படம் என்னவோ பைக் ரேசிங் பற்றி சொன்னாலும் அதன் அடி நாதம், ‘தந்தையைப் போல் மகனுக்கு வேறு ஹீரோ இல்லை..!’ என்பதுதான்.
இந்த உண்மையை ஒரு மூன்று தலைமுறைகளைத் தொடும் கதையாக அழகுறச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் அபிலாஷ் ரெட்டி.
அப்பாவின் பெருமையை தன் மகனின் மூலம் அறியும் நாயகனாகிறார் ஷர்வானந்த்.
ஒரு காலத்தில் பைக் ரேசராக இருந்த அவரது தந்தை டாக்டர் ராஜசேகர், உங்களைப் போலவே நானும் சிறந்த ரேசர் ஆக வேண்டும் என்கிற ஷர்வானந்தின் விருப்பப்படி அவருக்கு பயிற்சியாளர் ஆகிறார். இரவு, பகல், தூக்கம், உணவு எல்லாமும் ரேஸ் மயமாக வாழும் கலையை டாக்டர் ராஜசேகர் ஷர்வானந்திடம் ஏற்றி வைக்க, வெகு சீக்கிரத்திலேயே பைக் ரேசிங்கில் தன்னை வெல்ல ஆளில்லை என்கிற அளவுக்கு உயர்கிறார் அவர்.
அவருக்கு ஈடான பைக் ரேசிங்கில் வல்லவராக இருந்தாலும் ஷர்வானந்தை வெல்ல இயலாது இருக்கிறார் நிரூப்.
அதனால் பல வகையிலும் ஷர்வானந்த்துக்கு தொல்லை கொடுக்கும் அவர் எதிர்ப்பை தாண்டி தன் மகனை உலக சாம்பியன் ஆகும் போட்டிக்கு தகுதி பெற வைக்கிறார் டாக்டர் ராஜசேகர்.
பெரும்பாடுபட்டு அதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திடும் சமயம் காதலி மாளவிகா நாயருடனான காதல் ஷர்வானந்த்தைத் தடுத்து நிறுத்த அவமானத்துக்கு உள்ளாகிறார் அப்பா.
அதற்குப்பின் தந்தையின் அவமானத்தை மகனால் துடைக்க முடிந்ததா காதலி குழந்தை குடும்பம் என்று ஆகிவிட்ட ஷர்வானந்த் அதைத் தாண்டி வெளியில் வர முடிந்ததா என்பதுதான் மீதிக் கதை.
இந்தப் படத்தின் ஜீவனைப் புரிந்து கொண்ட ஷர்வானந்த் அதற்காக தன் உடலை வருத்திக் கொண்டு 20 கிலோவுக்கு மேல் இளைத்து துரும்பாகி இருப்பது அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. லட்சியம் ஒருபுறம் – காதல் ஒரு புறம் ஆக அவரைக் கவ்வி இழுக்க, இருதலைக்கொள்ளி எறும்பாகும் அவர் படும் பாட்டை நாமும் உணர முடிகிறது.
அவரை விட சில மில்லி மீட்டர்கள் மட்டுமே திறமை குறைவான நிரூப்பை வில்லன் போல ஆக்குகிறார்கள் ஆனால் உண்மையில் படத்தின் இரண்டாவது கதாநாயகன் அவர்தான். இரண்டாவது பாதியில் அதற்கான முழு தகுதியும் பெறுகிறார் அவர்.
ஷர்வானந்த்தைக் காந்த கண்களால் மயக்கி காதல் வலையில் வீழ்த்தி அவரை தன் வயப்படுத்தும் நாயகி மாளவிகா நாயர் போல ஒரு பெண் எந்த ஆணின் வாழ்க்கையில் குறுக்கே வந்தாலும் அவன் காதலில் விழவே செய்வான்.
வாழ்ந்து கெட்டாலும் எடுத்த காரியத்தில் எந்த குறையும் வைக்காத பயிற்சியாளராக வரும் டாக்டர் ராஜசேகருக்கு இந்தப் படம் மீண்டும் அவரது பெருமையைத் தூக்கி நிறுத்த உதவும்.
மகன் எவ்வளவு உழைத்தாலும் ‘அது போதாது போதாது..’ என்று அவனை உச்சத்துக்கு உயர்த்தி உலக சாதனை செய்ய வைக்கும் இப்படிப்பட்ட தந்தை கிடைத்தால் எந்த மகனும் சாதிப்பது சாத்தியம்தான்.
நாராயண் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையாக வரும் இஷான் நாராயணன் பாத்திரம் ஏற்றிருக்கும் சிறுவன் மாஸ்டர் சௌரியா நோக்கத்தை விட்டு விலகும் கதையை வெற்றியை நோக்கி நகர்த்த உதவுகிறார்.
தனக்காக சண்டை போட்டு வந்து நிற்கும் மாஸ்டர் சௌரியாவைப் பார்த்து சிறுவயதில் தன் தந்தைக்காக தான் போட்ட சண்டை நினைவுக்கு வர அவர் மீது விழுந்து விட்ட கரையைத் துடைக்க ஷர்வானந்த் உறுதி எடுக்கும் இடம் கதையின் உயிர் நாடி.
ஜே யுவராஜன் ஒளிப்பதிவுதான் இந்த படத்தின் இதயத்துடிப்பாகிறது. பைக் ரேசிங்கை இத்தனை உணர்ச்சிபூர்வமாகவும் உண்மையாகவும் எடுப்பதற்கு எத்தனை உழைத்திருப்பார் யுவராஜ் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது இந்த வருடத்தின் ஒளிப்பதிவுக்கான தேசிய விருதில் இந்த படம் நிச்சயம் போட்டிக்கு வரும். வென்றாலும் வியப்பில்லை.
ஜிப்ரான் வைபோதாவின் இசையும் படத்தின் உணர்ச்சியை இரு மடங்கு உயர்த்துகிறது.
தொழில்நுட்ப ரீதியில் இந்த வருடத்திற்கான படங்களில் முதன்மை பெறுகிறது இந்த பைக்கர்.
எழுதி இயக்கியிருக்கும் அபிலாஷ் ரெட்டி இந்தப் படத்தை எவ்வளவு காதலித்திருப்பார் என்பது ஃப்ரேம் பை ஃப்ரேம் புரிகிறது.
இலக்கணப்படி எந்தத் தவறும் எங்கேயும் கண்டுபிடிக்காத அளவில் படத்தை இயக்கி இருக்கும் அவருக்கும் இந்த வருடத்தின் சிறந்த இயக்குனர் விருதும் அதைப் புரிந்து கொண்டு நடித்திருக்கும் ஷர்வானந்த் சிறந்த நடிகராகவும் விருது பெற வாய்ப்பு இருக்கிறது.
குறை என்று சொல்ல வேண்டுமென்றால் ஒரு ஸ்போர்ட்ஸ் மேன் எப்போதும் சிகரெட்டும் கையுமாகவா அலைந்து கொண்டிருப்பார்..? என்பதுதான்.
சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் விளையாட்டுக்கு ஸ்பான்சர் செய்யும் அவலம் போல விளையாட்டை மேன்மைப்படுத்தும் இந்தப் படம் புகையிலைக்கு ஸ்பான்சர் செய்கிறதோ என்று ஐயமுற வைக்கிறது.
புகையைத் துறந்து இருந்தால் புனிதமடைந்திருக்கும் இந்தப் படம்.
பைக்கர் – முந்துகிறது..!
– வேணுஜி