May 3, 2024
  • May 3, 2024
Breaking News
November 5, 2022

காபி வித் காதல் திரைப்பட விமர்சனம்

By 0 652 Views

இயக்குனர் சுந்தர்.சி எதற்காக இந்த தலைப்பு வைத்தாரோ தெரியவில்லை ஆனால் காபி சாப்பிடுவதைப் போல காதலை இந்த படத்தில் கையாண்டு இருக்கிறார்.

சகோதரர்களான ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய் ஆகிய மூவரும் சிறுவயதில் அடித்துக் கொள்வது போலவே வாலிப வயதிலும் காதலுக்காக அடித்துக் கொள்கிறார்கள். இவர்களின் சகோதரி திவ்யதர்ஷினி தலையிட்டு அவர்களுடைய பிரச்சனையை தீர்ப்பவராக இருக்கிறார்.

இவர்களில் ஸ்ரீகாந்துக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருந்தாலும் நவீன சிந்தனை உடையவரான அவருக்கு மனைவி மேல் ஈர்ப்பு இல்லாமல் வெளியே மனம் மேய்ந்தபடி இருக்கிறது.

இவர்களின் அப்பா பிரதாப் போத்தனுக்கு அனைவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

ஜீவா, ஐஸ்வர்யா தத்தாவுடன் லிவிங் டுகெதரில் வாழ்கிறார். ஆனால் ஐஸ்வர்யா தன் பள்ளித் தோழன் இன்றைய ராக் ஸ்டார் ஒருவனுடன் வாழத் தொடங்குகிறார். எனவே ஜீவா அமெரிக்கா ரிட்டர்ன் மாளவிகா சர்மாவைக் காதலிக்கிறார்.

இதற்கிடையே ஶ்ரீகாந்த் கள்ள உறவு கொண்டிருக்கும் ரைசா வில்சனை ஜீவாவுக்கு மணமுடித்து வைக்க நினைக்கிறார் பிரதாப். அதனால் ஶ்ரீகாந்த் அந்த திருமணத்தை தடுக்க நினைக்கிறார்.

ஜெய்யை அவரது தோழி அம்ரிதா ஐயர் காதலிக்க, ஆனால் ஜெய் அதில் நாட்டமில்லாமல் இருக்கிறார். அதனால் இந்தியாவில் செட்டிலாக வந்திருக்கும் (மேற்படி ஜீவாவின் காதலியான) மாளவிகா சர்மாவை ஜெய்க்கு மணமுடிப்பது என்று முடிவாக, அம்ரிதா ஐயருக்கு இன்னொருவரை நிச்சயம் செய்கிறார்கள்.

ஏதாவது புரிகிறதா..? ஆனால் இத்தனை குழப்பங்களையும் எப்படியாவது நம்மிடம் புரிய வைத்துவிட சிரிக்கச் சிரிக்க கதை சொல்லி இருக்கிறார் சுந்தர்.சி.

ஐஸ்வர்யா தத்தாவுடன் நெருக்கம், மற்றும் மாளவிகா சர்மாவுடன் இணக்கம் என்று புகுந்து விளையாடி இருந்தாலும் ஜீவாவுக்கு ஜோடி அமைவதில்தான் சிக்கல் ஏற்படுகிறது.

வழக்கமான பொறுப்பில்லாத இளைஞர் வேடம் ஜெய்க்கு. அவரது வழக்கப்படியே காதலுக்காக நிறைய அவமானப்படுகிறார்.

இசைக்கலைஞராக ஸ்ரீகாந்த் பொறுப்பில்லாமல் இருந்தாலும் அவரது மகளை வைத்து கிளைமாக்ஸுக்கு லீட் கொடுத்திருப்பது நல்ல விஷயம்.

இத்தனை காதலர்கள் இடம் மாறிக் கொண்டிருந்தாலும் நாம் பார்க்கும் முதல் காட்சியிலிருந்து திவ்யதர்ஷினி நிறைமாத கர்ப்பிணியாகவே இருக்கிறார். சகோதரர்களுக்கு இடையேயான குழப்பங்களைத் தீர்க்க அவர் உதவினாலும் அவர் வாழ்க்கைக் குழப்பத்தை தீர்க்கவே முடியவில்லை.

டிடியின் கணவர் யார் என்பதைக் காட்டாமலேயே கடைசி நேர சுவாரஸ்யமாக வைத்திருக்கிறார் சுந்தர்.சி.

மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர்,  ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா சாமிநாதன் என பளபளப்புடன் நகர்கிறது படம்.

படம் முழுதும் நகைச்சுவை நிரம்பி இருந்தாலும் யோகிபாபு, கிங்ஸ்லியும் தங்கள் பங்குக்கு சிரிக்க வைக்கிறார்கள்.

ஈ.கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவில் படம் வானவில்லாக ஜொலிக்கிறது. யுவனின் இசையில் பாடல்களில் இளமை பொங்கினாலும் இறுதியில் வரும் இசைஞானியின் ரீமைக்கான ரம்பம்பம் பாடலே நம் மனத்தில் நெடுநேரம் ரீங்காரம் இட்டுக் கொண்டிருக்கிறது.

ஏகப்பட்ட பாத்திரங்களை வைத்துக்கொண்டு கதை சொல்வது என்பது ஆகப்பெரிய சமாச்சாரம். அந்தக் காதல் குட்டையை நன்றாகவே குழப்பி விட்டு கடைசியில் ஒரு கமர்சியல் மீன் பிடித்திருக்கிறார் சுந்தர்.சி.

காபி வித் காதல் – காலத்துக்கு ஏற்ற காப்பச்சினோ..!