August 17, 2025
  • August 17, 2025
Breaking News
August 14, 2025

கூலி திரைப்பட விமர்சனம்

By 0 48 Views

ரஜினி படம் என்கிற பிராண்ட் ஒன்று போதும்… அதற்குள் என்ன கதையையும் வைக்கலாம் – என்ன தலைப்பு வைத்தும் கதை சொல்லலாம். 

அப்படி லாஜிக் எல்லாம் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு கொலையுண்ட தன் நண்பனைக் கொன்றவர்களைப் பழிவாங்க புறப்படுகிறார் ரஜினி.

உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான அவர் தன்னுடைய சக தொழிலாளர்களுக்காக எப்படி தன் வாழ்வை அர்ப்பணித்தார் என்பதும் ஃப்ளாஷ் பேக்காக சொல்லப்படுகிறது.

ரஜினியின் நண்பனாக சத்யராஜ். விஞ்ஞானியான அவர் தனது கண்டுபிடிப்பு ஒன்றுக்கான உரிமம் கோர அது கிடைக்காத நிலையில், அதைக் கைப்பற்றி சத்யராஜையும் தன் கைக்குள் கொண்டு வருகிறார் சர்வதேசத்திலும் புழங்கும் கடத்தல் மன்னனான நாகார்ஜுனா. 

துறைமுகத்தை தன் கோட்டையாக வைத்துக் கொண்டு கடத்தல் தொழிலை ஜாம் ஜாம் என்று நடத்தும் நாகார்ஜுனா துறைமுக அதிகாரியாக தன் மகனையே நியமித்திருக்கிறார். எனவே அங்கு அவர்கள் வைத்ததுதான் சட்டம்.

நாகார்ஜுனாவின் கையாளாக சௌபின் ஷாஹிர். இரக்கம் என்றால் என்னவென்றே தெரியாத கொடூரனாக வருகிறார். இவர்களிடம் சிக்கிக்கொண்ட சத்யராஜ் ஒரு கட்டத்தில் இறந்து போக, அதன் பின்னணியை கண்டுபிடிக்க இந்த முகாமுக்குள் நுழைகிறார் ரஜினி. 

ரஜினிக்கு என்ன வயதானால்தான் என்ன? அவரை இன்னமும் ரசிக்க முடிவது இயற்கையின் பேரதிசயம். நடையிலோ நடவடிக்கைகளிலோ எந்தத் தள்ளாட்டமும் இல்லாமல் அதே நெருப்பை தக்க வைத்து கொண்டிருக்கும் அவருக்காகவே இந்தப் படத்தில் அனைத்து இந்திய நட்சத்திரங்களையும் நடிக்க வைக்க முடிந்திருக்கிறது.

அதையே படத்தின் யுஎஸ்பி யாகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் இந்தப் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

ரஜினியின் ஈர்ப்பு விசைக்குள் கட்டுண்டு கிடக்கும் நாம் இந்தப் படத்தில் வரிசைக் கட்டும் இந்திய நட்சத்திரங்கள் ஒவ்வொருவராக களம் இறங்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் மட்டுமே போதுமானதாக இருக்கிறது. 

இது ரஜினி படம் என்றாலும் ஒற்றை ஆளாக முழுப் படத்தையும் தன் 5 அடி உருவத்துக்குள் கட்டி இழுத்துக் கொண்டிருப்பவர் மலையாள நடிகர் சௌபின் ஷாஹிர்.

துள்ளலும், பார்வையும், நடையும், ஆட்டமும் என பிரேமுக்கு பிரேம் பட்டையை கிளப்பும் அவரே படத்தின் பிரதானம். என்ன எனர்ஜி மனிதருக்கு..?

அவரது பாஸ் ஆகவும் படத்தின் மெயின் வில்லனாகவும் வரும் நாகார்ஜுனாவுக்கு இப்படி நடிக்க அவசியம் என்ன என்பது தெரியவில்லை. ஒரே அவசியம், இது ரஜினி படமாக ஆனதால் இருக்கலாம். இருந்தாலும் தன் நடிப்பில் குறை வைக்காமல் அந்தப் பாத்திரமாகவே மாறி இருக்கிறார் கிங்பின் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் கிங்.

நீண்ட காலம் கழித்து ரஜினி படத்தில் சத்யராஜ். இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் இரண்டுதான். ஆனாலும் அவர்களுக்குள் ஒரு இணைபிரியாத நட்பு இருப்பதை போல் ஒரு மாயையை ஏற்படுத்தி இருக்கிறார் லோகேஷ். 

சத்யராஜின் மகள்களாக வருகிறார்கள் ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் மோனிஷா பிளஸ்சி . 

மூத்த மகளாக வரும் ஸ்ருதிஹாசனுக்கு படம் நெடுக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிளாமரை சுத்தமாக மறந்து விட்டு நடிப்பில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தி தன் அப்பாவின் பெயரைக் காப்பாற்றி இருக்கிறார்.

உபேந்திரா இன்னும் வரவில்லையே என்று இடைவேளைக்குப் பிறகு(ம்) காக்க வைத்து விட்டார் இயக்குனர். ஆனால் வந்தாலும் வந்தார் இரண்டு மூன்று காட்சிகளில் ஆக்ஷனில் பின்னி எடுக்கிறார். 

ஆனால் படம் முடிய சிறிது நேரமே இருக்க எங்கே ஆமீர்கானைக் காணோம் என்று நாம் தேட ஆரம்பித்து விடும் நேரத்தில் சரியாக ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார் அவர். 

உலக கடத்தல் மன்னர்களின் ‘தல’ யாக இருக்கும் அவர் நம் உள்ளூர் பீடியை புகைத்துப் பார்த்து ஆச்சரியப்பட்டு “இதன் பெயர் என்ன..? எனக்கு ஒரு பாக்கெட் கிடைக்குமா..?” என்று உபேந்திராவிடம் கேட்டு வாங்கிச் செல்வது நயமான நையாண்டி.

உயிரைக் கொடுத்து நடித்திருக்கும் இன்னொரு நடிகர் நம்ம சார்லி. 

நாகார்ஜுனாவின் மகனாக வரும் கண்ணா ரவியின் நடிப்பும் கச்சிதம்.

அவரது காதலியாக வரும் ரட்சிதா கடைசியில் ஆடும் ஆட்டம் அதகளம்.

படத்தை ஆரம்பித்து வைக்கும் காளி வெங்கட் கொஞ்ச நேரத்திலேயே காலியாவது பரிதாபம்.

ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட பூஜா ஹெக்டே படத்துக்குள் வந்தாலும் அவரைப் பின்னுக்குத் தள்ளி விடுகிறது சௌபின் ஷாஹிரின் ஆட்டம்

அந்தப் பாடலில் மட்டுமே மிரட்டலாகத் தெரியும் அனிருத்தின் பின்னணி இசை படத்தின் பரபரப்புக்கு மிகவும் உதவி இருக்கிறது. 

பிரேம் கொள்ளாத அளவுக்கு நட்சத்திரங்கள் இருந்தாலும் அனைவரையும் அதற்குள் கொண்டு வந்து ரசிக்க வைக்கும் வித்தையில் ஒளிப்பதிவாளர் கிரீஷ் கங்காதரன் மின்னுகிறார். 

லாஜிக் மீறல் என்று எடுத்துக் கொண்டால் ரஜினியின் அறிமுகக் காட்சியில் இருந்து படம் முடிவு வரை இருப்பவை ஒரு டாக்டரேட் பண்ணும் அளவுக்கு தேறும். ஆனால் நாம் முன்னே சொன்னது மாதிரி இது ரஜினி படம் என்பதால் அத்தனையையும் மன்னித்து மறந்துவிடலாம். 

ஒரே குறை… வன்முறையைக் குறைத்து ஏ சான்றிதழைத் தவிர்த்து இருந்தால், குடும்பம் குடும்பமாக மக்கள் குவிந்து தியேட்டர்கள் திருவிழா கொண்டாடி இருக்க முடியும்.

கூலி – பவர் ஹவுஸ்..!

– வேணுஜி