May 2, 2024
  • May 2, 2024
Breaking News
January 2, 2023

கடைசி காதல் கதை திரைப்பட விமர்சனம்

By 0 245 Views

80, 90 கிட்ஸ் காலத்தில் காதலில் தோற்றவர்கள் தாடி வளர்த்துக் கொண்டு பாடித் திரிவார்கள் – அல்லது மரணிப்பார்கள். இந்த 2கே கிட்ஸ் காலத்தில் காதல் எப்படி இருக்கிறது என்பதற்கான உதாரணம் இந்தப் படம்.

தன் காதலி தனக்கு விதிக்கும் கட்டுப்பாடுகள் பொறுக்க முடியாத நிலையில் காதல் தோல்வியுற நிறைய புத்தகங்கள் படித்து, காதலில் தோல்வி ஏற்படாமல் இருக்கவும் மனிதர்களிடத்தில் பேதங்கள் இல்லாமல் வாழவும் ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறார் நாயகன் ஆகாஷ் பிரேம்குமார்.

அது ஆதி மனிதர்கள் வாழ்ந்தது போல் ஆடையின்றி வாழ்வது. ஆடைதான் மனிதர்களிடத்தில் பேதங்களை உருவாக்குகிறது என்பது அவர் சித்தாந்தம். எனவே எல்லோரும் ஆடைகளைத் துறந்து ஆதி மனிதர்கள் வாழ்ந்த குடியம் குகைகளில் சென்று வாழ வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார். இது உலகமெங்கும் வைரலாக என்ன நடந்தது என்பது மீதிக்கதை.

படத்தில் ஒரு சில நடிகர்களைத் தவிர முக்கிய பாத்திரங்கள் ஏற்றிருக்கும் அத்தனை பேரும் புதுமுக நடிகர்கள் என்பது ஆச்சரியமான விஷயம். அவர்களை வைத்து ஒரு சிறிய பட்ஜெட் படத்தை சுவாரசியமாக நகர்த்திக் கொண்டு போக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர் ஆர்.கே.வி(த்யாதரன்)

ஹீரோ ஆகாஷ் பிரேம்குமார் அறிமுக நடிகர் என்பதே தெரியாத அளவில் நடித்திருக்கிறார். இயல்பாக ஒரு ஆணுக்கு பெண்ணிடம் ஏற்படும் ஈர்ப்பு அவருக்கு நாயகியிடம் ஏற்பட அதை வெளிப்படுத்த முடியாமல் தவிப்பது பரிதாபம்.

அறிமுக நடிகை ஈனாக்‌ஷி கங்குலியும் அழகாக இருக்கிறார். அவர் நாயகனிடம் வைத்திருக்கும் ‘ பிளட்டானிக் லவ் ‘ தமிழ் சினிமாவுக்கு புது ஐட்டம். அவர் தங்கையாக நடித்திருக்கும் டீன் ஏஜ் பெண்ணின் ‘ஸ்பீடு ‘ மலைக்க வைக்கிறது.

இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’ புகழ், விஜே ஆஷிக், நோபல் நண்பர்களாக நடிக்க, மைம் கோபி இன்ஸ்பெக்டராக வருகிறார். ஹீரோவை கார்னர் செய்ய அவர் ஒவ்வொரு முயற்சி எடுப்பதும் அதை ஹீரோ தவிடு பொடி ஆக்குவதும் ரசிக்கும்படி இருக்கின்றது.

ஹீரோவின் அண்ணனாக வரும் சாம்ஸ் அடிக்கும் கொட்டங்களுக்கு அளவே இல்லை. அந்தத் ‘தம்பி’ காமெடி ரொம்ப ஓவர். பிரியங்கா வெங்கடேஷ், அனு, பிரியதர்ஷினி, நிஷார், ஸ்வப்னா, கிருத்திகா என பல புதிய நட்சத்திரங்கள் இதில் அறிமுகமாகி இருக்கிறார்கள்.

படத்தை சலிப்பின்றி நகர்த்திச் செல்வது ஆர்.கே.வியின் திரைக்கதை, வசனங்கள் தான். அதில் இரட்டை அர்த்தம் அதிக அளவில் கலந்து இருந்தாலும் அதைத்தான் படத்தின் யு.எஸ்.பி யாக இயக்குனர் பயன்படுத்தியிருக்கிறார்.

சேத்தன் கிருஷ்ணாவின் இசையும், சிவசுந்தர் ஒளிப்பதிவும் பட்ஜெட்டுக்கு இழுக்கு செய்யாமல் பயணித்திருக்கின்றன. 

நாயகன் எடுக்கும் முடிவு இடைவேளையிலேயே வந்துவிட அதற்குப் பின் அதை செய்தாரா இல்லையா என்கிற ஒற்றைக் கேள்வி மட்டுமே இரண்டாம் பாதியை முழுவதையும் நகர்த்துகிறது. அதுவும் அனைத்து விஷயங்களும் ஒரு மொட்டை மாடியிலேயே நடந்து கொண்டிருப்பது ஒரு வித அலுப்பை தருகிறது.

மற்றபடி இளைஞர்கள் ரசிக்கும் அளவில் ஐட்டங்களை புகுத்தி இருப்பதால் 2கே கிட்ஸ்க்கு பிடிக்கும் படமாக இது இருக்கலாம்.

கடைசி காதல் கதை – டபுள் (மீனிங்) ட்ரீட்..!