நடித்து பல வெற்றிகரமான நாடகங்களை மேடையேற்றினார். அதில் ‘சாக்லேட் கிருஷ்ணா’ என்ற நாடகம் 500 தடவைக்கு மேல் மேடையேறியது.

கே.பாலசந்தரின் ‘பொய்க்கால் குதிரைகள்’ மூலம் சினிமாவுக்கு எழுத்தாளராக அறிமுகமான கிரேஸி மோகன், கமலின் ஆஸ்தான எழுத்தாளராகவே அவருடன் பல நகைச்சுவைப் படங்களை எழுதிக் குவித்தார். அவற்றுள் ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘காதலா காதலா’, ‘பம்மல் கே.சம்பந்தம்’, ‘பஞ்சதந்திரம்’, ‘தெனாலி’, ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’, ‘சதிலீலாவதி’, ‘அவ்வை சண்முகி’ ‘உள்ளிட்ட பல படங்கள் குறிப்பிடத் தகுந்தவை. 

ரஜினியின் ‘அருணாசலம்’ படத்துக்கும் இவர்தான் வசனம் எழுதினார் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.

இஅவரது நாடகக் குழுவில் இருந்து பெரிய திரைக்கு நடிகராக வந்து பல படங்களில் நடித்த ‘சீனு’ கடந்த வரிடம் இயற்கை எய்தியது குறிப்பிடத் தகுந்தது. 

தன் எழுத்துகள் மூலம் நம்மை 30 ஆண்டுகளாகச் சிரிக்கச்செய்தவர் இன்று அழவைத்து விட்டுச் சென்றார்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய வணங்குவோம். அவர் படங்களின் மூலம் இன்றும் சிரித்து அவருக்கான அஞ்சலியை சந்தோஷமாகவே செலுத்துவோம்.

கீழே அவர் எழுத்தில் என்றும் மறக்காத ஒரு காட்சி…

https://youtu.be/xUnBkw5fSYY