Asterix & Obelix கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட காமிக்ஸ் புத்தகத் தொடரின் வரிசையில் இதுவரை நான்கு படங்கள் எடுக்கப்பட்டு இருக்க, ஐந்தாவது படமாக வந்திருக்கும் Asterix & Obelix: The Middle Kingdom எனும் இந்தப் படம் வித்தியாசமானது.
அதன் காரணம், காமிக்ஸ் புத்தங்களின் அடிப்படையில் எடுக்கப்படாமல், தனிக்கதையைக் கொண்ட நேரடி படமாக முதல்முறையாக இந்தப்படம் வந்திருப்பது சிறப்பு.
இதன் கதைச் சுருக்கம் இதுதான்… Asterix மற்றும் Obelix இருவரும் சீனப் பேரரசரின் ஒரே மகளான இளவரசி Fu Yi (Julie Chen) என்பவரைக் காப்பாற்றும் நோக்கத்துடன் சீனாவுக்குப் பயணம் செய்கிறார்கள்.
அந்த இளவரசியின் பிரச்சினை Deng Tsin Qin (Bun Hay Mean) எனும் இளவரசனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத்தான். அவன் பிடியிருந்து தப்பித்து, ஆனால் அவன் பிடியில் அகப்பட்ட தன் தாயையும், நாட்டையும் மீட்கவும் Asterix & Obelix ஆகிய இருவரின் உதவியை நாடி அவர்கள் வசிக்கும் பகுதியான Gaul-க்குச் செல்கிறாள்.
அவர்களும் ஒத்துக்கொண்டு இளவரசியுடன் பயணம் செய்ய, ஆனால் சீனாவிலோ அந்த இளவரசன் கிரேக்க மாவீரர் சீசரின் உதவியுடன் இளவரசியை மீட்க வர, இந்த சின்ன படையால் மாவீரன் சீசரின் படையை எதிர்த்து வெல்ல முடிந்ததா என்பதே கதை.
கேட்பதற்கு படு சீரியசான கதை போல் இருந்தாலும் படம் முழுக்க காமெடிதான். கிரேக்க பேரரசன் சீசரை வைத்து இவ்வளவு நக்கல் அடிக்க முடியுமா என்று தெரியவில்லை.
சீசரின் மனைவி கிளியோபாட்ரா சீசரை விட்டு உடற்பயிற்சி ஆசிரியருடன் ஓடி போவதெல்லாம் செம லந்து.
தமிழில் வந்திருக்கும் இந்த படத்தின் வசனங்கள் நாம் புரிந்து கொண்டு சிரிக்க ஏதுவாக இருக்கிறது.
Philippe Mechelen, Julien Hervé ஆகியோர் எழுதிய இந்த சாகச நகைச்சுவைக் கதையில், Asterix ஆகப் படத்தை இயக்கிய Guillaume Canet-டும், Obelix ஆக Gilles Lellouche-சும் நடித்துள்ளனர்.
நகைச்சுவையும் ஆக்ஷனும் கலந்து குடும்பத்தோடு பார்த்து மகிழ ஏற்ற வகையில் இந்த கோடை விடுமுறையில் மே 12 ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகி இருக்கிறது.
நகைச்சுவைப் பிரியர்கள் Asterix மற்றும் Obelix இன் அட்டகாசங்களைக் குடும்பத்துடன் தியேட்டரில் கண்டு மகிழலாம்.