எல்லா மக்களின் அடிப்படை உரிமையான கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு எப்படி எட்டாக்கனியாகிப் போகிறது என்பதை விளக்கும் படம்.
குறிப்பாக எல்லா வங்கிகளிலும் கல்வி கடன் வழங்கும் திட்டம் இருக்க அவை எப்படி முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜெய் அமர்சிங்.
சென்னையில் எளியவர்கள் அத்தனை சீக்கிரம் சேர முடியாத கல்லூரியில் மெரிட்டில் சேர்கிறார் நாயகன் லிங்கேஷ். வங்கிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் ப்ராஜெக்ட் ஒன்றை கண்டு பிடித்த லிங்கேஷ் அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயற்சிக்கிறார்.
அதே சமயம் சென்னையின் முக்கிய வங்கிகளில் கொள்ளை நடக்கிறது. அதற்கான விசாரணைகள் வினோத் சார்லஸ் தலைமையில் நடக்கின்றன. ஒரு கொள்ளையில், வங்கிக் கொள்ளையனை லிங்கேஷ் அடையாளம் காட்டுகிறார்.
இந்த இரண்டு விதான களங்களையும் ஒரு இடத்தில் முடிச்சுப் போட்டு அதிரடி திருப்பங்களோடு சொல்கிறது படத்தின் திரைக்கதை
நாயகனாக லிங்கேஷ் இந்தப்படத்தில் பள்ளி மாணவன், கல்லூரி மாணவன் என்று இரண்டு விதமான பருவங்களில் அதற்கேற்ற உடல் மொழியோடு நியாயம் சேர்த்து நடித்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்சுக்கு முந்திய காட்சியில் அவரது உணர்ச்சிகரமான நடிப்பு அற்புதம்.
நாயகி மோனிகாவின் பாத்திரம் சிறியது என்றாலும் கொடுத்த வேலையை குறைவின்றி செய்திருக்கிறார். அழகாகவும் தோன்றுகிறார்.
லிங்கேஷின் உற்ற நண்பனாக வரும் ஆனந்த் நாக் அற்புதத் தேர்வு. கிராம நண்பர்களாக வரும் நால்வரும் கூட பொருத்தமான தேர்வு.
காமெடிக்கென தனி ட்ராக் இல்லாமல் அதை திரைக்கதையின் உள்ளே இணைத்திருக்கும் இயக்குனரின் சாமர்த்தியம் பாராட்டத்தக்கது.
வங்கி வங்கியாக கல்வி கடனுக்காக ஏறி இறங்கி நொந்து போகும் இளைஞனின் பாத்திரத்தில் வரும் நடிகர் நம் அனுதாபங்களை சம்பாதித்துக் கொள்கிறார் அவரது உணர்வு பூர்வமான நடிப்பு பலே.
இளமைத் துள்ளலுடன் ஆரம்பிக்கும் முன்பாதியில் வண்ணங்களை வாரி இறைத்த ஒளிப்பதிவாளர் கார்த்திக் சுப்ரமணியம் விஷுவலாக படத்திற்கு பலம் கொடுத்துள்ளார்.
இசை அமைப்பாளர் ஆப்ரோவும் தன் பங்கைக் கச்சிதமாக நிறைவேற்றி இருப்பதுடன் பாடல்களிலும் வித்தியாசமாக இசைத்துள்ளார். ப்ளாஷ்பேக் காட்சிகளில் பின்னணி இசை உணர்வுபூர்வமாக அமைந்துள்ளது
சிறிய பட்ஜெட்டில் இவ்வளவு பிரம்மாண்டமான கதையம்சம் கொண்ட படத்தை இயக்குவதற்கு நிறைய திறமை வேண்டும்.
கல்லூரி கதை என்றாலே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மட்டுமே என்று அமைந்துவிட்ட சினிமாவில் கல்வியின் முக்கியத்துவத்தை முன்வைத்து வந்துள்ள இந்த படம் கவனம் ஈர்க்கிறது.
MP எண்டர்டெயின்மெண்ட் பிரவீன் மற்றும் சரத். இவர்களுடன் இந்தப் படத்தை தயாரித்திருக்கும் ஜனா துரைராஜ் மனோகர் பாராட்டுக்குரியவர்கள்.
காலேஜ் ரோடு – கவனம் ஈர்த்த முயற்சி..!