காதல் கதைகள் பல வகை. அதை ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லராகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜெயதீர்த்தா.
பட ஆரம்பத்திலேயே நாயகி சோனல் மோண்டோரியோவிடம் சுய அறிமுகம் செய்து கொள்ளும் நாயகன் ஜயீத் கான், தான் எதிர்காலத்தில் இருந்து டைம் மெஷின் மூலம் நிகழ் காலத்துக்கு வந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் சோனல்தான் தன் மனைவியாக இருப்பதாகவும் சொல்லும் கதை இது உண்மைதானா என்று நினைக்க வைக்கிறது.
அவர்களுக்குள் ஏற்படும் உரசலில் சோனல் , பனாரசுக்கு பறந்து விட, அவளிடம் மன்னிப்புக் கேட்க ஜயீத்தும் அங்கே வர, நீறு பூத்த காதல் மீண்டும் நெருப்பாகிறது.
இரண்டாம் பாதியில் வரும் டைம் லூப் காட்சிகளும் உண்மைதானா என்று வியக்க வைக்கின்றன. ஆனாலும் அதையும் விஞ்சிய ஒரு அறிவியல் புனைவு உள்ளே இருக்கிறது என்பது ஆச்சரியம். எல்லாவற்றையும் ஒரு காதல் கயிற்றால் கட்டிக் கதை பின்னி இருக்கிறார் இயக்குனர்.
ஜயீத் கான் அறிமுகம் என்றே சொல்ல முடியாமல் அத்தனை அனுபவ நடிகராக தெரிகிறார். அவரது ரொமான்டிக் நடிப்பும், இளமைத் துடிப்பும் அசத்தல். சண்டைக் காட்சிகளிலும் சத்தாய்க்கிறார்.
அசத்தும் அழகி இல்லையென்றாலும் அடுத்த வீட்டுப் பெண் போன்ற வனப்பில் சோனல் கவர்கிறார். ஜயீத் சொல்லும் கதைகளை ஆச்சரியத்துடன் கேட்கையில் அவர் முகத்தில் தெரியும் சிகப்பு… சிறப்பு..!
அச்யுத் குமார் இல்லாத கன்னடத் தயாரிப்புகளை இல்லை போலும். இதில் சோன்லின் சித்தப்பாவாக வரும் அவரது கேரக்டரை கணிக்க முடியவில்லை. அவரது மனைவியாகவும், நாயகியின் சித்தியாகவும் நடித்தவரும் கவனிக்க வைக்கிறார்.
ஜயீத்தின் பனாரஸ் நண்பராக வரும் சுஜய் சாஸ்திரி கவனிக்க வைக்கிறார். ஆரம்பத்தில் காமெடியனாக இருந்தாலும் படம் முடியும்போது கலங்க வைக்கிறார்.
கங்கை பாயும் ஆன்மிக பூமியான பனாரஸ் நகரை இதுவரை யாரும் காட்டிடாத கோணத்தில் காட்டி சிலிர்க்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அத்வைதா குருமூர்த்தி.
காசியை எல்லாக் கோணங்களிலும் காட்டி அங்கு செல்லாதவர்களும் சென்று வந்த அனுபவத்தை ஏற்படுத்தி இருக்கிறார் அவர்.
அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசையும் அந்த ஒளிப்பதிவும் கைகோத்து பிரமிக்க வைக்கிறது. ‘ மாயகங்கா ‘, ‘இலக்கண கவிதை எழுதிய அழகே…’ பாடல்கள் ஈர்க்கின்றன.
இரண்டாம் பாதி கதையை நம்ம மாநாடு வெங்கட் பிரபு எழுதி இருப்பாரோ என்று தோன்றினாலும், அதைவிட இன்னொரு அறிவியல் கற்பனையை கலந்து கொடுத்துக் கதையை முடிக்கிறார் இயக்குனர்.
பனாரஸ் – காதல் பட்டு..!