September 14, 2025
  • September 14, 2025
Breaking News
December 24, 2020

குப்பை கொட்ட கட்டணம் திட்டம் நிறுத்தி வைப்பு

By 0 800 Views

சென்னையில் குப்பை கொட்டுவதற்கான கட்டணம் வசூலிக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப் படுவதாக மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 படி பெருநகர சென்னை மாநகராட்சியால் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ம் ஆண்டு இயற்றப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் தமிழக அரசின் அனுமதி பெறப்பட்டு சென்னை மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் வீடுகள், வணிக வளாகங்கள், விடுதிகள், உணவகங்கள், மருத்துவமனைகள், பொது நிகழ்ச்சிகள் என்று ஒவ்வோர் இடத்துக்கும் தகுந்தாற்போல் 10 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது.

தற்போது, சென்னை மாநகராட்சியிலுள்ள 15 மண்டலங்களில் ஏழு மண்டலங்களில் தனியார் நிறுவனங்களின் மூலம் குப்பை சேகரிக்கப்பட்டுவருகிறது.

சென்னையில் திடக்கழிவு மேலாண்மை துணை விதி 2019-க்கு, தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி ஒப்புதல் தெரிவித்தது. இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்தது.

இந்த நிலையில், சென்னையில் குப்பை கொட்டுவதற்கான கட்டணம் வசூலிக்கும் திட்டம் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக குப்பை கொட்டுவதற்கான கட்டணம் வசூலிக்கும் திட்டம் நிறுத்தி வைக்க பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்ததால் இந்த திட்டம் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.